Sunday, May 24, 2009

ஷோபாசக்தியின் F இயக்கமும் நம் இயக்கமும்..

இந்த தலைப்பில் இருக்கும் இரண்டுக்கும் அல்லது நான் எழுதப்போகும் விடையத்துக்கும் எனக்கும் நேரடியாக தொடர்பில்லது விட்டாலும் எனக்கு இப்படி ஒரு தலைப்பிடுவதே பிடித்தமாக இருந்தது. ஷோபாவில் இருக்கும் கிளுகிளுப்பும் இயக்கதில் இருக்கும் வன்முறை நிறைந்த கிளுகிளுப்பும் மசாலாப் படங்களை சின்ன வயதில் இருந்து பார்த்த எனக்கு இப்படியொரு தலைப்பிட வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியிருக்க கூடும்.ஆனால் நான் இதுவரை ஷோபா குறித்து பாலுமகேந்திராவிடமோ இயக்கம் குறித்து வட இந்திய நண்பர்களிடமோ பேசியதில்லை.

நான் இப்படிப் பேசாததுக்கு என்னுடைய இருப்பு பற்றிய அக்கறையும் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்ளும் மனோநிலையும் காரணமாக இருக்கலாம். மற்றது இது நமக்கு புதுசில்லைத்தானே. இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைக்குள் புகுந்து சுடும் போது ராஜிவ் வாழ்க இந்திரா வாழ்க என குரல் எழுப்புவதும். இயக்கம் வந்தாலும் இராணுவம் வந்தாலும் கை கட்டி தேனீர் கொடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதுவெல்லாம் கொடுத்து உபசரிப்பதும் நமது பண்பாடுதானே.

சின்ன வயதில் இருந்தே யாரிடம் எது பேச வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப்பட தலைமுறை நாங்கள். யாழ்ப்பாணத்தில் ஒன்பது பத்து வயதுகளில் எங்களுக்கு சினிமாப் பாடல்கள் அவ்வளவாகத் தெரியாது இயக்கப்பாடல்களை சினிமாப் பாடல்களைப் பின்னாளில் எப்படிக் கிளுகிளுப்போடு படித்தோமோ அதே கிளுகிளுப்போடும் அதற்க்கு மேலதிகமாக அதீத உணர்ச்சியோடும் படித்தோம். கிளுகிளுப்பே உணர்ச்சி மயமான மாயைதானே எனச் சொல்லும் கூட்டங்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.

"புலிக்குப் பயந்து பிரேமதாச கோட்டைய விட்டாரே...." என்ற பிரபலமான பாடல் நான் யாழ்ப்பாணத்தை விட்டுவெளியேறும் நாட்களில் அதிகம் படித்து திரிந்த பாடல்கள்.பெடியன் போறபோக்கு சரியில்லை இப்படியே இருந்தால் இன்னும் நாலு வருசத்தில இயக்கத்துக்கு போடுவான் எனச் சொல்லிக்கொண்டிருந்த அம்மம்மாவின் பேச்சைக் கேட்டோ என்னவோ யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் முடிவை அம்மா எடுத்தார்.அப்பா மட்டக்களப்பில் வேலை செய்து கொண்டிருந்தார் என்கிற காரணமும் இருந்தது.

நான் மட்டுமல்ல நிறையப் பேர் நீண்ட பயணத்தின் முடிவில் இராணுவ எல்லைக்குள் வந்தோம். என்னைப் போல பிள்ளையள் எல்லாரிட்டையும் ஊரில இருந்து புறப்பட முதலே இரு வாராமாக திரும்பத் திரும்ப சொன்ன விசயம் வாவுனியா தண்டினா இங்க பாடுற பாட்டுக்களைப் பாடக்கூடாது. ஆமி பாடச் சொல்லிக் கேட்டால் தேவாரம் பாடிக் காட்டுங்கோ எண்டு ஒருவாரம் தேவாரமும் திருப்புகழும் படாமாக்க விட்டர்கள்.இராணுவப் பகுதிக்கு வந்து 10 வருடங்களுக்குப் பிறகு அமைதி ஒப்பந்தத்தின் பின்னர் இயக்கப் பகுதிக்குப் போகும் போது என் நினைவில் தென்னிந்திய சினிமா பாடல்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தன.வன்னியில் இன்னமும் இயக்கப் பாடல்களையே போட்டுக் கொண்டிருந்தார்கள்.

