Wednesday, January 24, 2007

பெண்களின் சேலை எத்தினை அழகானது தெரியுமா?

"ஒருகையில் கைப் பையும் மறுகையை பேருந்தில் பிடிப்பதுமாக நான் இருக்கையில் சேலை கட்டச் சொல்லும் உங்கள் காலாச்சாரக் காவலர்கள் எங்கள் இடுப்பில் தேடுவார்கள் நீங்கள் சொல்லும் தமிழையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்.."

ஒரு வலைத்தளம் இருக்கு.அதில் அவர் எழுறதும் அதுக்கு சிலர் போடுகிற பின்னூட்டமும் எரிச்சலூட்டுபவைகளாக இருக்கிறது என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார்.சரியெண்டு நானும் போய் பார்த்தன்.பின்னூட்டமும் போட்டன். சாதி,திராவிடம்,தலித் என்ற விவாதத்துக்குரிய பரபரப்புக்கு பஞ்சமில்லாத தலப்புகளின் வரிசையில் இப்ப பெண்கள் பஞ்சாபி வகையறாக்களைப் போடுறது கலாச்சார(?) வீழ்ச்சி எண்டுறார்.

உனமையிலையே இது பெரும் காலாச்சார வீழ்ச்சிதான் பெண்கள் என்பவர்கள் எங்கள் இனத்தின் கலாசாரக் காவலர்கள்.சினிமாவில் துகிலுரிந்து எங்கள் கலாசாரக் கட்டுமானங்களய் சீரழிப்பவர்களும் அவர்களே.டேய் பொட்டய்.. .என்று உச்சத் தொனியில் கத்தி பெண்கள் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு என்ற அணிகலன்களுக்கு உரித்துடையவர்கள் என்பதை உலகறியச் செய்து எமது பாரம் பரியத்தைக் கலாச்சாரத்தப் பாதுக்காப்பவர்கள் நமது ஆண்கள்.

இப்போது சென்னையிலும் காவல் துறை முதற்கொண்டு நமது துணைவேந்தர் விஸ்வநாதன்(அண்ணா பல்கலைக்கழகம்) ஈறாக பெண்களின் உடை விசயத்தில் அக்கறை செலுத்தி எமது உயர்ந்த கலாச்சாரத்தை காக்கும் ஆண்களுக்கு எமது ஒத்துழைப்பை குறைந்த பட்சம் இது போன்ற பதிவுகளிலாவது குடுப்பதுதானே நியாயம்.

இந்த விசயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழினத்துக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவே தெரிகிறது. பெண் போராளிகளுக்கு ஜீன்ஸ்,சேர்ட் போட்டு விட்டு அல்லது போடச் சொல்லி தமிழரின் கலாச்சாரத்தை கெடுத்து பிரபாகரன் துரோகம் இழைத்துவிட்டார் குறந்த பட்சம் அரசியல் பணியில் உள்ள போராளிகளையாவது சேலைகட்டச் சொல்லியிருக்கலாம். ம்...என்ன செய்வது அவர்களும் நீங்கள் சொன்ன பஞ்சாபியையோ அல்லது ஆண்கள் அணியும் ஆடைகளையோதான் அணிகிறார்கள்.

போர்புரிதலுக்கு இதுதான் வசதியென்று தலைவர் நினைத்ததினாலேயே பெண்களுக்கு இந்த உடை வந்ததென்று புலிகளின்மகளிர்அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி சொல்கிறார்.என்ன மடமையிது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி,பல சமஸ்தானங்களை ஆண்ட நாச்சியார்கள் எல்லம் சேலைதானே அணிந்தார்கள் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை.யாராவது இது குறித்து கூட பதிவு போடலாம்.

