Thursday, May 28, 2009

பிரபாகரன் தெய்வமானார்...

“”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.
- உங்களை எல்லோரும் அசாத்திய திறமைகளை உடையவர்கள் என்கிறார்களே என்கிற Fr.ஜெகத் காஸ்பரின் கேள்விக்கு வி.பு தலைவர் பிரபாகரன் சொன்ன பதில் இது என காஸ்பர் அவர்கள் எழுதியிருக்கிறார்.

உண்மையில் ஈழத்தில் இந்திய ராணுவம் வெளியேறிய பின்னர் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த அல்லது பள்ளிக் கூடம் போக ஆராம்பித்த ஈழத்தின் புதிய தலை முறைகளுக்கு பிரபாகரன் ஒரு சாகசக் காரந்தான். மேலே பார்க்கமல் இளநீர் குலையில் இருக்கும் ஒற்றை இளநீர் காயை சுட்டு வீழ்த்துவார். கண்ணைக் கட்டிக் கொண்டு குறிதப்பாமல் சுடுவார். அவர் துப்பாக்கியை சுழற்றி லாவகமாக எடுக்கும் ஸ்டைலே தனி.....இந்தியாவோடு சண்டை பிடிப்பமெண்டு அவர் முன்னமே தீர்கதரிசனமாக சொன்னார்... இப்படி இன்னோரன்ன கதையாடல்களை நாங்கள் சின்ன வயதில் இருந்தே கேட்டு வந்திருக்கிறோம்.

பிரபாகரனை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்களையும் எழுத்துகளையும் அமைப்புகளையும் கடந்தகாலம் முழுவதிலும் கண்டாகிவிட்டது. இந்த அமைப்புகள் அனைத்தினதும் பேச்சுகளில் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் எம் மக்கள், இன்னமும் இன்னமும் வலிய துயரத்தில் இருகிறார்கள். அந்த மக்களை பிராபகரன் கை விட்டரா அல்லது அந்த மக்கள் பிரபாகரனை கைவிட்டு வர நினைத்தார்களா என்ற வதங்களுகெல்லாம் விடைதேடிக் கொண்டிருகிறார்கள்.

எனக்கு இப்போது யாருடைய தொலைபேசியை எடுப்பதற்க்கும் பயமாக இருக்கிறது. பிரபாகரன் அல்லது தலைவர் உயிரோடு இருக்கிரார இல்லையா என என்னைத் தொலைத்தெடுக்கும் கேள்விகள் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. நான் முன்னெப்போதோ பத்திரிகைக்காரனாக இருந்ததன் அவதி இது. யாரவது என் தொலைபேசியை ஒட்டுக் கேட்பானோ என்கிற அநியாயப் பயம் வேறு.

கொஞ்ச நாள் , இணையம் வானொலி தொலைக்காட்சி எல்லத்தையும் பார்த்து நம் நண்பர்கள், ஊடக வட்டம் எல்லாத்திலையும் துலாவி சில பதில்களை வைத்திருந்தேன். இப்போது புலிகளின் அதிகார பூர்வமானவரே சொல்லி விட்டார். கிழக்கில் இப்போது மீதமிருக்கும் போராளிகளின் அரசியற்பிரிவுப்
பொறூப்பாளரே சொல்லியிருக்கிறார். ஆனால் இன்னமும் சந்தேகம் தீரவில்லை.

