Wednesday, May 20, 2009

தலைவனைத் தேடும் தமிழர்களே...

எப்போதுமே எழுதிவிட்டு தலைப்பிடும் எனக்கு எழுதுவதற்க்கு முன்பே இந்தலைப்பு வந்து உட்காந்து கொண்டது. தமிழனுக்கு எப்போதுமே தலைவன் தேவை. பாட்டுடைத் தலைவர்களின் வீரமும் காதலும் கலந்த வரலாறுகளில் கதைபேசி கதைபேசி கடந்து போவது எமக்கு பிடித்தமானதுதான். சின்ன வயதில் பாட்டி சொல்லும் கதைகளில் இருந்து விசயகாந்த் படங்கள் பார்க்க ஆரம்பித்த நாட்கள் வரை நமக்குள் கதாநாயக ஆதிக்கம் கால் வைக்கிறது. அப்படி ஒரு கதா நாயகர் என பிரபாகரனை வரிந்து கட்டியிருக்கும் என் தமிழ் உறவுகள் நிறைய நிறைய. எங்கள் எல்லோரும அவர் வீரத்தை ஏற்படுத்தும் தலைவர்தான்.

5 ம் வகுபில் தமிழீழ தேசம் வேண்டாமா? என 1990 இல் நான் பேச்சுப் போட்டியில் பேசியதக்கு பரிசாக பிரபாகரனின் படம் ஒன்றும் 100 ரூபாவும் தந்தார்கள்.தலைவர் ஒரு புலியின் பக்கத்திலோ சிறுத்தையின் பக்கத்திலோ அமர்ந்திருக்கும் படம் அது.அந்த படமோ 100 ரூபாவோ இல்லை 5 ம் வகுபில் படித்த அந்த பெட்டை என்னை கண்வெட்டாமல் பார்த்தோ என்னை அத்தனை குசிபடுத்தியிருக்கவில்லை. அந்த படத்தின் பின்னால் அண்ணை கையெழுத்துப் போட்டிருந்தார். அந்த கையெழுத்துக்காக என்னை எல்லோரும் மொய்த்துக் கொண்டார்கள். மின்னியல் பிரதியெடுக்க முடியாத அந்த நாளில் மெல்லிய ரிசு பேப்பர் வைத்து அதை பிரதியெடுத்தவ்ர்கள் எத்தனை பேர்.

நான் யாழ்ப்பாணத்தை விட்டு மட்டக்களப்பு வரும் போது எனது புத்தகங்களில் அதிக பக்கமுடைய கணிதப் புத்தகத்திற்குள் மறைத்து வைத்து இராணுவ பரிசோதனைகளைத் தாண்டி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்புக்கு அந்த படத்தை கொண்டு வந்தேன். அம்மா பாடம் சொல்லித்தரும் போது அந்த படம் தவறி விழ பதறியடித்து அதனைக் கிழித்து தீ வைத்தர் என் அம்மா. ஆமி செக் பண்ணும் போது பிடித்தால் குடும்பத்தோட பிடிச்சுக்கொண்டு போவாங்கள் எண்ட பயம்தான். நான் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடவில்லை . வாரம் தண்டி படிக்காமல் அடம்பிடித்தேன். அண்ணை எங்களுக்கு தலைவன், கதாநாயகன் ,ஒரு உந்துதல் எல்லாமும் தான்.

எங்களின் அண்ணையை பின்னாளில் எல்லோருமே தலைவர் என விழித்தார்கள். தலைவர் என்பது இன்னும் மிடுக்காக இருந்தது. நாங்கள் உரத்து சொன்னோம் தலைவன் இருக்கிறான் கலங்காதே தமிழீழம் பிறக்கும். அவன் காலத்தில் அதை வெல்வோம். அந்த தலைவன் தேசிய தலைவன் ஆகினான்.எங்களின் தலைவன் முன்னால் மேதகுவும் வந்து விழுந்தது. ஒரு மாதிரி அரசு( Demo State) உருவானது. இந்த இடைவெளியில் நம் தலைவர் தலமையிலான இயக்கம் ஒரு அரச படைகளுக்கான வளம் கொண்ட கொரில்லா போராட்ட அமைப்பு என்பதை நம்மில் பெருந்தொகையோர் மறந்தே போனோம்.

தமிழீழ அசரின் அரச படைகளாகவும் அந்த மாதிரி தேசதின் அதிபர் எங்களின் அண்ணை எனவும் உருவாகிப் போனது.வெளிநாடுகளில் இருந்து நிதியும் உள்நாட்டில் வரியும் கிடைக்கப்பெற்றது. மக்களும் சில பல போராளிகளுமே இந்த மதிரியை நம்ப ஆரம்பித்தார்கள்.இப்போது அந்த தேசத்தின் வீழ்ச்சியில் எல்லோருமே துவண்டு போயிருக்கிறோம்.

