Thursday, October 25, 2007

நிர்வாண இராணுவம்..

ஆண்குறிகளோடு அலையிற ராணுவம் எங்களுக்கு புதிசில்லை. சண்டை கோரமா நடக்கிற இந்த 25 வருசத்தில துப்பாக்கிகளை பிடிக்க மறக்கிற சந்தர்ப்பத்திலையும் தங்கடை ஆண்குறிகளை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு என்ர தோழிகளையும் அக்காக்களையும் தங்கைகளையும் அம்மாக்களையும் தேடி அலையும் கேவல ராணுவத்தை வீதியெங்கும் பாக்கிறன்.

நேற்று மன்னார் வங்காலையில நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இண்டைக்கு இந்தப் பதிவை நான் இட்டுக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில எங்கோ தமிழர் தாயகத்தின் ஏதோ ஒரு மூலையில் வெளித்தெரியாமல் வேட்டையாடப்படும் என் சக மனிதனின் என் சகோதரியின் கதறல் ஒலி என் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கோணேஸ்வரி, கிருசாந்தி, சாராதாம்பாள், தர்சினி, என்று நீளும் பட்டியல் மட்டுமே நமக்கு தெரியும். வேட்டையாடப்பட்டு தன் ஆண்குறி அடங்கியும் கோரமடங்காமல், இரத்தம் பார்க்கும் ராணுவ வேட்டைகளின் கொல்லப்பட்ட ஒரு சிலரைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம். தினம் தினம் உடலில் உயிர் இருந்தாலும் நிர்வாணமாய் அலையும் ராணுவப் பசிக்கு இரையான எத்தனை என் தோழிகளை அவர்களின் உணர்வுகளை இன்னும் எத்தனை நாள் சுமக்க போகிறோம்.

ஆண்குறியோடு அலையும் ராணுவத்திற்குள் பிரிவுகள் இல்லை. உலகின் எல்லா ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் தங்கள் பசியை அடக்க கிடைத்த ஒரே வழி பெண்கள்.

80 களின் இறுதிப் பகுதிகளில் ஒரு நாள் என் காது கேட்க என் அம்மாவிடம் பக்கத்து வீட்டு அக்கா கதறியபடி ஏதோ சொல்லி கொண்டிருந்தார். அதற்கு சற்று முன்னர் தான் இந்திய ராணுவத்தால் 3 மணி நேரமாய் என் கிராமம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அண்டைக்கு ஒலிக்க தொடங்கின அந்த கதறல் குரல் இன்னும் எனக்குள்ளை ஒலிக்குது.

சமாதானம் சமாதானம் எண்டு நாலு வருசம் ஆடின நாடகத்தில பார்வையாளராய் இருந்த எங்கடை சனம் எல்லாம் இப்ப மரணத்தின்ர பிரதான பங்காளியாய் மாறிப்போயிருக்கு. ஆனா அந்த நாடகத்தில நடிச்சவைக்கு இருக்கிற பாதுகாப்பு நாடகத்தை பாத்துக்கொண்டிருந்த சனத்துக்கு இல்லை.நாடகம் நடக்கேக்கை வெறியோடை பாத்துக்கொண்டிருந்த ராணுவம் இப்ப வேட்டையாடத்தொடங்கிட்டுது. வேட்டைக்காரனுக்கு இப்ப வேட்டை இலக்கில்லை. கைக்குள்ளை அகப்படுற எல்லாத் தமிழரின் இரத்தங்களையும் பெண்களின் உடல்களையும் ஆண்குறி ஏந்தி திரியும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் ருசிக்கத் தொடங்கி விட்டன.நாலு வருச சமாதான காலத்தில வீதியில போற எங்கடை பொம்பிளைப்பிள்ளையளை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஆண்குறி பிடித்தபடி பாத்தக்கொண்டிருந்த 'வெறிலங்கா'ப்படைகள் மன்னிக்க வேணும் "சிறிலங்கா"ப் படைகள் இப்ப தங்கள் ஆண்குறி அடக்க ஆணுறைகள் சகிதம் வேட்டையாட புறப்பட்டு விட்டன.

விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த பெண்கள் படையணிகளை உலகம் வியக்க உருவாக்கினர். வேட்டையாடும் வெறிகார ராணுவத்தை அடக்க பல வெற்றி சமர்களை நடத்தியது. ஆனாலும் இண்டைக்கும் இந்தக்கணத்திலையும் குருதிக்குள் உறைந்து போன என் அக்காளின் கோரப் பிணத்தை பார்க்கும் துரதிஸ்டம்...
என்னைக் கேட்டால் ஆயுதம் தூக்கின என்ர அக்காக்களே, தோழிகளே, தங்கச்சிகளே, முடிஞ்சால் அடியுங்கோ.. தயவு செய்து ஆண்குறியோடு அலையும் ராணுவ வெறியர்களுக்கு எங்கடை பெண்களை தேடியலைய நேரம் குடுக்காதேங்கோ..வன்னிக்குள் எல்லோரும் போய் ஒழிய முடியாத யதார்த்த சூழலில் ஓநாய்களின் காவலில் நாங்கள் வாழுகிறோம். அவர்களுக்கு பசிக்கிற போதெல்லாம் எங்கள் பெண்களை புசிக்கலாம். குழந்தைகளின் இளம் குருதி குடித்து கூத்தாடலாம். இது கோரம்..இதை பேசுகிற போது கோவத்தையும் விரக்தியையும் தவிர எதுவும் செய்ய முடியாத வெறும் கையாலாகததனம் மட்டுமே மிஞ்சி நிக்கிறது.. .

எங்கள் இணைத்தளங்களினதும் பத்திரிகைகளினதும் இடங்களை நிரப்ப , இனியும் இந்தப் படங்கள் வேண்டாம். ஐயோ.. என நாங்கள் வைக்கும் ஒப்பாரி உலகத்திற்கு கேட்பதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு இருக்கெண்டு எனக்கு தெரியேல்லை. ஒரு வேளை உலகில் நடக்கும் இந்தக் கோரங்களைப் போன்ற கோரங்களுக்குள் என் வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து வீறிட்டெழும் அலறலும் அடங்கிப் போகலாம்.

இதுக்குமேல பேச எதுவுமில்லை..

இன்னும் எத்தனை நாள் என்ரை பேனாவுக்குள்ளை இரத்தம் ஊத்தி எழுதப்போறனோ தெரியேல்லை..

இவ்வளவு நேரம் எழுதினது வார்த்தையில்லை..
என்ர வலி இது எங்கடை இனத்தின்ர வலி..


ஜனாதிபதி மகிந்தவுக்கு:தயவு செய்து உங்கடை ராணுவத்திற்கு ஆண்குறி அடக்க ஏதாவது வழி செய்யுங்கோ..இரணுவத்தினரை மட்டும் இதுக்கு குறை சொல்லேலாது.. அவையள் கூலிக்கு மாரடிக்கினம். புலிகள் மாதிரி போராளிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில இருந்து தன்ர ஊருக்கு போகேலாமல் தன்ர மனிசியை பாக்கேலாமல் விரக்தியோடை இருக்கிறவைக்கு ஆண்குறி அடக்கிறதுக்கு என்ர உறவுகளை பலியாக்க வேணாம். எதுக்கெல்லாமோ பாதுகாப்பு கவுண்சிலையோ சர்வ கட்சி மாநாட்டையோ கூட்டுறனிங்கள் இதுக்குமொருக்கா கூட்டிப்பாருங்கோ.. கொழும்பில கூத்தாடுற மேற்தட்டு வர்க்கம் பாதுகாப்பா தாகம் தணிக்குது. அங்கை பாதுகாப்பு படைக்கு வெறியெடுக்குது. அவங்களுக்கும் தாகம் தணிக்க ஒரு அமைச்சை உருவாக்கி அமைச்சரையும் போட்டு ஏதேனும் செய்யுங்கோ.. தயவு செய்து உங்களின்ர கொண்டாட்டங்களுக்கு எங்களை பலியெடுக்காதைங்கோ..