ஒரு தலைவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்கிற குழபத்திற்க்கு முடிவே இல்லை. தலைவரால் கைவிடப்பட்ட மக்களையும் மறந்து அவர்கள் முகம்களில் படும் துயரையும் மறந்து. ..இதுவரை ஐநா...ஐநா என்று தவங்கிடந்த தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பையும் மறந்து இன்னமும் அவர் வருவாரா...இருக்காரா என்ற ஏக்கம் கடுப்பைக் கிளப்புகிறது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டும் போராடினால் போதாது உலகின் பலமான சக்திகள் ஆசியாவிலேயும் இருக்கிறது என்பதையும் எங்கள் போராட்டத்தின் பெரும் பலவீனத்தையும் ஐநா வில் இலங்கைக்கு அதாரவாக முடிந்த தீர்மானம் சொல்லியிருக்கிறது. மக்கள் போரட்டமல்ல இது ராணுவப் போராட்டம் என்பதையும் உலகின் கவனத்தை நமது அரசியலால் திருப்பாமல் ராணூவ பலத்தாலும் வன்முறையினாலும் திரும்ப வைத்ததன் விளைவு இது . பலஸ்தீனம் ,கியூபா...என சீனாவோடும் இந்தியாவோடும் ரஸ்யாவோடும் இணைந்து இலங்கையை ஆதரித்த நாடுகள் அதிகம்.

இப்ப எனது பதிவின் தலைப்புக்கு வருவம். பிரபாகரன் இருக்கிறார இல்லையா எனக் கேட்கபடும் கேள்விக்கான எனது விடை அவர் தெய்வமாகிவிட்டார். தெய்வம் இருக்கிறது என நம்புபவர்கள் நம்பலாம் தெய்வம் இல்லை என நாத்திகம் பேசுபவர்கள் பேசலாம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை தெய்வம் நம் கண்ணூக்கு தெரியாத ஒன்றுதான். எமது நாளந்த காரியங்களில் நாம் யாரும் கடவுளைத் தேடிக் கொண்டிருபதில்லை. சைவத்தையும் தமிழையும் சில சாபகேடுகளையும் வளர்த்த தமிழனுக்கு இது தெரியாதா என்ன?

கருணா 2004 இலேயே சொல்லி விட்டார் பிரபாகரன் எங்களுக்கு கடவுள் போன்றவர் என்று.அவரை நாங்கள் தெய்வமாக மனதில் இருத்தி கிழக்கில் தனியான ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்துகிறோம் என்பதே கருணா என்கிற பூசாரியின் முதல் அறிக்கை. ஒரு போராளியை கடவுளாகி அவரைச் சுற்றி மந்திரம் ஓதும் பூசாரிகளும் பஜனை பாடுபவர்களும் பக்தர்களும் உருவானது துரதிஸ்ட வசமானதுதான். பிரபாகரன் சொன்னது போல யாருடைய தலையிலாவது பிரச்சனையைக் கட்டி விட்டு தப்பித்து போய் வேடிக்கை பார்ப்பது தமிழனின் இயல்பு. அதுக்கு அவனுக்கு சரியான ஆள் கடவுள்தான்.

பிரபாகரனை அதிசயம் செய்யக் கூடிய கடவுளாகவே பலரும் பார்த்தனர். ஆனால் இப்போது கடவுளைக் காணவில்லை. ஆக கடவுளை தேடுவதை விடுத்து மக்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பம். கடவுள் வரவேண்டிய நேரத்தில் வந்து தொலைக்கட்டும். இப்போது அந்த கடவுளோடும் அவர் சேனையோடும் இருந்து காத்தருளிய மக்களை காப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும்.

வன்னியில் இருந்து இப்போது முகாம்களில் இருக்கும் மக்கள்தான் கடந்த முப்பது வருட கால போராட்டதின் முதுகெலும்பாக இருந்தவர்கள். இவர்கள் வன்னி மண்ணின் குடிகள் மட்டுமல்ல. தமிழீழ நிலப்பரப்பின் அத்தனை பகுதிகளிலும் மட்டக்களப்பு அம்பாறை உட்பட எல்லா இடங்களையும் சேர்ந்த மக்கள். இவர்களுக்கான உடனடி உதவிகளும் மனிதாபிமானப் பிரச்சனைகளுமே உடனடியானது. ஒரு போராளி இயக்கத்தின் அழிவுக்கு பின்னால் எழும் பெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்பை பெற்ற அரசியல்மயப் பட்ட சமூகமாக நாம் இல்லாததால் முதலில் அந்த மக்களைக் காப்பதற்க்கு ஏதாவது செய்ய வேண்டும்.