இதைபோல கடந்த 25 வருடங்களாக ஒரு திரைப் படத்தைப் போல பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டுக் காரருக்கு இந்த கிளைமாஸ் காட்சிகள் அதிர்ச்சியைத் தருகிறது. நிதானம் தவறுகிறார்கள். நெடுமாறன் அய்யா போன்றவர்களின் மிக நிதானமான பதில்கள்தான் அவர்களை ஆசுவாசப் படுத்துகிறது.

இந்த பின்னணியில் இப்போது எல்லோரும் தலைவரைத் தேடுகிறார்கள். நானும்தான் தேடுகிறேன். பிரபாகரன் என்கிற பெயரும் அந்த முகமும் உருவமும் ஒவ்வொரு தமிழனையும் உறுதி கொள்ளச் செய்யும், வீரம் கொள்ளச் செய்யும். வீழ்ந்தவனை எழச் செய்யும் மந்திரமாகும். இது எங்கள் வரலாறும் வாழ்க்கையும் இயல்பும். இது தமிழனின் இயல்பு . தலைவனின் வீரத்திலும் , கதைகளிலும் அவன் பார்வையிலும் வீறு கொண்டெழுவது எங்கள் பாரம்பரியம். வெளிநாடுகளில் இசங்கள் படித்தவர்கள் புதுக் கருத்தியல்களால் புது அறிவு பெற்று மறுகணமே எம் மறவர்களையும் மக்களையும் மாற்றுவதற்க்காக அவர்கள் செய்யும் இணையப் புரட்சிகளில் இவை மாறிவிடப் போவதில்லை.


- - -


இப்போது தமிழனின் அரசை வீழ்த்திய வீர மன்னனாகவே ராஜபக்சே இருக்கிறார். துட்டகைமுனு எல்லாள மன்னை வீழ்த்தியது போல் என என் சிங்கள நண்பன் குறுஞ் சேதி கொழும்பில் இருந்து அனுப்புகிறான். (எல்லாளன் படை என்ற பெயரில் புலிகளின் குழுவொன்று யாழ்ப்பணத்தில் உலாவியதையும் கெமுனு படையணி சிங்கள ராணுவத்தில் இருப்பதையும் வைத்து இதைச் சொல்ல வில்லை) அவர்கள் இன்னமும் மன்னர் காலத்தில்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நாட்டை வென்று ஒரே தேசமாக்கும் அந்த கணத்தில் எதிரி தேசத் தலைவன் அல்லது மன்னன் போரில் மாண்ட சேதி அவசியமாகிறது. எதிரி நாட்டு மன்னை போர்களத்தில் கொன்று வீழ்த்திய வெற்றிச் செய்தியை அறிவிக்கிறார்கள்.

எதிரி மன்னனை நேரடியாகக் கொல்வது வஞ்சகமகக் கொல்வது துட்டகைமுனு போல் தன் தாயைக் காட்டி மயக்கிக் எல்லாளனை கொன்றது போல.பெண்களை காட்டிச் சபலமுறச் செய்து கொல்வது என மன்னர் காலத்தில் பல முறைகள் இருபது போல இப்போது ஏதோ ஒரு உடலை பிரபாகரன் உடல் என கூறுவது கூட புது முறையாகலாம். ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்கிற சாதாரண தயாரிப்பாளரால் கமலை புஸ் மாதிரி ஆக்க முடியுமானால எத்தனை பேரிடம் காசு வாங்கிப் போர் நடத்தும் இலங்கையால் முடியாதா என்ன. அந்த உண்மை பொய்களுக்குள் நாம் சிக்குப் பட வேண்டாம்.

பல தேசங்களாக பிரிந்திருந்த இலங்கைத் தீவை பண்டாரவன்னியைக் கொன்றும் கண்டி மன்னனை கபடமாகக் கவிழ்த்தும் இறுதியாக ஒன்றுபடுத்தி ஒரே தேசமாகினான் ஆங்கிலேயன். இப்போதுதான் இலங்கை விடுதலை பெற்றதாக சிங்களவன் கூக்குரலிடுகிறான். அப்படியெனில் ஆங்கிலேயன் வெளியேறியதும் இலங்கை இரண்டாக பிரிய தொடங்கியது என்பதை அவன் ஒத்துக் கொள்கிறான். அப்படி பிரிந்த தேசம் நம் தலைவன் தலைமையில் இரு நாடானது என்று அவன் நம்புகிறான். இப்போது அந்த தேசத்தை வென்றாகிவிட்டது.அந்த மக்களை அடிமையாக்கிவிட்டோம் என்பது அவனிடம் ஒளிந்து தெரியும் சேதி.