90களின் ஆரம்பத்திலே எமக்கு அறிவு தெரிந்த நாட்களில் இயக்கம் என்ற பெயருக்கு எங்களிடம் ஒரே அர்த்தம்தான் இருந்தது. அப்போது விஞ்ஞானப் பாடப்புத்தகத்தில் இயக்கம் என்ற சொல் வரும் போது எமது நினைவில் வரி ஆடை அணிந்த உருவங்கள் வந்து போகும். பின்னர் மட்டக்களப்பில் சிறிசபாரத்தினம் என்ற ஒருவருக்காக நினைவஞ்சலி தெரிவித்தது ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களின் அடிப்பாகத்தில் இயக்கம் என்ற எழுத்துக்கள் தெரிந்தன.அப்போதுதான் வேறு இயக்கங்களும் இருப்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். பின்னர் 7 அல்லது 8 ஆம் வகுப்பு படிக்கும்போது ஈபீ ..நாய்பீ.. என்றூ ரைய்மிங்காக சொல்லுவது எங்கள் காதுகளில் வந்து விழும். ஆனால் நாங்கள் இதுபோன்ற குழுகள் பற்றி அறிவதில் நாட்டமற்றிருந்தோம்.

புளட் ,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற அமைப்புக்களின் பெயர் பலகைகள் அதிகம் காணக் கிடைக்கும் பின்னர் ஈபிடிபி பெயர் பலகையும் காணக் கிடைத்தது. இவை தவிர மட்டக்களப்பில் தேர்தல் நடந்த போது ஈரோஸ் என்ற பெயர் அறிமுகமானது. இந்த நாட்களில் இயக்கம் நடத்து சில பல தாகுதல்களின் செய்திகள் படிக்க கிடைக்கும். மற்றம் படி மாத்தையா..ஸ்கூல் மாத்தையா ரியூஸன்...என்று சொல்லியபடி சோதனை சாவடிகளைக் கடந்து கொண்டிருந்தோம்.இந்த மாத்தையா புலிகளின் பிரதிதலைவராக இருந்து மரண தண்டனைவிதிக்கப்பட்ட மாத்தையா இல்லை. சார், ஐயா போன்றவற்றிற்க்கு ஒப்பான மரியாதையான சிங்கள வார்த்தை. இந்த நேரத்தில் ராசிக் குழுதான் இயக்கத்துக்கு அடுத்ததாக எங்களிடத்தில் புகழ் பெற்றிருந்தது.

பொறு ரசிக் குரூப்ல இரிகிற மாமாட்ட சொல்லித் தாரன் என சில பையன்கள் பள்ளீயில் வைத்து மிரட்டுவார்கள். சண்டை பிடித்தால் இப்பிடிப் பயமுறுத்துபவர்களிடம் நாம் எச்சரிக்கையாகவே இருப்பம். ரசிக் குரூபில தன் மாமாவைக் கொண்டிருக்கும் பையனுக்கு இடவேளை நேரத்தில கன்ரீன் கவனிப்புகள் இருக்கும். நம்ம கூட அவன் இருந்தால் மற்றவனுகள் பயப்படுவானுகள் என்பதால் அவனை அடிக்கடி கவனித்தாக வேண்டியிருந்தது.