புலிகளை நிர்வாணப்படுத்தி காட்சிக்கு வைத்த வன்மம் நிறைந்த இராணுவமும்.வன்மத்தை ரசிக்க சிங்களவர்களை பழக்கப்படுத்தும் சிங்கள அரசும் தன்னைத் தானே அழித்துக்க கொள்ளும் ஒரு வன்முறைச் சமுகத்தையே உருவாக்கும்.புத்தரின் புனித அரசமரம் உள்ள அநுராதபுரத்தில் நடந்த வன்மம்>

இக்கட்டுரை மீள்பதிவிடப் படுகிறது.

Tuesday, October 23, 2007

யாழ்ப்பாணியும் மட்டக்களப்பானுமாகிய நான்.

காட்சி 1
இடம் -மட்டக்களப்பு

நான் அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.மட்டக்களப்பின் வடக்குப்புறத்தே வாழைச்சேனைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே ஏறாவூர் என்று ஒரு ஊர் இருக்கு அது பாதிக்குப் பாதி முஸ்லிம்களையும் தமிழர்களையும் கொண்ட ஊர்.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருந்த ஊடலையும் உறவையும் கொலைகளையும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சொல்லுகிறேன்.இப்போது சொல்லயிருக்கிற கதை வேற கதை.

கிழக்கிலங்கையில் ஏறாவூர் காளிகோயில் பிரசித்தமான ஒன்று.தட்டார்கள் எனப்படும் விஸ்வகர்ம குலத்தினரால் நிர்வகிக்கப் படும் அந்த கோயிலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளும் அந்த குலத்தினரின் சொத்தாக இருந்தது.அவர்களைத் தவிர யாழ்ப்பானத்தார்களே அதிகம் அந்தப் பகுதியில் இருந்தனர்.யாழ்ப்பாணத்தார் என்றால் வெள்ளாளர்தான் பெருமளவில்.பருத்தித்துறை,வியாபாரிமூலை(இது பருத்திதுறைக்கு பக்கதிலதான் இருக்கு)மற்றும் தீவக காரர்கள்தான் அதிகம்.

இந்தப் பகுதியை 4 ம் குறிச்சியெண்டும் சொல்லுவார்கள்.5ம் குறிச்சி ஏறாவூரின் அடுத்த பகுதி இதுவும் தமிழர் வாழும் பகுதி.1 ம் 2 ம் 3ம் குறிச்சிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.

அண்டைகொருநாள் பள்ளிக்கூடத்தில படித்துக் கொண்டிருந்தன். யாழ்ப்பாணி உன்னை வெட்டணுண்டா.....எனக்கு தெரிந்தவரையில் அது -----(பெயர் சொல்லாமல் விடுறன்) அக்காவின் குரல்தான்.(அவவுக்கு ஒரு 45 வயதிருகலாம்) எங்கட பள்ளிக்கூட வகுப்பறை வரை குரல் கேட்டது.காளி கோயில் திருவிழா காலத்தில் மட்டும் அவவுக்கு குரல் அடைக்கும் மற்றம் படி நல்ல குரல். இப்பிடித்தான் அடிகடி ஏதாவது சண்டை வந்தால் யாழ்ப்பாணி என்ற குரல் பறக்கும்.