இதே முல்லைத்தீவு சமர்க்களத்தில் பண்டார வன்னியனை ஆங்கிலேயருக்கு காக்கை வன்னியன் இனம் காட்டினான். அப்போது நெடில் கா செய்த வேலையை இப்போது குறில் க செய்திருக்கிறது. அப்படியானல் இது பிரபாகரனின் உடலா? நம் தலைவன் போய் விட்டானா? உங்களுக்கு வாய்த்த தலைவன் எங்களுக்கு வாய்க்கவில்லையே என முத்துக்குமார் சொன்னானே அந்த தலைவனும் போய்விட்டானா? அழுகுரல்களும் பதட்டமாகும் குரல்களும் கடந்த 3 நாட்களாக என்னை உலுப்பிக் கொண்டேயிருந்தன. நானும் அழுது தெளிந்து பின்னர் மீண்டும் அதிர்ந்து இல்லை இது அவர் இல்லை என தன் நம்பிக்கை ஊட்டி ஆராய்ந்து ஆரய்ந்து.......

- - - -

கோடி தமிழர்கள் தலைவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்திய மற்றூம் உலக உளவுத் துறையை விட அதிகமாக இந்திய தமிழர்களும் உலகத் தமிழர்களும் பிரபாகரனைத் தேடுகிறார்கள். உண்மையில் பிரபாகரனின் மரணம் தமிழனின் மீது வீழும் அடி மிகப் பெரும் அடி. மண்சுமக்காமல் மதுரையில் அடிவாங்கிய சிவபெருமானுக்கு விழுந்த அடி எல்லோருக்கும் விழுந்தது என்ற கதை போல இதுவும் எல்லோருக்கும் விழுந்த அடிதான். அதாற்காக அவரைத் தேடுவதில் நேரத்தையும் வளத்தையும் எங்கள் சிந்தனையையும் செலவிடுவது சிங்களவன் எதை எதிர்பார்த்தானோ அதைப் பரிசளிப்பதாகவே முடியும். இதுவரை தான் செய்த கொலைகளையும் இப்போது செய்வதையும் இனிச் செய்யப் போவதையும் சிங்கள அரசு இதன் மூலம் திசை திருப்பி விடும்

இது புலிகளின் வீழ்ச்சிதான். அவர்களின் அரசியல் இராணுவ பலகீனத்தின் வீழ்ச்சிதான். கொரில்லா அமைப்பு தன்னை அரசாக ஆசுவாசப் படுத்திக் கொண்டதின் வீழ்ச்சிதான். நாம் எல்லோரும் புலிகள் என்ற போராளி அமைப்பை எமது தமிழ் தேசிய ராணுவமாக பார்த்து நமக்காக போராடச் சொன்னதன் விளைவால் உருவான வீழ்ச்சிதான். ஒன்று திரளாமல் இதுவரை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சாவின் விளிம்புக்கு மக்களும் நம் போரளிகளும் வந்த போது அவசரமாக கை கோர்த்தோமே....அதன் விளைவுதான்...இத்தனை இழப்புகள்.

எத்தனை தளபதிகள், எத்தனை என் வயசு தோழர்களும் தோழிகளும். அக்காக்கள் அண்ணன்கள். நான் சமாதான காலத்துஇல் சந்தித்த எத்தனை அறிவாளிகள். ஆழுமை மிக்க போராளிகள். அய்யோ.......வெள்ளைக் கொடி ஏந்த வைத்து கொன்றார்களே. குப்பி கடித்தார்களே, எரிந்து மாண்டார்களே, இரசாயங்களில் உடல் வெந்தார்களே....கடைசி நான்கு நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள். பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் என கணக்கு வைக்கிறார்கள். இன்னமும் ஒளிந்து ஒளீந்து வெளியே வருபவர்களைக் கொன்று புதைக் கிறார்கள். விரும்பியும் விரும்பாமலும் போர் களத்தில் நின்ற எத்தனை பேர் மாண்டு போயிருக்கிறார்கள்.

போராளிகளையும் போரட்டத்தையும் முப்பது வருடாமாகக் காத்த மக்கள் அதன் பலனை இப்போது கம்பி வேலிகளுக்குள் அனுபவிக்கிறார்கள். நாங்கள் கம்பியூட்டர் முன்னால் இருந்து தலைவரைத் தேடிக் கொண்டிருகிறோம். தலைவரும் அவரின் சில தளபதிகளும் போராளிகளும் ஏதோ ஒரு காட்டில் இருக்கக் கூடும். அது இப்போது எதற்க்கு இப்போது ஏன் தலைவரையும் புலிகளையும் தேடிக் கொண்டிருக்கிறோம். திரும்பவும் அவர்களைப் போராடவிட்டு வேடிக்கை பார்க்கவா? ஈழத்தமிழர் பிரச்சனையின் அரசியலை தமிழ் நட்டு மக்களிடம் எடுது சென்று தெளிவூட்ட முடியாத தமிழக தமிழர்கள் தங்கள் சக தமிழர்களின் வீரதில் கிளுகிளுப்புக் கொள்ளாவா?