ராசிக் குரூபில் யார் வேணுமெண்டாலும் சேரலாம். மட்டக்களப்பு வாவியை நோக்கி ஒருதரம் துப்பாக்கியால் சுட்டுக் காட்டினால் போதுமானது, இராணுவச் சீருடையும் எட்டாயிரம் ரூபா சம்பளமும் துப்பாக்கியும் தருவார்கள் என எனது நண்பர்கள் சொல்லுவார்கள்.இந்த நிலையில், புளட்,ரெலொ,எபி.ஆர்.எல்.எப் போன்றவர்களை மற்ற இயக்கம் எண்டு அழைக்க ஆரம்பித்தோம். மட்டக்களப்பில் இயக்கம் ,மற்ற இயக்கம் ,ராசிக் குழு இது மூன்றும் எங்களிடம் பிரபலமான வார்த்தைகள்.

இந்த நேரத்தில் காமினி திஸ்ஸாநாயக்க செத்துபோகவும் தினமுரசில் அற்புதன் ஒரு தொடர் எழுத ஆரம்பித்தார். தினமுரசு ஒரு வாரப் பத்திரிகை. முதன் முதலில் கலர்புள்ளாக வந்த பத்திரிகை. தினமுரசு முதல் இதழில் இருந்து எங்கள் வீட்டில் வாங்கி வந்தார்கள்.என் நண்பர்களிடமும் பிரபலமான ஒரே பேப்பர் அதுதான்.நடுப்பக்கத்தில் கலராக வரும் சினிமா கிசு கிசு வில் இருந்து அரசியல் கட்டுரைகள், செய்திகள் ,இராணூவ ஆய்வுகள், கல்லாறு சதீஸ் கதைகள் வரை உண்மையென்று நம்பிப் படித்துக் கொண்டிருந்தோம்.

தினமுரசு அளவில் கறுப்பு வெள்ளையில் இன்னொரு பத்திரிகையும் வந்தது அதை என் நண்பன் ஒருவனின் அப்பா வாங்கிப் படித்துவிட்டு அலுமாரியின் மேல் வைத்து விடுவார். ஒளித்து வைக்கிறாரே என்ற ஆர்வத்தில் அதை எடுத்துப் படித்தோம் அதன் பெயர் சரிநிகர். நடுப்பக்க கிசுகிசுகளும் இயக்கம் பற்றிய கிளூகிளுப்புகளும் அதில் அவ்வளவாக இல்லை என்றாலும் எதோ ஒரு ஆர்வதில் படித்தோம்.

ஒரு நாள் நண்பனின் அப்பாவிடம் கேட்டம் ஏன் இதை மேல வைக்கிறீங்கள் என்று... இயக்ககாரரின் பேப்பர் என்றார். இயக்கமா மற்ற இயக்கமா என அவர் சொல்ல வில்லை. தினமுரசும் இயக்ககார்ட பேப்பர்தான் எனவும் சொன்னார். அதேபோல மற்ற இயக்கங்கள் இருகிற ரோட்டில போகும் போது 5 ரூபாவோ பத்துரூபாவோ வாங்கிப் போட்டு அவர்களும் பத்திரிகைகள் கொடுத்தார்கள். நாங்கள் ஐஸ்பழம் வாங்கி சூப்பிக் கொண்டும் போகும் வயசு என்பதால் எங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். இப்போது சின்ன சைஸ் பேப்பரெல்லாம் இயக்கங்கள்தான் அடிக்குது எண்ட முடிவுக்கு வந்திருந்தோம்.

இது இப்படியிருக்க எங்களுக்காக தினமுரசில் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரையென்ற வராலற்று தொடரை அற்புதன் ஆரம்பித்தார்.அதாவது எங்களுக்கா எண்டால் ஆயுதபோராட்டத்தை ஆரம்பித்தவர்களுக்கா இல்லை ஆயுதப் போரட்டதில் பிறந்தவர்களுக்காக. அந்த நேரதில் தற்கொலைத் தாக்குதலில் பலியான காமினியின் கொலையை இயக்கம்தான் செய்தது எனப் பேசிக் கொண்டார்கள். அல்பிரட் துரையப்ப கொலையை யார் செய்தது என்பதில் ஆராம்பித்து நகரும் தமிழீழ வரலாற்று கிளுகிளுப்பு தொடருக்காக ஒவ்வொரு வியாழனும் நாங்கள் காத்திருந்தோம்.தினமுரசு வியாழனில்தான் கடைக்கு வரும்.