மட்டக்களப்பில் உள்ள பெருமளவு பலசரக்கு கடைகளும் மொத்த விற்பனை நிலையங்களும் யாழ்ப்பாணத்தவர்களுடையதே. ஏறாவூர் அதற்க்கு அண்டிய செங்கலடி போன்ற இடங்களிலும் இதே நிலையென்பதாலும் கோயில்களில் இருந்த யாழ்ப்பாணத்து பிராமண ஐயர்களின் ஆதரவில் யாழ்ப்பானத்தவர்களுக்கு கிடைத்த முன்னுரிமையும் ஏறாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு எரிச்சலூட்டியதில் வியப்பில்லை.

இப்பிடியான சூழலில் நான் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 3 ம் வகுப்பு படிச்சுக் கொண்டிருந்தன்.(ஏறாவூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் என்றும் உண்டு இது அலிகார் மகா வித்தியாலயம் என்றும் சொல்லப் பட்டது) அப்ப நான் நல்ல கெட்டிக்காரன்?! வகுப்பில முதல் மாணவன் (இப்ப ? ). இப்படியிருக்கையில் 3ம் வகுப்பில் புதிய வகுப்பு ரீச்சருக்கு என் மீது
ஏனோ கோபம். நான் நல்ல எழுதினாலும் திட்டுவார். இப்பிடி அவவைப் பிடிக்காமலே என் மூன்றாம் வகுப்பு ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் பள்ளிக்கூடத்தில நிண்ட இலந்த மரதில இலந்தப் பழம் பறிச்சு சாப்பிட்ட 10 மாணவர்கள் மாட்டுப்பட்டம் கையும் மெய்ய்யுமாக .(இலந்தப் பழம் புளியம் பழக் கோதுபோல கோதுடைய உருண்டையான திராட்சை அளவு பருமன் உள்ள பழம் புளிப்புச் சுவை) ஆனால் என்னை மட்டும் அம்மாவைக் கூட்டிவரச் சொல்லி பேச்சும் கொடுத்தார். நாட்கள் இப்படி நகருகையில் மேலை வகுப்பு மாணவ்ர்கள் என்னை யாழ்ப்பாணி என்றும் பனங்கொட்டைசூப்பி எண்டு சொல்லுவதும் எனக்கு எரிச்சலூட்டியது. ஆனாலும் என் சக தோழர்கள் என்னை அப்பிடிச் சொன்னதில்லை.
இப்படியே எனது 3ம் வகுப்பு முடிந்த போது 4ம் வகுப்புக்கு போவதற்க்கு முதலே டிசம்பர் விடுமுறையில் படிப்பதற்க்கு பாடப் புத்தகங்கள் தருவார்கள்.அது பெரும்பாலும் முன்னர் படித்த மாணவர்களின் பழைய புத்தகங்கள்(இலங்கையில் அரசாங்கத்தினால் சகல மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகம் வழங்கப் படும்) வகுப்பில் முதலாவதாக வரும் மாணவனில் இருந்து கொடுக்க ஆரம்பித்து புத்தகம் தீரும் வரை உள்ள மாணவர்களுக்கு கொடுப்பார்கள்.ஆனால் எனக்கு கொடுக்கவில்லை.காரணம் அந்த ரீச்சருக்கு என் மீதிருந்த கோபமே.

என் வகுப்பு தோழர்களுக்கு எனக்கு தராதது வருதமாக இருக்க என் தோழன் ஒருவன் ஏன் ரிச்சர் சோமிக்கு புத்தகம் கொடுகலை என்டு கேட்டான். யாழ்பாணியள் இங்கவந்து படிச்சு உங்கலை முந்துவாங்கள் நீங்கள் வழிசல்கள் மாதிரி வாய் த்துக்கொண்டிருங்க.....என்றார் சத்தமாகா..

காட்சி-2

இடம் -யாழ்ப்பாணம்

சாவகச்சரியில் இருக்கும் அந்த ஊர் எனது அம்மாவின் சொந்த ஊர். நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மட்டக்கலப்பில் இருந்து வந்தவன் எண்ட படியால எல்லாரும் சற்று தள்ளியே இருந்தார்கள்.இருந்தாலும் நளவர் வீட்டுப் பிள்ளைகள் இருக்கும் வங்குக்கு என்னை அனுப்பாமல் விட்டதில் அம்மவின் சொந்தகாரரான அந்த ரீச்சருக்கு பெரும் பங்கு உண்டு.