நாம் பேசிக் கொண்டிருக்கும் கணம் வரை அழிவின் துயரின் விழிம்பில் நிற்க்கும் தமிழனை காப்பாற்ற ஐநா தலைமையில் படை அனுப்பி இலங்கையில் சனநாயகத்தை உறுதிப் படுத்தி தமிழர்கள் இனியும் இரத்தம் சிந்தாமல் பாதுகாக்க தமிழகத்தில் ஓட்டு அரசியலுக்காக பிழைப்பு நடத்தும் கட்சி அரசியல் தாண்டிஒன்று படவேண்டும். உலகம் பூராவும் இருக்கும் தமிழர்கள் அணி திரண்டாக வேண்டிய இறுதிக் கணம் இது. உலகத்தால் தடை செய்யப்பட்ட இயக்கம் இல்லை தலைவனைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியானால் இனி உலகம் எதற்காக தாமதிக்கிறது. ஈழத் தமிழர்களின் விருப்பதை கேட்குமாறு இன்னும் வீச்சோடு போராட வேண்டாமா.

தனக்காக போராடிய இயக்கமும் தலைமையும் முற்றாக அழிந்த போது வீதிக்கு வந்து 2 வருடங்கள் வீட்டுக்குள் போக்கமல் வீதிகளிலேயே இருந்து விடுதலை பெற்ற அல்ஜீரியர்களைப் போல் போராடும் வலுவில் இலங்கையில் உள்ளவர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் துப்பாக்கி முனைகளில் இருகிறார்கள். அவர்களுக்கு சாப்பாடு போடக்கூட ஆளில்லை. இப்போது வதை முகாமில் இருக்கும் அந்த மக்கள் போராளிகளுக்கு வருசக்கணக்கில் சாப்பாடு போட்டவர்கள். உங்கள் அனைவரையும் வீரம் பேச வைத்தவர்கள். இப்போது அவர்களுக்கு என்ன செய்யப் போக்கிறோம்.

புலிகள் இருக்கும் வரை பாசிசம் பேசிய சிலதுகள் இப்போது புலிகள் தோற்றதுக்கு என்ன காரணம் என ஆரச்சி நடத்துகிறார்கள். தாங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்கள். அடேய் ........ போய் வவுனியாவில நிக்கிற சனத்தை பாருங்கடா.....புலிகளை வலிமையாக ஆதரித்தவர்கள் போக முடியாது என்பது யதார்த்தம். நீங்களாவது போய் அவர்களுக்காக காசு சேருங்கள் உதவுங்கள். வணங்கா மண் கப்பலுக்காக சேர்த்த பொருட்களை வவுனியா முகாமில் உள்ள மக்களுக்கு கொடுக்க உலக வல்லரசுகளின் அனுமதியைக் கேளூங்கள்.

இலங்கையில் அடுத்து நிகழப் போவதுதான் பெரும் கோரம் , அழிவு,கொடுமை
இதுவரைதான் நாம் தடுத்து நிறுத்தவில்லை. புலிகள் மக்களை தடுத்து வைதிருக்கிறார்கள் என்றார்கள். இப்போது..?

தயவு செய்து அனைவரும் வீதிக்கு வரவேண்டிய கடைசித் தருணம் இது. இந்தியாவுக்கு வெளீயே இந்திய விடுதலைக்காக போராட்டம் நடத்திய நேதாஜிதானே தலைவனுக்கு முன்னுதாரணம்.அப்போது இலங்கையில் அடுத்து நிகழப் போகும் அழிவைத் தடுக்க அணிதிரள ஏன் தாமதம். முதலில் முகாம் களில் இருக்கும் 3 லட்சம் தமிழர்கள் அடுத்து ஒட்டு மொத்த ஈழத்தமிழர்கள்.

மகிந்தவின் அடுத்த அடக்குமுறை தாக்குதல்கள் சிங்களவர்கள் பலரையும் கூட உலகத்தை நோக்கி அவலக் குரல் எழுப்ப வைக்கப் போகிறது. உலகை அழைத்து வருவதற்க்குச் சரியான அரசியல் வேலையைச் செய்வோம். தலைவனைத் தேடாமல் தமிழனைக் காக்க அரசியல் போராட்டம் செய்து உலகை நம் பக்கம் இழுத்து வருவோம்.

21 comments:

ஜனகன் ஞானேந்திரன் said...

//தயவு செய்து அனைவரும் வீதிக்கு வரவேண்டிய கடைசித் தருணம் இது.//

உரிமைப்போராட்டத்தை ஒரு தலைவன் பிறந்து வந்து வழிநடத்தத்தேவையில்லை, நாமே தலைமையேற்று நடத்தும் கடமை இருக்கிறது என்பதை உங்கள் பதிவு அழுத்திச்சொல்கிறது.