என்னதான் இத்தாலியில பிறந்தாலும் எல்லா இடமும் சேலை அணிந்தே செல்லும் சோனியா காந்தியை இவர்களுகெல்லாம் உதாரணம் காட்ட வேண்டும்.அண்மையில் அவர் பெல்ஜியம் போன போது கூட அந்த குளிரிலும் சேலயணிந்தே கோட் போட்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அட பவிகளா உங்கள் கலாச்சாரம் அந்த அம்மவின் சகிப்புதன்மையினை எவ்வளவுதூரம் சோதிக்குது

கடந்த வருடத்தில் ஒரு சர்ச்சை வந்தது செயலலிதா அணிவது சேலையா இல்லையா என்று. இன்றைய சட்டசபையாக இருந்தால் ஒரு தனி விவாதமே நடந்திருக்கும் (கணிதத்தில் 100 புள்ளியா 98 புள்ளியா என்பதெல்லாம் விவாதமாகும் போது இது எம்மாம் பெரிய பிரச்சனை).செயலலிதா அணிவது செலையில்லை யென்றால் உடனே அதிமுக உறுபினர்கள் கலைஞ்சர் பொண்ணு கனிமொழி என்ன அணிகிறார் என்ற அறிவு பூர்வமான கேள்வியை உணர்வுகள் நண்பர் கேட்டது போல சட்டசபையிலேயே கேட்டுவிடுவார்கள். தமிழகப் பத்திரிகைகளும் கலாச்சாரத்தின் பெயரால் 1 மாதம் நல்ல விற்பனையைப் பார்த்திருக்கும்.

ம்.....இதையெல்லம் விட எங்கள் ஆண்கள் படும் வேதனை யாருக்கு தெரியப் போகுது. எங்கள் கல்லூரியில் ஒரு விழா அடக்கும் பாரம்பரிய தினம் எண்டு அதுக்குப் பெயர்(அது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்) அண்டைக்கு மட்டும்தான் பெண்கள் சேலை கட்டி வருவார்கள்.எல்லப் பெடியளும் அதை பற்றியே பேசுவார்கள். அவளின் இடுப்பு சின்னது இவளுக்கு லேசா தொப்பை எண்டு தொடங்கி இன்னும் இன்னும் பலவற்றையெல்லம் பேசுவர்கள்.

இப்பிடி தமிழ் படத்தில பாலியல் வன்புணர்வுக்காட்சிகளில் துகிலுரியவும் பாடல்களின் கதாநாயகன் இழுக்கவும் பயன் படும் பெண்களின் சேலை எத்தினை அழகானது தெரியுமா? ம்...சேலை உண்மையிலேயே செக்ஸியும் அழகும்தாண்டா என் நண்பர்கள் சொல்லும் வார்த்தைகள் இவை.நானும் என்ன விதிவில்க்கா என்னையும் சேர்த்துதான். எல்லா அலுவலகங்களும் கல்லூரிகளும் பெண்கள் கட்டாயம் சேலை அணிய வேண்டுமென்று உத்தரவு போட்டால். என் நிறைய நண்பர்கள் பேருந்துக்காக காத்திருக்க ஆரம்பித்து விடுவார்கள்.

என்னையா.....கேட்க இனிமையாக இருகிறதா? கலாச்சாரத்தினை பெண்களின் சேலைகளுக்குள் முடிவதற்கு இனியும் நாம் வெட்க்கப்படாதிருப்பது எத்தன பெரிய .......தனம். என் தோழியொருத்தி என்றைக்கோ சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

"ஒருகையில் கைப் பையும் மறுகையை பேருந்தில் பிடிப்பதுமாக நான் இருக்கையில் சேலை கட்டச் சொல்லும் உங்கள் காலாச்சாரக் காவலர்கள் எங்கள் இடுப்பில் தேடுவார்கள் நீங்கள் சொல்லும் தமிழையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்...."

நண்பர்களே ஒரு ஆணாக உங்கள் நண்பனாக கேட்கிறேன் கலாச்சாரத்த தனியே பெண்களோடு முடிச்சுப் போடாதீர்கள். இது என்னை அடையாளப் படுத்துவற்காக சொல்லுகிற விசயமல்ல என் தங்கைகளும் தோழிகளும் எனக்கு புரிய வைத்தவைகள். ஏனெனில் நானும் சேலை கட்டுவதுதான் கலாச்சாரப் பாதுகாப்பு என்று நினைத்தவன்தான். எமது வளர்ப்பும் சூழலும் எங்களை அப்படி நினைக்க வைத்தன.

மாற்றம் ஒன்றே மாறாதது- கார்ல் மார்க்ஸ்.