அவள்தான் அந்த வகுப்பின் முதல் மாணவி நல்ல அழகு துறு துறுவென இருப்பாள்(அவள் பற்றியகதை பெரும்கதை அது 12 வருசக் கதை அதைப் பிரகு சொல்லுறன்) அந்த பள்ளியில் செர்ந்த முதல் தவணைத் தேர்விலேயே நான் 2ம் மானவனாக வந்தேன்.இரண்டாம் தவணையும் இதை தக்க வைத்துக் கொண்டேன்.ஆனாலும் என்னுடன் அவ்வளவாக யாரும் சேருவதில்லை.பள்ளர் பிள்ளைகள் மட்டும் என்னுடன் கொஞ்சம் பழகினர்.

மூன்றாம் தவணையில் நாந்தான் முதல் மாணவன்.தேர்வு மதிப்பெண் அட்டை கிடைத்தது எனகு மட்டும் மேடையில் கொடுத்தார்கல் முதாலம் பிள்ள்ளைக்கு அப்பிடி கொடுபது மரபு.5ம் வகுப்பு தொடங்கியது வகுப்பு ரீச்சர் மாணவகளுக்கு அட்வைஸ் கொடுத்தார் ஸ்கொலஸிப் வக்குப்பு நல்ல படிக்கவேணும் அங்க பாருங்க அவன் மட்டகளப்பான் அங்க படிச்சிட்டு வந்து உங்களை முந்திட்டான் ......என்று தொடர்ந்தது அவர் பேச்சு...அவள் என்ன நோக்கி நக்கலாகச் சிரித்தாள்...
அடுத நாளில் இருந்து நான் பள்ளிக்கு கட் அடித்தேன்...என் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரிட்டசையை மட்டக்களப்புக்கு போய் எடுத்தேன்.எனது பள்ளியில் நான் மட்டுமே சித்தியடந்தேன்.வழமையாய் பாரட்டு விழா வைக்கும் அந்த பள்ளிக் கூடம் இம்முறை அப்படியொரு விழாவை வைக்கவில்லை.நான் மட்டும் பள்ளி முழுவது சொக்லேட் கொடுதபடி இருந்தேன்....

இன்னொரு விசயம் நான் யாழ்ப் பாணத்தில 5ம் வகுப்பு படித்த போது புலிகளின் பேச்சுப் போட்டியில் தென்மராச்சியில் முதல் பரிசு வாங்கி புலிகளுக்காக பல இடங்களில் பேசித்திரிந்தேன்...அப்போது அந்த சின்னவயதில் எங்களூரில் பேசும் போது அவளின் அப்பாவ
ன் கையப் பிடித்தபடி அவள் என்னைப் பார்த்த பார்வை இப்போது வரைக்கும் நினைவிருக்கு நான் நினைகிறன் அவளுக்கு முன்பிருந்த வெறுப்பு இப்போது இல்லையென்றூ

Sunday, October 21, 2007

நான் ராமன்- சு.ஸ்டார் ரஜனி ஆவேசம்

நான் ராமன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என சு.ஸ்டார் ரஜனி சவால் விட்டார்.சண் குழும தொலைக்காட்சி நேற்று இதனை ஒளிபரப்பு செய்தது.மிகப் பரபரப்பான சூழலில் ரஜனி இதனைத் தெரிவித்தார்.

நீ இராவணன் நான் ராமன் உன்னை அழிச்சு உங்கிட்ட இருந்து இந்த மக்கள காப்பத்துரதுக்குதாண்டா நா வந்திருக்கன். ரசனி திரும்பி நடந்தார். பாட்சா.... பாட்சா....
என்று பின்னணியில் கேட்க பரிவாரங்கள்.ரசனி பின்னால் திரும்பி நடக்கத் தொடங்கின.