பிரபாகரன் படங்களும் புலிக்கொடிகளும் ஒருதரப்புக்கு -நீங்கள் உள்ளிட- உத்வேகம் தருமென்றால், இன்னொரு தரப்புக்கு அது போராட்டத்தில் இணைந்துகொள்வதற்கே தடையாக அமையக்கூடும் என்ற யதார்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இங்கே புலம் பெயர் தேசங்களில் நடக்கும் போராட்டங்களை உள்ளிருந்து பார்க்கின்றபோது இது வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது.

தமிழர் உரிமைக்காக சேர்ந்து போராட, குரல் கொடுக்கத்தயாரான சிங்களவர்கள், முஸ்லிம்கள், மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் இணையவிடாமல் தடுப்பது இந்த குறியீடுதான்.

சிங்கக்கொடிக்குக்கீழ் தமிழர்களால் சேர்ந்து போராட முடியாத நிலை எப்படி ஏற்படுகிறதோ அதேபோன்று இன்னொரு தரப்புக்கு ஒடுக்கு முறைசின்னமாக இருக்கும் புலிக்கொடிக்கும், பிரபாகரன் படத்துக்கும் கீழ் ஒன்றுபட முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இந்தியாவிடம் பணம் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித புலிச்சின்னத்தின் கீழ் ஒரு முஸ்லிம் வந்து போராடவில்லை என்று எதிர்பார்ப்பது கொடுமையானது.

பேச்சுவார்த்தை என்று அழைத்துவிட்டு "போட்டுத்தள்ளிய" புலிச்சின்னத்தின் கீழ் வந்து மாற்றுக்கருத்தாளர்கள் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என்று அழைப்பது முரண்பாடானது.

பஸ்களில் புலிச்சின்னம் வைத்த குண்டுகளில் உறவினர்களை இழந்த சிங்களவர்கள் அந்தச்சின்னத்தின் கீழ் நின்று குரல் கொடுப்பர் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.

பழசையெல்லாம் அவர்கள் மறந்துதான் ஆகவேண்டும், புலிச்சின்னத்தின் கீழ் முஸ்லிம்கள், மாற்றுக்கருத்தாளர்கள், சிங்களவர்கள் வந்து போராடத்தான் வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது சிங்கக்கொடிக்குக்கீழ் தமிழர்களை அணிதிரளச்சொல்லும் மகிந்தவின் கூற்றுக்கு எந்தவகையிலும் வேறுபட்டதல்ல.

ஈழத்தமிழரின் அரசியற்போரடடம், கூடுமானவரை எல்லோரையும் எதிரியாய்ப்பார்த்து தனிமைப்பட்டுப்போவது என்ற புலிகளின் அரசியற்பார்வைக்கு மாற்றாக, கூடுமானவரை நேச சக்திகளைத்திரட்டிக்கொண்டு எதிரியைத் தனிமைப்படுத்துவது என்ற அரசியலுக்கு முன்னேற வேண்டும்.

அதற்கு ஒட்டுமொத்த மனித விரும்பிகளும் வீதிக்கு வரவேண்டும். வெறும் சொல்லளவில் அல்ல, செயலளவில் நான் வருகிறேன் உங்களுடன் எனது நாட்டு வீதிக்கு.

ஆனால் புலிச்சின்னத்துக்கும், புலிக்கோசத்துக்கும், பிரபாகரன் படத்துக்கும் மாற்றாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் கோசங்கள் முன்வைக்கப்படவேண்டும்.

இந்த யதார்த்தத்தினைப் புரிந்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Sri Rangan said...

//புலிகள் இருக்கும் வரை பாசிசம் பேசிய சிலதுகள் இப்போது புலிகள் தோற்றதுக்கு என்ன காரணம் என ஆரச்சி நடத்துகிறார்கள். தாங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்கள். அடேய் ........ போய் வவுனியாவில நிக்கிற சனத்தை பாருங்கடா.....புலிகளை வலிமையாக ஆதரித்தவர்கள் போக முடியாது என்பது யதார்த்தம். நீங்களாவது போய் அவர்களுக்காக காசு சேருங்கள் உதவுங்கள். வணங்கா மண் கப்பலுக்காக சேர்த்த பொருட்களை வவுனியா முகாமில் உள்ள மக்களுக்கு கொடுக்க உலக வல்லரசுகளின் அனுமதியைக் கேளூங்கள்.////மகிந்தவின் அடுத்த அடக்குமுறை தாக்குதல்கள் சிங்களவர்கள் பலரையும் கூட உலகத்தை நோக்கி அவலக் குரல் எழுப்ப வைக்கப் போகிறது. உலகை அழைத்து வருவதற்க்குச் சரியான அரசியல் வேலையைச் செய்வோம். தலைவனைத் தேடாமல் தமிழனைக் காக்க அரசியல் போராட்டம் செய்து உலகை நம் பக்கம் இழுத்து வருவோம்.//சோமி,முதலில் அரசியல்-போராட்டம்,விடுதலை என்பதைப் புரிந்து எழுதும்.இதைவிட்டு அதே புலிப்பாணி எழுத்துள் காலத்தை ஓட்டினால்,இன்றைய அழிவுக்கான அன்றைய தவறுகள்,மீளவும் விட்டு முழுமொத்த மக்களையும் கொன்றுவிடுவீர்கள்.தலைவனதும் அவருக்குப் பின்னால் உள்ள வர்க்கத்தினதும் தவறுகள்தான் இன்று கொத்துக்கொத்தாக மக்களை அழியவிட்டது-போராளிகளை நாசமாக்கியது.மக்களைக் குறைகூறுவதைவிட்டு,உமது மண்டையைக் கசக்கும்.