19 comments:

படியாதவன் said...

#பெண் போராளிகளுக்கு ஜீன்ஸ்,சேர்ட் போட்டு விட்டு அல்லது போடச் சொல்லி தமிழரின் கலாச்சாரத்தை கெடுத்து பிரபாகரன் துரோகம் இழைத்துவிட்டார்#
;-))

#என்ன மடமையிது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி,பல சமஸ்தானங்களை ஆண்ட நாச்சியார்கள் எல்லம் சேலைதானே அணிந்தார்கள் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை#
;-)))

வெளுத்து வாங்குறீங்களே தலைவா,
பொம்பிளயளிண்ட உடுப்பு பற்றியெல்லாம் விமர்சனம் செய்யிற அளவுக்கு பெரிய ஆள் இல்லை.
என்னப் பொறுத்தவரைக்கும் tight denim உம் T-shirt உம் தான் நல்லது எண்டு சொல்லுவன். ;))

சின்னக்குட்டி said...

சோமி..கலாச்சார காவலர்களுக்கு உறைக்க வைக்கும் நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்

வெற்றி said...

சோமி,
நல்ல பதிவு.
/* நண்பர்களே ஒரு ஆணாக உங்கள் நண்பனாக கேட்கிறேன் கலாச்சாரத்த தனியே பெண்களோடு முடிச்சுப் போடாதீர்கள் */

உண்மையான வார்த்தைகள். அடுத்து, பெண்கள் தமிழ்க்கலச்சார உடை போடுவேண்டும் என்பவர்கள் முதலில் எமது கலாச்சார உடைகள் எனறால் என்ன, அது யாரால் வரையறுப்பக்பட்டது என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் தமிழர் கலாச்சார உடையென்று எதையும் அடித்துச் சொல்ல முடியாது. காலத்திற்குக் காலம் இது மாறிவருவதை எமது வரலாறுகளைப் படிப்பவர்களுக்குப் புரியும். பழங்காலத்தில், [ஏன் இன்றும் எமது சில கிராமங்களில்] பெண்கள் மேலாடையே போடுவதில்லை. பின்னர்தான் அது புகுந்து கொண்டது. இப்படி மாற்றம் என்பது வந்து கோண்டுதான் இருக்கும். இதுதான் தமிழர் உடை, இப்படித்தான் பெண்கள் உடுக்க வேண்டும் என்பதெல்லாம் முட்டாள்தனமே அன்றி வேறொன்றும் இல்லை. அதேபோல, எமது பழசுகள் முந்தி வயலுக்குள் வேலைசெய்யும் போது கோமணத்தோடும் நின்று வேலை செய்தவை. அதுக்காக நாங்களும் இப்பவும் கோமணத்தோடை போக வேணும் என்றும் இந்த மேதைகள் சொன்னாலும் சொல்வார்கள். போடும் ஆடையில் இல்லைத் தமிழ்க்கலாச்சாரம். மனதால் தமிழனாக வாழ்ந்தால் போதும். தந்தை செல்வா ஒரு நாளும் வேட்டி அணிந்ததில்லை. அதற்காக அவர் ஒழுங்கான தமிழன் இல்லையென்று சொல்லிவிட முடியுமா? அதேபோல் வேட்டி கட்டிய பல அரசியல்வாதிகள் எதிரிகளின் கால்களை நக்கிச் சீவியம் செய்வது[எ.கா:- ஆனந்தச்சங்கரி] தெரியாத. ஆக உடுக்கும் உடுப்பில் இல்லைத் தமிழர் உயர்வு. இதை இவர்களுக்குப் புரிந்து கொள்ளும் திறன் இருக்கா தெரியவில்லை.

மாதுளன் மற்றும் மாதிலன் said...

தமிழ் பெட்டையளின்ரை இடுப்பைப் பாக்காமால் அவங்கள் அவதிப்படுறாங்கள். வயசுக் கோளாறு.. அவையளின்ர உணர்வுகளையும் புரிஞ்சு கொள்ளுங்கோ..

செல்வநாயகி said...