புலிகளுக்கு எதிரான பேச்சு என்பது இந்த மக்களிடம் எழுவது இயல்பானது. இது துயரத்திலும் ஆற்றாமையிலும் கோபத்திலும் கையறு நிலையிலும் இன்னும் பலவிலும் எழும். இதனையே வாய்ப்பாக்கிக் கொள்ள பல சக்திகள் காத்திருக்கின்றன.இப்படி நான் கூறூவதன் அர்த்தம் எல்லரும் புலிகளை ஆதரியுங்கள் அவர்கள் புனிதர்கள் என்பதாகது. ஆனால் இதனை வைத்து பிழைப்பு நடத்தவும் போராட்டத்தை மழுங்கடிக்கவும் நினைப்பவர்களுக்கு சோரம் போய்விடக்கூடாது.

இப்போது 13 ம் திருத்தச் சட்டம் என்ர ஒன்றுமில்லாத ஒரு தீர்வை முன்வைக்கவே அரசாங்கம் விரும்பவில்லை. (13ம் திருத்தச் சட்டம் அப்பிடீன்னா என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள் அதுபற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்)13 ம் திருத்தம் தொடர்பாக த.வி கூட்டணி 1987 இல் முன் வைத்த சில திருத்தங்களை இன்று வரை அரசு கண்டு கொள்ளவே இல்லை. அதை வலியுறத்த இப்போதைய அதன் தலைவர் தயாராக இல்லை அவருக்கு வடக்கு முதலமைச்சர் ஆகுவது மட்டுமே கனவு. இதுல டக்ளஸ் க்கு எங்கே ஈபிடிபி யைக் கலைகச் சொல்லிவிடுவார்களோ என்ற கவலை. பிரேமதாசவால் புலிக்கு எதராக தமிழர் தரப்பாக உருவாக்கி சந்திரிக்காவால் வளர்க்கபட்ட அந்த அமைப்பு இப்போதைக்கு மகிந்தவுக்கு தேவையற்றதுதான். மற்றது கருணா நம்பிக்கையோடு இருக்கிறார் ததேகூ கிழக்கு எம்பிக்களில் பலர் தன்னோடு அரச கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்று.

இவர்கள் யாருக்கும் தமிழருக்கான தீர்வுபற்றிய எந்த திட்டமும் கிடையாது. மகிந்த என்ன சொல்லுகிறாரோ அதுதான் திட்டம். இந்தியாவும் கிட்டத்தட்ட இந்த கட்சிகளின் நிலையில்தான் இருக்கிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் திட்டம் எதுவும் இல்லை. அப்பிடியிருந்தாலும் அதை அவர்கள் சொல்லும் வாய்ப்பு இல்லை. அடுத்து என்ன பேசுவதெனக் கேட்பதற்க்கு ஆளும் இல்லை.

இந்த நிலையில் அரச கட்சி எம்பிகளுக்கு மட்டுமே வவுனியா முகாம்களுக்குள் அனுமதி வழங்கப் படுகிறது. மற்ற எம்பிக்கள் மக்களைச் சந்திக்க வேண்டுமானால் மஹிந்தவின் அரச கட்சியின் இணைய வேண்டும் என்று வெளிப்படையாக அந்த எம்பிக்களிடம் சொல்லப் படுகிறது.அரச தொலைக் காட்சிகள் மட்டுமே மக்களைச் சந்தித்து நிகழ்ச்சி செய்ய முடியும். அல்லது அரசின் சாதனைகள் மட்டுமே தனியார் உட்பட எல்லா ஊடகங்களும் பேச வேண்டும் என்கிற பல நடை முறைகள். தமிழ் தினசரிகளே மகிந்தவின் சேதியை மட்டுமே பிரசுரிக்கின்றன.