புலிகள் உலகத்தை நம்பித்தான் இன்று மக்களுக்கும் தமக்கும் பாடைகட்டியவர்கள்.இதே உலகத்தை நம்பாது சொந்து மக்களை நம்பிப் போராட்டத்தை மக்கள்மயப்படுத்துவதற்கு என்னவழியெனச் சிந்திக்கவும்.இதைவிட்டுத் தலைமைவழிபாடுகளுக்குள் புதையுண்டுபோன வரலாற்றில் காவுகொடுக்கப்பட்ட உயிர்களை"மாவீர்ர்"ஆக்குவதில் நேரத்தைப் போக்க இப்படி எழுதத்தான் வேணுமென்றால்-இது நேரமல்ல!


இந்த அவலங்குறித்து-தவறுகள் குறித்து விமர்சனத்தோடு போருக்குள் சிக்கிய மக்களது வாழ்வைச் செப்பனிடுவதற்கு வழிகள் காணமுனையும்.சும்மா மனம்போன போக்கிகல் அரசியலையும் உலக நாடுகளையும் புரியவேண்டாம்.இதுதானே எதிரியையே நண்பனென உங்கள் தலைவரைக் கடந்த மாவீரர் தினத்தில் பேசவைத்தது?


"புலிகள் தோற்ற காரணம் ஆராச்சி நடாத்துகிறார்களாம்" எனும் ஏளனந்தான் இன்று உம்மை இப்படி எழுத வைக்கிறது.

இணையத்தில் அரட்டையடித்த உங்கள் புசத்தல்களின் உச்சம் இப்போது மாபெரும் வரலாற்றுத் தவறையும்,அழிவையும் வெறும் மனிதாபிமான தன்னார்வ உதவிக்குள் குறுக்கியபடி ஐ.நா.துருப்புகளைத் தேடுதோ?

எதற்கு?

மீதமுள்ள மக்களையும் ஒடுக்கிச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கும் உலகக் கம்பனிகளுக்கும் அடிமையாக்கி வேடிக்கை பார்க்கவா?


இன்றைய புலிகளது அழிவு என்ன வெறும் ஏளனத்தோடு மற்றவர்களைத் துரோகி எனச்சொல்லவா?


நெடில்-குறிலெனப் புலம்புவதைவிட்டுப் போராட்டத் தவறுகளைச் சுயவிமர்சனங்செய்து, முன்னேறப் பாருங்கோ.அல்லது,வாயையும்-கையையும் இறுக மூடியபடி இரும்.தலைவர் நாளை நிச்சியம் வருவார்.


"நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும்"என்றதை மாற்றி,இனிப்பாடுங்கள் "நம்புங்கள் நாளை தலைவன் வருவான்"என்று.


சுத்த மடையர்களாக இருப்பதற்கு உமது எழுத்து உதவும்.


ஸ்ரீரங்கன்.

Anonymous said...

Janakanin karutil thelivullatu, aanaal intha sree ranganin unrvo oru ratha veri piththa mahindavin cinthanikku oppanathu

urchin said...

ஜனகனின் கருத்தே எனதும்.
மற்றது சோமீ, தமிழர் தமிழர் என்று எல்லாரையும் ஒன்றுதிரட்டி அண்ணைக்கு முன்னால் நிறுத்தும் போது, எவ்வளவு மோசமாய் என்னை (கவனிக்க என்னை மட்டுமே) `தமிழ்` என்பதற்குள் இருந்து வெளியேற்றுகிறீர்கள் என்பது உங்களுக்கு இன்னும் விளங்கின பாடில்லை.
என்னை மாதிரி இன்னும் எத்தினை சனம் இருக்கு எண்டது தெரியும்.
எல்லாரையும் கொன்றுபோட இது அக்காலமில்லையே, நிராசைகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

urchin said...

