Saturday, February 03, 2007

சின்னம்மம்மா. . .

காலையிலிருந்தே திருச்சி மாமா வீட்டில் இருந்து பலதடவைகள் போன் வந்தாகிவிட்டது.கையில் வைத்திருக்கும் கமராவை இறக்கி வைக்க முடியாதபடி வேலை.அன்றைகென்று கமராமேன் இல்லாமல் நானே கமரா பண்ணுவதால் அதிக அழுத்தம் வேறு.சிறிது நேரத்தில் எனது உதவி இயக்குனர் செல்லிடப் பேசியையும் உறங்கு நிலமையில் வைத்து விட்டர்.
சரி ஒரு படியாக 6 மணிக்கு மேல் வேலை முடித்து அழைப்பெடுத்தால் கனடாவில் உள்ள எனது சின்னமம்மா இறந்துவிடார் என்ற செய்தி மாமாவிடமிருந்து பகிரப் பட்டது

வீட்டுக்கு வந்து மின்னஞ்சலைத் திறந்தால் கனடாவில் உள்ள எனது அக்கா இதே செய்தியை அஞ்சலிட்டிருந்தார்.இப்படித்தான் இரண்டு வருடங்கள் முன்பு எனது அம்மம்மா யாழ்ப்பாணத்தில் இறந்த போதும் எனது தங்கை குறுஞ் செய்தி அனுப்பினார்.பின்னர் தொலைபேசியில் தகவல் சொன்னார் அந்தத் தகவல் மாமாவிடம் பகிர்ந்து கொண்டேன்.எனது அம்மம்மா மாமாவுக்கு அம்மா எனபதால் அவருக்கு ஆறுதலாக சிறிது நேரம் பேச வேண்டியிருந்தது.

இதை எழுதும் இந்தக் கணத்தில் சின்னமம்மாவின் உடல் எரியூட்டப் பட்டிருக்கக் கூடும் இல்லை புதைதார்களோ தெரியவில்லை.கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கனடாவில் வசிக்கும் சின்னமம்மா பற்றி எழுதுவதற்கு நிறய இருகிறது.யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மட்டுவில் என்று ஒரு ஊர் இருக்கிறது.அதுதான் என் தாய் வழி ஊர்.அங்குதான் சின்னமம்மா பிறந்தார்.3 ஆண்களும் 5 பெண்களுமான ஒரு குடும்பத்தில் கடைசிக்கு முதல் பிள்ளை எனது சின்னமம்மா.எனது அம்மம்மா பெண்களில் மூத்தவர் மொத்தத்தில் மூன்றாவது.

மிகக் கெட்டிக்காரியான எனது அம்மம்மாவை அரை குறைப் படிப்போடு எனது தாத்தாக்கு திருமணம் முடித்து வைத்தனர்.மிக அழகான எனது அம்மம்மாவை அதிகம் வீட்டை விட்டு வெளியேறாதவாறும் அழகுபடுத்திக் கொள்ளாதவாறும் தாத்தா பார்த்துக் கொண்டார்.வீட்டைத் தவிர வேறு உலகைக்காட்டமல் தாத்தா தன்னை வைத்திருந்ததாக சாகும் வரை அம்மம்மா சொல்லுவார்.தான் படித்திருந்தால் இண்டைக்கு எத்தினை பெரியாளாக இருந்திருப்பன் எனபது இறுதிவரை அம்மாவிடம் இருந்த ஆதங்கம்.

இந்த சூழலில் சின்னம்மா அதிக சுறுசுறுப்பான ஒரு நபராகவே எனக்கு தெரிந்தார்.பள்ளிப் படிப்பை நிறைவு செய்த சின்னமம்மா குடும்ப வாழ்க்கைக்குள் போனதும் சுறு சுறுப்பான பெண்ணாகவே இருந்தார்.எங்களூரில் சின்னமம்மா வீட்டிலேயே முதன் முதலில் தொலைக் காட்சி வாங்கியாதாக அம்மா சொல்லியிருக்கிறா.சின்னத்தாத்தா அதிக சொத்துக் காரர் என்பதால் ஊரில் மாடி வீடு கட்டிய பணக்காரக் குடும்பமாக சின்னமம்மா குடும்பம் இருந்தது.

வேளாளர் ,பள்ளர், நளவர், கரையார், வண்ணார் உள்ளிட்ட சாதியினர் அதிகம் வாழ்ந்த எங்ளுரில் துரும்பர் என்ற ஒரு சாதியினரும் வாழ்ந்தனர்.துரும்பர் எல்லாரிலும் குறைந்த சாதியினரெண்டும் அவர்கள் ஒரு காலத்தில் காவோலை(காய்ந்த பனையோலை) இழுத்துகொண்டே வீதியில் போவர் என்றும் அம்மம்மா சொன்னர்.கவோலை இழுக்கும் சத்தம் கேட்டால் யாரும் வீதிக்கு வரமாட்டார்களாம்.

சின்னமம்மா விட்டிலும் நிறையப் பள்ளர்கள் வேலை செய்தார்கள்.அவர்களுக்கு தனி பேணிகளை கனடா போகும் வரை சின்னம்மா வைத்திருந்தார்.ஆனால் வேடிக்கை என்னவெனில் எனது அம்மாவின் திருமணத்தில் சின்னம்மா கலந்து கொள்ளவில்லை காரணம் சின்னமம்மாவின் மகள் அப்போதே கலப்பு திருமனம் செய்து கொண்டிருந்தார்.இதனால் ஊரில் பணக்கார, நிலபுல செல்வாக்குடையவரான சாதிய தடிப்புள்ள பிரிவினரான சின்னம்மாவை பொது விழாக்களில் கலந்து கொள்ள ஊர் ஒத்துக் கொள்ளவில்லை.