சினிமா விருது விழாவில் கலைஞரிடம் ராமர் க்கு ஆதரவாக பேசியதற்க்கும் இதற்கும் என்ன தொடர்பும் இல்லை. ஒரு தசாப்தம் முன்பாக பாட்சா படத்தில் ரகுவரனைப் பார்த்து அன்வரின் நண்பன் மானிக் பாட்சா சொல்லும் டயலொக்.கே டிவி யில் நேத்துதான் முழுசா பாட்சா படம் பாத்தன்.


அட கருமாந்திரம் பிடிச்ச பயலுகளா அதுக்கு அந்த படம் வாரதுக்கு சில வருசம் முன்னாடிதானே இந்த ராமர் பெயரால அத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் பாபர் மசுதி இடிக்கப்பட்டும் பக்தி மெய்பிக்கப் பட்டது.

அண்ணா ரசனி, நாடடு நடப்புகளையும் மக்கள் எண்ணங்களையும் அப்பப்ப ரிவி ,பத்திரிகைகளை யும் பாருங்க. சும்மா பூச்சாண்டி காட்டுறதும் நல்லதில்ல கண்ணா சாரி அண்ணா.

கமலின் தென்னாலி பாத்த பிறகுதான் இலங்கயில் இத்தனை கொடுமை நடப்பது தெரியுமென்று சொன்னதைபோல தமிழ்நாட்டு பிரச்சனையிலும் கருத்து சொல்லிடுவிங்காளோண்ணு பய்மா இருக்கு. அவரின் பக்த கொடிகளா மன்னிக்கவும் கோடிளா நீங்களாவது உருப்பட்டா சரிதான்

எங்களூரில் வெள்ளாளரும் பள்ளரும்...

எங்களூர் தென்மராட்ச்சியில் இருகிறது.அதை எங்களுர் எனபதை விட என் அம்மாவின் ஊர் என்பதே பொருத்தம்.நான் ஒருவருடத்திற்க்கும் சற்று அதிகமான காலம் அங்கிருந்திருக்கிறேன்.வெற்றியாகச் சொல்லவேண்டுமானால் யாழ்கோட்டை இயக்கத்தின் ஆழுகைக்குள் வந்த போது அந்த ஊருலேயே இருந்தேன்.

கோட்டை பிடித்தபோது சீனவெடி வெடித்த அண்ணாகள் பின்னால் ஓடியிருகிறேன்.வீட்டில் முன்னர் இயக்கத்தில் இருந்த என் மாமா இந்திய இராணுவத்துக்கு பயந்து மண்ணில் புதைத்து வைத்திருந்த புலிக்கொடியை அப்போதுதான் நான் தோண்டி எடுத்தேன்.
என்கொரு பெருமை, கோட்டைபிடித்த சேதி வந்த அந்த மாலைப் பொழுதில் சந்தியில் ஏற்றிய புலிகொடி நான் தோண்டியெடுத்து கொடுத்தது என்பதில்.
அந்த சந்தியில் மூன்று மாவீரர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தது அதில் ஒருவர் பள்ளர் மற்றயவர்களைப் பற்றி தெரியாது."அந்த பள்ப்பெடியன்"(இப்பிடித்தான் ஊருக்குள் சொன்னார்கள் அதனால்ததன் எனக்கு அவர் பள்ளரெண்டு தெரியும்) மேஜர் தரம் என்று நினைவு.அவரின் பெயரை அந்த ஊரின் பெருந் தெருவுக்கு வைத்திருந்தார்கள்.