அடுத்த பகிடி புலம்பெயர்ந்து மேற்கில் கல்விகற்ற பிறகு தான் இந்த மாயை விட்டுப்போகிறது என்கிற உங்களுடைய கதை.
நான் யாழ்ப்பாணத்தில (அதுவும் மூடுண்ட) இருக்கும் போது என்ன எழுதினன் எண்டுறதில இருந்து நான் மாறவேயில்லை... உங்களுடைய அண்ணை, எனக்கு ஒருபோதும் அண்ணையாக இருந்தது இல்லை... நான் Broken Palmyrah படிக்காத காலங்களிலும் கூட அந்த ஆள் எனக்கு அண்ணனில்லை. Speak for yourself...

தலைவன் இருக்கிறான் said...

ம்.ஹூம்... ஒருக்காலும் தமிழன் உருப்பட மாட்டான்... சரியான தலைமையொன்றே தமிழனை வழிநடத்தும்.. தத்துவம் படிக்கவெல்லாம் தமிழனுக்கு நேரம் கிடையாது. இந்த ஸ்ரீரங்கன் குரூப் எல்லாத்துக்கும் இடங்கொடுத்த ம.க.இ.க. குரூப்பும் இப்போ புலிப் பாசிஸப் பேச்சை விட்டுட்டு, சிங்களப் பாசிசம் பேசி ஆள் சேர்க்க முனையுதுகள்....

ஆமாம்.. நம்புகிறோம் நாளை தலைவன் வருவான்.. அவன் வருவதற்கான பாதையை நாங்கள் போடுவோம்... நம்புகிறோம் நாளை தமிழீழம் பிறக்கும். நெம்புகிறோம் அப்போது ஆதிக்கம் தெறிக்கும்.

கவிஞர் காவடி said...

சோமி.. உங்களது இந்த கட்டுரைக்கும் சிறிரங்கன் எழுதிய இறுதிகட்டுரைக்கும் உணர்வுத்தளம்சார்ந்து ஒரு பெரியவேறுபாடும் கிடையாது. இங்கே சிறி இட்ட பின்னூட்டம் அவரது கட்டுரைக்கும் பொருந்தும்.

தலைவர் நிச்சயம் வீடியோவில் உரைதருவார் என கட்டுரை எழுதிய சிறி பிறகு இங்கே வந்து

//"நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும்"என்றதை மாற்றி,இனிப்பாடுங்கள் "நம்புங்கள் நாளை தலைவன் வருவான்"என்று.


சுத்த மடையர்களாக இருப்பதற்கு உமது எழுத்து உதவும்.//

என எழுதுகிறார்.

பாவம் அவர்என்ன செய்வார். அவர் அடிக்கிற விஸ்கி.. தலவரை கையெடுத்து கும்பிடுகிறது. பிரான்டியோ போடா பாஸிஸ்ட்டு என்கிறது.

அவரோ விஸ்கியையும் பிரான்டியையும் மாறிமாறி அடிக்கிறதால் நமக்கும் குழப்பம்.

ஆகவே சிறியை லூசில விடுங்க..

முடியலை.. said...

//பாவம் அவர்என்ன செய்வார். அவர் அடிக்கிற விஸ்கி.. தலவரை கையெடுத்து கும்பிடுகிறது. பிரான்டியோ போடா பாஸிஸ்ட்டு என்கிறது.

அவரோ விஸ்கியையும் பிரான்டியையும் மாறிமாறி அடிக்கிறதால் நமக்கும் குழப்பம்.//

:)

அதே சந்தேகம் தான் எனக்கும்...

அப்படியே, யாரவது இந்த "அது எனது மூஞ்சி" கவிதைக் கதைக்கும் எது காரணமென கேட்டுச் சொல்லுங்கள்....

http://srisagajan.blogspot.com/2009/01/blog-post_17.html

Anonymous said...

//ஆகவே சிறியை லூசில விடுங்க..//

அவர லூசாத்தான் வைச்சிருக்கோம்.

லக்கிலுக் said...

:-(

குற்றவுணர்ச்சி நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது

Anonymous said...

சகோதரரே எழுத்தை விமர்சனம் செயுங்கள் தயவு செய்து தனி நபர் விமர்சனம் தவிருங்கள். நன்றி !!!
ராஜ்குமார்

சோமி said...

தனிமனிதன் மீதான தாகுதல்களுக்கான இடமும் நேரமும் இதுவல்ல. சிறிரங்கனின் கருத்துக்குரிய மாற்று கருத்தை சொல்வதும் அல்லது அவர் சும்மா புலம்புகிறார் என்றால் அதனை ஓரங்கட்டி விட்டு உங்களின் கருத்தைப் பதிவு செய்வதும்தான் இப்போது தேவையானது. கடந்தகாலங்களின் தவறுகள் நம்மில் பலர் உணர்ந்ததுதான்.இப்போது இணையப் புரட்சியாளர்கள் உட்பட அனைவரும் உஅடனடியக அணிதிரள்வதும் மக்களைக் காப்பாற்றுவதும்தான் அவசியமானது. மற்றது புலிப் பாசிசத்துகு எதிராக கடை நடத்திய அமைப்புகளின் தோழர்களுக்கு மட்டும்தான் வவுனியா முகாம்களுக்குள் அனுமதி...எப்படியாவது பட்டியால் வாடும் அந்த மக்களைப் பாதுக்காக வேணூம்.