நான் ஒருவேளை சம்மந்த சம்மந்தமில்லாமல் எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிரன் என எனக்கே அலுப்புத் தட்டுகிறது. ஆனால் எங்களுரில் எப்போதும் பத்திரிகையாளர்கள் சம்மந்த சம்மந்தமில்லா விசயங்களை எழுதிக் கொண்டிருபார்கள். அதில் ஆகச் சிறபானது ராணுவ ஆயுவுகள். இராணுவம் பரந்தன் தாண்டி புதுகுடியிருப்பு போகும் வரை எழுதிய சில ஆய்வாளர்கள் ஆய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.

முக்கிய எழுத்தாளர்....ஷோபாசக்தியின் F இயக்கம் என்ற கதையில் ஒரு இடத்தில் 1986இல் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார். காரை நகரில் இருந்து முன்னேறி வந்த ராணுவம் ஊறாத்துறை அந்தோணியார் கல்லூரியி முகாமிட்டது.அந்த இராணுவத்தை ஒரு இயக்கம் சுற்றி வளைத்தது . 20 பெடியள் சிறிய ஆயுதங்களை வைத்து சண்டையிடுகின்றனர். ஒரு பெடியன் செத்து விழுகிறான். மேலதிக கொமண்டோகளை ஹெலியில் கொண்டுவந்து இறக்குகிறார்கள்.புதிய கொமாண்டோக்கள் முன்னேறிக் கடும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இப்போது முற்றுகைக்குள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிக்கத் தொடங்கினர் ஆனாலும் அந்த இயக்கப் பெடியள் பின் வாங்காமல் சண்டையிட்டனர். அவர்கள் சண்டையிட்டு சாவதென தீர்மனித்திருக்க கூடும் என சொல்லும் அந்தகதையில் சிறிது நேரத்தில் இன்னுமொரு இயக்கம் வந்து மேலதிகமாக இறக்கப்பட்ட கொமாண்டோக்களை நோக்கி கடுமையாக தக்குதல் நடத்தி நிலை குலையச் செய்தது. மற்றுமொரு இயக்கம் ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்த இயக்கத்தோடு இணைந்து தாக்குதல் நடத்தி காயப்பட்ட பெடியன்களைக் காப்பாற்றுகிறது என்பது போல் அந்தகதையில் வருகிறது. தோள் கொடுத்த தோழர்களுக்கு நன்றி என ஒரு இயக்கம் துண்டுபிரசுரமும் வெளியிட்டதாம்.

ஆனால் ஷோபாசக்தி இந்த சம்பவம் நடந்ததாகச் சொன்ன வருடத்திலும் அதற்க்கு சில வருடங்கள் முன்னும் பின்னுமாக பிறந்த எங்கள் தலை முறைக்கு ரணுவத்திற்க்கு எதிராக போராடியது என்றால் ஒரு இயக்கத்தைத்தான் தெரியும். எங்களில் பெரும்பாலானவர்களுக்கு தினமுரசுதான் வரலாறே சொன்னது. களத்தில் நின்ற சில பேரை சந்தித்து பேசிய போது சொன்னார்கள் நீங்கள் வாசித்த அந்த தொடரை நாங்களும் வாசித்தோமென. ஒரு வேளை அவர்களும் அந்த கிளுகிளுபூட்டும் தொடரை ஆயுதப் போராட்ட வரலாறு என வாசிதிருக்ககூடும்..