மிகமிக மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது இன்று. டிசேவின் பதிவிலிருந்து இங்கு வந்தேன். நல்ல பதிவு. நன்றி. இனி சேலைபத்தி எழுத என்ன மிச்சமிருக்கும்னு யோசிக்கிறேன் நான்:))

ஆனால் ஒரு வருத்தமான செய்தி உண்டு. நான் எதோ ஒரு சஞ்சிகையில் படித்தது. சுனாமிப் பேரழிவின்போது இந்திய, இலங்கைக் கடலோரங்களில் குழந்தைகளும், பெண்களும் அதிகம் இறக்க நேர்ந்ததற்குக் காரணம். குழந்தைகளால் தப்பித்து ஓடவேண்டுமெனப் புரிந்துகொள்ளமுடியவில்லை. பெண்களுக்குத் தண்ணீரில் நனைந்த சேலைகளோடு ஓடுவது இலகுவாயில்லை:((

நீங்கள் இதை எந்த நாட்டிலிருந்துகொண்டு எழுதுகிறீர்கள்? இல்லை அந்தநாட்டிலிருந்து பார்த்தால் உங்கள் கண்கள் அந்தக்கண்களாக மாறிப்போய் தமிழ்க்கலாசாரமெல்லாம் சரியாகத் தெரியாதெனசொல்லி இதற்கொரு எதிர்ப்பதிவு போட்டுக் கலாசாரத்தைக் காக்க,(அட மாத்தி எழுதிவிட்டேன், கலாசாரம் என்றால் வெள்ளையா, பச்சையா எனத்தெரியாதென்று சொல்லிக்கொண்டும்) யாரேனும் கிளம்புவதையும் எதிர்பார்க்கலாம்:))

துளசி கோபால் said...

ஆமாங்க, சேலை எத்தனை அழகு. அதிலும் இந்தப் பட்டுச்சேலைகள் இருக்கே...அப்பப்பா....
கண்ணையும் கருத்தையும் அள்ளும். ஆனா புடவைக்கடைக்குப் போறேன்னு சொன்னதும்,
ஒரு கையாலே பர்ஸைக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு, புருஷன் விடுற பரிதாபப் பார்வையை
எங்கே போய்ச் சொல்ல? :-)

Johan-Paris said...

அவர்களுக்கு வசதியானதையும் விரும்பியதையும் உடுக்க விடுவோம். அது சேலையாக இருந்தாலும்
யோகன் பாரிஸ்

வசந்தன்(Vasanthan) said...

அட நீங்கள்வேற.
முந்தினகாலத்தில ஜீன்ஸ் போடாமலே வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு போருக்குப் போய் வெண்டவைதானே எண்டு ஓர் அறிவுபூர்வமான கேள்வியை வேற கேட்டிருக்கினம் அவை.

இதுக்குள்ளால சொல்ல வாறது என்ன எண்டு விளங்குதோ?
வன்னிக்கு ஒரு மெயில் தட்டிவிடுவம்.
தொப்பிகலையாவது தப்பும்.

சோமி said...

பெண்களுக்குத் தண்ணீரில் நனைந்த சேலைகளோடு ஓடுவது இலகுவாயில்லை:((

உணமைதான் செலவநாயகி. நான் இந்தியவில் இருகிறேன்.சுனாமி நடந்த போது மட்டக்களப்புக்கு பொயிருந்தேன் முட்கம்பிவேலிகளில் சிக்குண்ட சேலகள் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அதே முட்கம்பிகளில் பார்த்த போது அழுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

இறுக்கமான ஆடை உடுத்திருந்தல் குறைந்த பட்சம் பஞ்சாபி போட்டிருந்தால் நிறையப் பெண்கள் அநியயமாக இறந்திருப்பது தவிர்க்கப் பட்டிருக்கும். சேலை போன்ற் ஆடைகள் உடலை விட்டு நழுவி விட.உடலில் ஆடையற்ற நிலையில் வெளிவருவது அவமானமெனக் கருதி நீருக்குள்ளிருந்து மூழ்கி மாண்டவர்களும் உண்டு.படகில் காப்பாற்ற போனவர்களிடம் வரமறுத்து கடலுடன் போனவர்கள் பற்றியெல்லம் மீனவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

Kalaivani said...