அதாவது இலங்கை ஒற்றைக் கட்சியின் அதிகாரத்தினை நோக்கி போய்க் கொண்டிருகிறது. பேருக்கு வேண்டுமானால் ரணில் கட்சி நடதாலாம் என்ற நிலை உருவாகும். தமிழ் கட்சிகளே இல்லை என்ற நிலை வரும். இந்த ஆபத்தான அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டிய நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

11 comments:

மயாதி said...

முதல் தமிழர்கள் யாரவது மிஞ்சுகிறார்களா பார்ப்பம்...
பிறகு தமிழ் கட்சி பற்றி யோசிப்பம்.

butterfly Surya said...

பதிவிற்கு நன்றி.

காலம் said...

அடுத்த கட்டம் என்னவென்று கதைக்கலாம்தானே!

Anonymous said...

ஒரே நாடு.. ஒரே இனம்.. ஒரே கட்சி..
//தான்நினைத்ததை செய்து முடிக்கும் வல்லமையை மகிந்த பிரபாகரனிடமே படித்திருக்கவேண்டும். இன்னும் நிறைய அவர் பிரபாவிடம் படித்திருக்கிறார்.

லக்கிலுக் said...

இயேசு மட்டும்தான் உயிர்த்தெழுந்து வரவேண்டுமா என்ன? மாவீரர் தினம் வரைக்கும் மட்டுமாவது பொறுப்போம்.

//தமிழ் தினசரிகளே மகிந்தவின் சேதியை மட்டுமே பிரசுரிக்கின்றன.//

மகிந்த அடுத்த தேர்தலில் நூறு சதவிகித வெற்றியைப் பெறக்கூடிய சாத்தியம் தெரிகிறது :-(

பதி said...

//ஆபத்தான அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டிய நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை//

ஆம். ஆனால், அப்படி யோசிப்பவர்கள் அனைவருக்கும் துரோக முத்திரை குத்த ஒரு கூட்டம் இணையத்திலே சுற்றுகின்றது...

உணர்ச்சிவசப்படலில் நம்மை மிஞ்சவும் யாராவது இருக்கின்றார்களா??

சோமி said...

இப்போது உணர்ச்சிப் பிளம்பாக வெடிக்கும் பலருக்கும் நிதானம் தேவை. பல பதிவுகளில் உணர்ச்சியும் ஆவேசமும் மிதப்புமே இருக்கிறது.

ஒரு விசயம் நண்பர்களே, இதுவரை காலமும் புலியெதிர்ப்பு அரசியல் செய்தவர்கள் இப்போதும் புலியையும் அதன் தோல்வியையும் மையப் படுத்தி அடுத்த கட்ட அரசியலை ஆரம்பித்து விட்டார்கள். புலியில் மையங் கொள்ளாத அவர்களின் மாற்று அரசியல் எதுவென்பதும் அவர்கள் இதுவரை என்ன செய்து கொண்டார்கள் என்பதும் இப்போது அம்பலத்தில் நிற்கிறதே.

Anonymous said...

புலியில் மையங் கொள்ளாத அவர்களின் மாற்று அரசியல் எதுவென்பதும் அவர்கள் இதுவரை என்ன செய்து கொண்டார்கள் என்பதும் இப்போது அம்பலத்தில் நிற்கிறதே.//

உண்மைதான். agree

அதேவேளை புலியில் மையம்கொண்ட அரசியல் என்ன செய்தது என்பதையும் சுருக்கமாக விளக்கவும்.

Anonymous said...

விடுதலைப் புலிகள் கெரில்லா தாக்குதல்களை நடத்தலாம்: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கண்டும் காணான் said...

சீனா , பாகிஸ்தானை விட , தொப்புள் கொடியுறவு என் நம்பியிருந்த இந்தியாவின் செயல்பாடுகள்தான் எம்மை 1000 ஏவுகணைகளாக தாக்குகின்றன பிறர் முன் தலைகுனிய வைக்கின்றன

Anonymous said...

நமது மாத்து அரசியல்
http://bala-balamurugan.blogspot.com/2009/05/blog-post_746.html