இப்போது 20 பேர் அன்று சண்டையிட்ட ஆண்டிலும் அதற்க்கு முன்னும் பின்னுமாக பிறந்த ஆயிரமாயிரம் பேர் எங்கள் தலைமுறையில் இராணுவத்திற்க்கு எதிராகப் போராடினார்கள்.முள்ளிவாய்க்காலில் முற்றுகை வரும் வரை போராடினார்கள் தப்புவதற்க்கான வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டே போராடினார்கள். முன்னைபோலவே போராடியே சாவதென அவர்கள் முடிவெடுத்திருக்க கூடும் அல்லது அவர்களின் தளபதிகள் முடிவெடுத்திருக்க கூடும்......

செய்தி 1 : இலங்கை இராணூவம் போரில் வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை அதிபர் நாடு திரும்பினார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிபரைக் கட்டித்தழுவி முத்தமிட்டு வரவேற்றார்.

செய்தி 2 : கர்ணல் கருணா அல்லது அமைச்சர் வி.முரளிதரன் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டினார்

செய்தி 3 : புளட் சித்தார்த்தன், ஈபிஆர் எல் எப் சிறிதரன், தவிகூ ஆனந்தசங்கரி ஆகியோர் இந்திய தூதுவர்களைச் சந்தித்து விடுவிக்கப்பட மக்களை மீளமர்த்துவது குறித்து பேசினர்.

13 comments:

Chayini said...

ம்.. மாற்று இயக்கங்களின் பெயர்கள் சொல்லி அந்த நேரம் நடந்த சம்பவங்களை அம்மா என் சிறு வயதில் சொல்லும் போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.. அம்மாவுக்கு ஒண்டும் தெரியாது.. இவங்களையெல்லாம் போய் எங்கட இயக்கம் போல் இருந்தவங்க என்று சொல்லி சொல்றாவே என்று அப்ப கோவப்பட்டிருக்கிறேன்..
என் அப்பா அவங்களுக்கு உதவியிருக்கிறார் என்று அம்மா சொன்னதைக் கேட்டு கவலைப்பட்டிருக்கிறேன்.. அதற்காகவே அப்பா சரியில்லை.. நல்ல காலம் இங்க இல்லை என்று நினைச்சு ஆறுதல்பட்டிருக்கிறன்.. ம்..

அட சோமிதரனும் என்னைப் போல இருந்திருக்கிறார் என்று கடந்த பதிவும் இதுவும் சொல்லுது..

fvg said...

உங்களால் முடியும்,முகமுடி போட்டு திரிபவரின் உண்மை முகங்களை உலகுக்கு
காட்டுங்கள்,இந்த பணி காலத்தின் தேவை

சோமி said...

சாயினி எனக்கும் உங்களுக்கும் மட்டுமில்ல நமது தலமுறையில் நிறய பேரோட நிலமை இதுதான்...தவறுகளை திருத்திக் கொண்டு உரிமைகளை வெல்வோம்.

ஐயா யாரு முகமூடியோடு உள்ளார்கள் என உங்களுக்கு தெரிந்தவர்கலைச் சொல்லுங்கள்

Anonymous said...

இப்படி சுற்றிவளைக்காமல் புலிகள் தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டதாக சொல்லுங்களேன்

Anonymous said...

//போராடியே சாவதென அவர்கள் முடிவெடுத்திருக்க கூடும் அல்லது அவர்களின் தளபதிகள் முடிவெடுத்திருக்க/

:(

போடியார் said...

துயர்தரும் கணங்கள்...தப்ப முடிந்தவர்கள் தப்பித்து வந்து தப்பிக்க முடியாதவர்களை செத்து மாயுமாறு போராடச் சொன்னோம்.

Anonymous said...

யார் ஷோபாசக்தி ?

தமிழ்நதி said...

"நான் ஒருவேளை சம்மந்த சம்மந்தமில்லாமல் எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிரன் என எனக்கே அலுப்புத் தட்டுகிறது. ஆனால் எங்களுரில் எப்போதும் பத்திரிகையாளர்கள் சம்மந்த சம்மந்தமில்லா விசயங்களை எழுதிக் கொண்டிருபார்கள்"

சோமிதரனும் ஒரு பத்திரிகையாளர்தானே... சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவது, கொஞ்சம் பெரிய வார்த்தைகளில் சொன்னால், சுவடுகளைத் தொடர்வது அல்லவா:)

"யார் ஷோபாசக்தி?"