ஜனகன் சொல்லிய விடையம் ஆரயப்பட வேண்டியதுதன். புலிக்கொடி பிடிப்பவர்கள் பிடிக்கட்டும் மற்றவர்கள் தங்களுக்கு பிடித்தமான கொடியுடன் வரட்டும் நோக்கம் ஒன்றுதானென்றால் பல வழிகளிலும் முடிந்ததைச் செய்யலாம்.ஒரே கொடியில் அணிதிரள்வது என்பதைவிட ஒரே நோக்கத்தில் அணிதிரள்வதுதான் உடனடித்தேவை

போடியார் said...

பாசிசம்....ஈழத்து தலித்துகளின் பிரச்சனைதான் முதல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். புலிகள் சாதி வெறி பிடித்தவர்கள் என்றெல்லாம் உளறிக் கொட்டிய கூட்டம் இப்ப என்ன புடுங்கி கொண்டிருக்கிறது?

Anonymous said...

aiyoo pavaam

சோமி said...

லக்கி குற்ற உணர்ச்சி வைத்து இப்போது நாம் என்ன செய்துவிட முடியும் உங்களைப் போன்றவர்கள் மக்களை அணிதிரட்ட வேண்டும் அரசியல் மயப் படுத்தவேண்டும். நானும் நீங்களும் மாறீ மாறீ குற்ற உணர்ச்சியைப் பகிர்ந்து கொண்டு அடுத்தும் ஒரு குற்றத்தை செய்து விடக் கூடாதல்லவா?

sanjayan said...

சகிப்புத்தன்மையும், விமர்சனத்தை உள்வாங்கும் தன்மையும், ஆயுத கலாச்சாரமற்றதும், மனிதாபமும், சுயநலமற்றதுமான தலைமை வேண்டும்.

சோமி said...

சயந்தன் மீண்டும் ஒரு தலமையை எதிர்பார்க்காமல் தன்னெழுச்சியான ஒரு போராட்டம் வெடிக்கட்டும். குழப்பத்தையும் அதீத உணர்வுகளையும் தாண்டி வழிநடக்க வேண்டிய போராட்டம்

Anonymous said...

ஃஃஒன்று திரளாமல் இதுவரை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சாவின் விளிம்புக்கு மக்களும் நம் போரளிகளும் வந்த போது அவசரமாக கை கோர்த்தோமே....அதன் விளைவுதான்...இத்தனை இழப்புகள்.ஃஃ

Anonymous said...

இன்றைய காலநிலைக்கு மிகவும் அவசியமான பதிவு.

தமிழ்மணத்தில் எழுதி காலத்தை வீணடிக்காது வீதியில் இறங்கியாக வேண்டும்.

இன்றெல்லாம் ஒரு சில வானொளி தொலைக்காட்களில் மக்கள் தொடர்பு கொண்டு எல்லோரும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவேணும் போராட வேணும் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்படி அடுத்தவைக்குச்சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் தான் போய் போராட வேண்டும் என்று சொல்பவருக்கும் தோன்றவில்லை. நிகழ்ச்சி நடத்துபவருக்கும் தோன்றவில்லை. நான் நம்புகிறேன் நீங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தான் இந்த பவிதை எழுதியிருப்பீர்கள் என்று.

எமது கடமை நாங்கள் உயிரோடு இலங்கையில் இல்லாமல் இருப்பது அங்கு இருக்கும் மக்களை காப்பாற்ற என்ற உணர்வோடு அனைவரும் போராடுவது தான். நேற்றுவரை ஏன் மறுபடியும் எமக்காக போராடிய போராளிகளுக்கும் எமது மண்ணில் உயிர்விட்ட ஆயிரம் ஆயிரம் மக்களுக்கும் நாம் செய்கின்ற ஒரே ஒரு நன்றிக்கடன்.

என்றும் அன்புடன்
கமல்

sanjayan said...

யதார்த்தமானது.

ஏற்க கசப்புடையது என்றாலும் யதார்த்தமுணராமல் வாழ்தலாகாது

supernantha said...

ஆமாம்.. நம்புகிறோம் நாளை தலைவன் வருவான்.. அவன் வருவதற்கான பாதையை நாங்கள் போடுவோம்... நம்புகிறோம் நாளை தமிழீழம் பிறக்கும். நெம்புகிறோம் அப்போது ஆதிக்கம் தெறிக்கும்