பெருமளவு வெள்ளாளர்களைக் கொண்ட அந்தப் பெருந்தெருவுக்கு அவர் பெயரை வைத்தது பற்றி
ஊரி சத்தமில்லாமல் பேச்சடிபட்டது.சத்தம் போட்டு சாதி சொன்னால் 3 மாதம் பங்கர்.இப்பிடித்தான் ஒருத்தர் பள்ளன் தேங்காய் களவெடுத்துப் போட்டான் எண்டு சொன்னதுக்கு இயக்கம் களவெடுத்தவனை விட பள்ளர் என்று சொன்னவனுக்கு அதிக தண்டனை கொடுத்ததாம்.! இது மாதிரி நிறையச் சேதி வாறதால சனம் கப்சிப்.

ஆனாலும் சண்முகம் ரீச்சர் நான் படிச்ச அந்த வகுப்புல வெள்ளாருக்கு மட்டும் தனியா வகுப்பு முடிஞ்சதும் சொல்லிகொடுப்பா.அத விடுவம் வெள்ளாளர் வீடுகளுக்குள்ள பள்ளர் வாரது எங்கள் ஊரில் இப்பவரைக்கும் இல்லைத்தான்.இப்ப சில இடங்கலில் வரவேற்பறை வரையும் வரவிடுகினம்.ஆனால் புழங்குறதில்ல.அதென்ன புழங்குறது எண்டுறியளோ அதுதான் கொடுக்கல் வாங்கல் செய்யுறது.

ஊர் இப்பிடி இருக்கையில நான் மட்டக்களப்புக்கு வந்துட்டன். சண்டை உச்சமடைய, இருந்த வெள்ளாளரில பாதிப்பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட வெள்ளாளர் எண்ணிக்கையில் குறையத் தொடங்கினர்.பள்ளர் இளைஞர்களும் வெளிநாட்டுக்குப் போனார்கள் ஆனால் வெள்ளாளரைப் போல குடும்பம் குடும்பமாகப் போகயில்ல.இப்ப வெள்ளாளர், பள்ளரையும் நளவரையும் மற்றசாதியினரையும் விட அதிக எண்ணிகையில் இல்லாமல் போனார்கள்.

வெள்ளாளக் காணிகள் பள்ளருக்கு அதிக விலையில் கனடாவிலோ சுவிசிலோ வைத்து கைமாற்றப் பட்டது. சில வருடங்கள் முன்பு திருச்சியில் நடந்த ஒரு செத்த வீட்டில் இப்பிடி பள்ளருக்கு காணிவித்தது தொடர்பாக இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தேன்.இருவருமே பக்கத்துப் பக்கத்துக் காணிக்காரர்.ஒருவர் தனது காணியைப் பள்ளருக்கு வித்ததால் மற்றவரின் காணி மதிப்பு இறங்கி விட்டதே சண்டையின் பிரதான கருப் பொருள்.

இந்த சண்டையில் ஒருவர் சொன்னார் " பள் பெடிகளுக்கு இப்ப பணம் வந்துட்டுது.அதுதான் ஊரில ஒரு காணிவிடாம வாங்குறாங்கள்.எங்கடயதுகளும் காசுக்காக மரியாதையப் பாக்காமல் நளம் பள்ளுகளூக்கு காணியை விக்குதுகள்" இதையடுத்து இன்னொருவர் சொன்னார்" உவங்கள் அறுவாங்கள் எங்கட வீடுகளை வாங்கி எங்கயிருந்தொ வந்ததுகளையெல்லாம் போராளி குடும்பம் மாவீரர் குடும்பம் எண்டு குடியமத்திப் போட்டாங்கள்."