ஈழத்தமிழர்களை அரசியல்பாதையில் வழிநடத்துபவர்... இது உங்களுக்குத் தெரியாதா நண்பரே:)))))))))

Anonymous said...

////இப்படி சுற்றிவளைக்காமல் புலிகள் தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டதாக சொல்லுங்களேன்/////

அந்த நேரம் அதிகாரப் போட்டியால ஒருத்தருக்கொருத்தர் அடிச்சாங்கள். புலிகள் தனிய ஒரு இயக்கம் இருந்தாத்தான் சரி எண்டு நினைச்சது சரி தான்.
ஈரோஸ் தவிர மிச்சமெல்லாரும் தங்கட சுயநலத்துக்காக இந்தியன் ஆமியோடயும் பிறகு இலங்கை ஆமியோடயும் சேந்தாங்கள். மக்களுக்காகப் போராட முடியாவிட்டால் மக்களுக்கு எதிரானவங்களோட சேர்ந்தது எப்படி சரியாகும். நிச்சயமாக மக்களுக்காகப் போராட வெளிக்கிட்டிருந்தால் அவங்கள் ஆமியோட சேந்திருக்க மாட்டாங்கள்.
புலிகள் ஒண்டும் செய்யாமல் எல்லா இயக்கத்தையும் விட்டிருந்தா இப்ப நடந்தது முதலே நடந்திருக்கும். ஒரு சரியான போராட்டத்துக்கு ஒரு அமைப்பு தான் சரி. அதைத்தான் மகிந்தவும் செய்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகளை பலமிழக்கச் செய்தது, மீடியாவ கதைக்கேலாமச் செய்தது, உலக நாடுகள் சொன்னதை கேட்காமல் எல்லாம் செய்தது... சர்வாதிகாரம் தானே.. அதனால தானே அவரால யுத்தத்தில இப்ப வெல்ல முடிந்தது.
சும்மா புலிகளைக் குற்றம் சொல்றத விட்டிட்டு உருப்படியா ஏதாவது செய்யுங்கோ. இல்லாட்டி சும்மாயிருங்கோ. குறைந்தது அப்ப என்ன நடந்தது எண்டு சரியாத் தெரிந்து கொண்டாவது கதையுங்கோ.. கருணாநிதி மாதிரிக் கதைக்காதேங்கோ....

Jana

லக்கிலுக் said...

சுவாரஸ்யமாகப் படித்தேன். ஆனால் பதிவு சொல்லவரும் பூடகச்செய்தி என்னவென்று புரியவில்லை. ஒருவேளை ஈழத்தமிழர்கள் ‘இருவர்’ படம் பார்த்தால் இதுபோல உணர்வு வருமோ?

சோமி said...

பூடகச் செய்திகள் வெளிப்படையானவைதான். எனக்கு இருவர் படம் பிடித்த்ரிஉந்தது என்பதற்க்கும் கருணாநிதிக்கும் எந்த சம்பந்தமில்லை என்பது போல புலிகளின் தோல்விக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை என பொய் கூறத் தயாரில்லை.

என்ன குழப்பம் இன்னமும் நீடிக்கிறதா? குழப்பமானவைகளைக் கடந்து அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் நல்லது லக்கி.

சோமி said...

///ஒரு சரியான போராட்டத்துக்கு ஒரு அமைப்பு தான் சரி. அதைத்தான் மகிந்தவும் செய்திருக்கிறார்.//

அனானியின் கருத்தில் நிறைய உண்மை இருக்கு. புலிகள் எதை செய்தார்களொ அதையே அல்லது அதனிலும் அதிகமாகவே மகிந்த இப்போது செய்திருக்கிறார்... செய்கின்றார்.

King... said...

தினமுரசுலதான் அரசியலை அறிந்து கொண்டோம் or ஒரு வகையில் அது உதவியது...