இருப்பினும் பின்னர் ஊரில் தவிர்க்க முடியாமல் சின்னமம்மா ஏற்றுகொள்ளப்பட்டர்.ஊர் பாடசாலைக்கு நிலம் ஒதுகியதில் இருந்து பல உதவிகளை ஊருக்காக சின்னமம்மா செய்திருந்தாலும் இறுதியில் கடந்த வருடம் ஊர் சென்ற போது ஊர் வேளாளர் சிலர் இவ்வாறு பேசிக்கொண்டனர் சின்னமம்மா கனடாவில் இருந்து கொண்டு நிலத்தை பள்ளருக்கு விற்று ஊரில் இருக்கும் வெள்ளாள ஆதிகத்தை உடைத்து விட்டர் என்று.இத்தனைக்கும் இதற்காகவே அருகில் இருந்த பல காணிகளை ஒரு காலத்தில் வாங்கி வைத்திருந்தவர் சின்னமம்மா.

நான் ஊர் பாடசாலையில் படித்த நட்களில் சின்னம்மா வீட்டில்தான் அதிகம் இருப்பன் தனியாளாக தேங்காய் உரித்து அதிகாலையில் சின்னத்தாத்தவோடு வண்டிலில் தேங்காய் கொண்டு சாவகச்சேரி சந்தைக்குப் போகும் போது அவரில் தெரியும் உசாரும் வேகமும் என்னை இப்போது வரை ஆச்சரியப் படுத்தும் ஒரு விடையம்.

எனக்கு தெரிந்து ஊரில் வேகமான ஒரு பெண்ணாக அவர் இருந்தார்.எப்போதும் அவருக்கு ஊரை விட்டு செல்வதில் பிடிப்பு இருந்ததில்லை.பரந்த தோட்டத்தில் நடந்த அவருக்கு கனடா ஒத்து வரவில்லை கடந்த சில வருடங்களாகவே சுய நினைவு மங்கியவராகவே அவர் இருந்தார்.அம்மம்மா தனது 83 வது வயதில் இறக்கும் போது கூட நிறைந்த நினைவாற்றலுடன் இருந்தமை ஆச்சர்யமானது.ஆனால் இறக்கும் போது 75 தொடுகிற வயதான சின்னமம்மா நினைவு தவறி வாழ்ந்தார்.

கனடாவை அவரால் சகித்திருக்க முடியவில்லை. ஓடிய அவரது கால்கள் ஓர் அறையில் கட்டப் பட்டதின் அவலம்.துரு துருவென இயங்கிய ஒரு விவசாயப் பெண்ணாக வாழ்ந்தவர் அவர். வீட்டுக்குள் அடங்கிபோய் தன் கனவுகளைத் தொலைத்த என் அம்மம்மாவைவிட உசார் பெண்ணான சின்னம்மம்மா ஒடிந்துபோய் சிலகாலம் இருந்து இறந்தார்.தோட்டத்தில் காலை முதல் இரவு வரை வேலை செய்வார்.பின்னர் அதிகாலையில் சந்தைக்கு வண்டிலில் புறப்படுவர்.அம்மா எனக்கு சுறு சுறுப்புக்கு உதாரணம் காட்டுவது சின்னம்மாவைத்தான்.

என் சின்னமம்மாவை எனக்கு நிறையப் பிடிக்கும்.அவரோடு வண்டிலில் போயிருகிறேன்.சமைக்கும் போது கூட இருந்து பேசியிருகிறேன் தென்னந்தோப்பில் நடந்திருகிறேன்.. . . . .எனக்கும் சின்னமம்மாவுக்குமான ஊடாட்டம் பற்றி சின்னம்மம்மாவின் அரவணைப்பை தனது சின்னக்காலங்களின் தவற விட்ட எனது கனடா அக்காவுக்கு கடந்தவாரத்தில் நினைவு மீட்டியிருந்தேன்.ம்..கடந்தாவரம் சின்னத்தாத்தாவுக்கும் சின்னம்மம்மாவுக்கும் திருமண நாள் வந்தது.....

ம்..இப்போது,

என் அம்மம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோ பதிவு எனது பார்வைக்காக கொடுக்கப் பட்டதைப் போல சின்னமம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோவும் எனக்கு கொடுக்கப் படலாம்.அம்மம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோவைப் போல இதையும் நான் பார்க்கப் போவதில்லை.

7 comments:

இளங்கோ-டிசே said...

Somie, Very sorry to hear the sad news.

சோமி said...

ம்...இன்னும் யாருடனும் போனில் கூட சரியாக பேசவில்லை. பகிர்வுக்கு நன்றி டிசே

சினேகிதி said...

sorry to hear that your chinamma has passed away Somie.

\\அம்மம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோவைப் போல இதையும் நான் பார்க்கப் போவதில்லை. \\
Nalla mudivu.

ரவி said...

வருத்தமாகத்தான் உள்ளது...

மலைநாடான் said...

சோமி!

அகதி வாழ்வின் அவலங்களில், இதுவும் ஒன்று. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்பதை்த தவிர ஏது சொல்ல முடியும்.

theevu said...

//அம்மம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோவைப் போல இதையும் நான் பார்க்கப் போவதில்லை.//

இந்த வலி எனக்கும் புரியும்.எனது அப்பாவின் இறுதிச்சடங்கு வீடியோ அலுமாரியில் தூங்குகிறது.பார்க்க போவதில்லை.

சோமி said...

m..................................thank u 4 all of ur comments.