அட இதை விடுங்கோ இப்ப ஊரில நடந்த ஒரு கூத்தைப் பாத்தியளோ! என்று செத்தவீட்டுக்கு வந்த இன்னொருவர் பேசத்தொடங்கினார் அவர் சிலமாதங்களுக்கு முன்னர் இந்தியா வந்தவராம்.
" முதல் ஊரில 'அதுகளும்' ரியூசன் எண்டால் எங்களிட்டதானே வரோணும்.இப்ப என்னாடாவெண்டால் 'அதுகளிண்ட' இடத்தில போய்த்தான் எங்கட பிள்ளையளும் படிக்கோணும்.'அதுகள்' நடத்திற ரியூசந்தான் பெரியது அவங்கள்தான் நல்ல மாஸ்டர்மரும்.அது சரியெண்டு சாதிபாக்கமல் பரவாயில்லையெண்டு நாங்கள் அனுப்பினம்.படிச்சால் சரிதானே சாதியில என்ன கிடக்கு.

ஆனால், அவங்கள் ஒரு நடைமுறை கொண்டந்தாங்கள் பெற்றார் ஆசிரியர் சந்திப்பெண்டு.அது நல்ல விசயம் மெண்டு போனால், சந்திப்பு முடிஞ்சதும் சாப்பாடு எல்லாருக்கும். அவங்கள் சமைச்சதை அவங்கட ஆசிரியர்மாரும் எல்லாப் பிள்ளையளும் பெற்றாரும் ஒண்டாயிருந்து சாப்பிட வேணுமாம்" அவர் கூறி முடித்தார்.

அப்ப நீங்களும் சாப்பிட்டனியளோ? மற்றவரின் கேள்வியில் நக்கல் இருந்தது. "பின்ன சாப்பிடாமல் வரமுடியுமே.பிள்ளையள் படிக்குது.அடுத்தடுத்த மாதாங்களில போகாமல் விடுவம் எண்டால் கட்டாயம் பெற்றார் வரொணுமாம்.அடுத்தமுறைக்கு நான் போகாமல் மனிசியை அனுப்பிவிட்டன்!"


குறிப்பு;

*ஈழத்தில் சாதியென்பதே இல்லை.இல்லாததைப் பற்றிப் பேசக்கூடாது.

*கலியாணத்தில் மட்டும் சாதி பாக்கிறார்கள் மற்றம்படி சாதி இல்லை.

*வன்னியில் சாதி என்பதே இல்லை.

*புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியை வளர்கிறார்கள்.

*யாழ்ப்பாணத்தில் சில இடங்கலில் மட்டும் சாதி உள்ளது.

* இந்தியாவைப் போல் ஈழத்தில் சாதிய அடக்கு முறைகள் இல்லை.

*இந்தியாவில் சொல்வதைப் போன்ற 'தலித்' என்றபதம் தேவையற்றது 'பஞ்சமர்' என்பதே போதுமானது

மேற் கூறபட்ட சொற்றொடர்கள் என் கண்ணுக்கு கவர்ச்சியாகப் பட்டவை.அதனை சும்மா 'உஷா''துணை' குறிப்பாக தந்துள்ளேன்.

முக்கிய குறிப்பு:
இப்ப இயக்கத்தின் முக்கிய அரசியல் பொறுபுகளில இந்த ஊர் பெடியள்தான் இருகினமாம்.இன்னொன்று, முன்னர் சில பெரிய அடிபாட்டு காரரும் இந்த ஊர்க்காரத்தான்

Tuesday, October 09, 2007

இரசாயனக் கம்பனிகளின் பலிக்களம்-ஒரு ஆவணப்படம்

"கடலூரைக் காப்போம்" என்ற ஆவணப் படமொன்று 'நிகரி' திரைப்பட வட்டத்தினரால் தயாரிக்கப்பட்டது.கொழும்பு மற்றும் சென்னையில் இயங்கும் நிகரி திரைப்படக் குழுவும் ,சென்னையில் உள்ள சமூக மாற்றத்திற்க்கான இளைஞர்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் மிகக் குறைந்த செலவில் ஒரு மிதிவண்டிப் பேரணியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.

சரி,ஒரு அவலம் நிறைந்த மக்களின் கதைகளை இனிக் கேளுங்கள்.

(இது முழுமையான படமல்ல சில பகுதிகள் விடுபட்டுள்ளன.)