உருப்படியான பதிவு சோமி. இந்தச் சேலை விவகாரம் அதன் நீளம்போலவே இழுத்துக்கொண்டு போகிறது.
சிலவற்றை வாசிக்கும்போது ஒன்றுதான் நினைவில் வந்தது "தேவதைகள் கால்பதிக்க அஞ்சும் புனிதங்களில் பேய்கள் வந்து கூத்தாடுமாம்"
-தமிழ்நதி

முத்துலெட்சுமி said...

\\படகில் காப்பாற்ற போனவர்களிடம் வரமறுத்து கடலுடன் போனவர்கள் பற்றியெல்லம் மீனவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.\\
:((

பதிவுக்கு நன்றி.

மோகன்தாஸ் said...

//அந்தநாட்டிலிருந்து பார்த்தால் உங்கள் கண்கள் அந்தக்கண்களாக மாறிப்போய் தமிழ்க்கலாசாரமெல்லாம் சரியாகத் தெரியாதெனசொல்லி இதற்கொரு எதிர்ப்பதிவு போட்டுக் கலாசாரத்தைக் காக்க//

சோமி, பெரும்பாலும் கதையெழுதுவதற்கு அதிகம் கஷ்டப்படுவதில்லை, ஏனென்றால் ஒரு மையக்கருத்து இருந்துதான் கதையெழுத வேண்டும் என்று பெரும்பாலும் நினைப்பதில்லை ஆகையால்.

ஆனால் "இப்படியும் ஒரு தொடர்கதை" என்று ஒரு தொடர்கதைக்கு நிச்சயமாக சுருக்குன்னு சொல்ற மாதிரி ஒரு விஷயம் இருக்கணும்னு நினைக்கிறேன்.

அந்தத் தொடரின் இன்னொரு பகுதி எழுதுவதற்கு உதவும் என நினைக்கிறேன் உங்களின் இந்தப் பதிவு.

சோமி said...

/தந்தை செல்வா ஒரு நாளும் வேட்டி அணிந்ததில்லை/
வெற்றி,நீங்கள் சொல்லுவது தவறு அவர் வேட்டியும் அணிந்தார் கோட் சூட்டும் அணிந்தார்.அமிர்தலிங்கம் போல எப்போதும் வேட்டியுடனேயே காட்சியளிக்கவில்லை.

படியாதவன்,சின்னக்குட்டி,வெற்றி,மாதுளன் மற்ரும் மாதிலன்,செல்வநாயகி,துளசி கோபால், Johan-Paris,வசந்தன் ஆகியோருக்கு நன்றி.

மாசிலா said...

உங்கள் கருத்துடன் முற்றிலும் முரண்பட்டிருக்கிறேன் நான். உண்மையில் பெண்களின் சுதந்திரத்திற்காக நீர் பாடுபடுவில்லை அன்பரே. மாறாக அவர்களை பழையபடி அடிமைபடுத்தவே முயற்சிக்கிறீர். பல காலங்களாக அவர்களை இப்படி அடிமை படுத்தியதின் விளைவாகத்தான் அவர்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களின் சாதாரண பார்வைகூட ஒரு கொடூர காம பார்வையாக பார்க்கின்றனர். முக்கியமாக நான் சொல்லிக்கொள்ள விரும்பவது : தமிழ் பெண்களுக்கு இப்போது இருக்கும் அனைத்து சுதந்திரம் எனும் எல்லையில்லா பரந்த விடுதலையை ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டுவரும் முயற்சியே உங்களை போன்றவர்களின் வாதம். இது ஒரு ஆணாதிக்க வாதம்.

அன்புடன் மாசிலா!

சோமி said...

/தமிழ் பெண்களுக்கு இப்போது இருக்கும் அனைத்து சுதந்திரம் எனும் எல்லையில்லா பரந்த விடுதலையை/
இதுக்கு யாராவது பெண்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

எனக்கு என் தோழிகளும் தங்கையும் சொன்ன தங்கள் ஆதங்கங்கங்கள்தான் தெரியும்.நான் சொன்னதையா நீர் ஆணாதிக்கம் என்று சொல்கிறிர்?அப்படி உமக்கு தோன்றினால் விரிவாக சொல்லும் என்னை அறியாமல் கூட என்னுள் சில வேளை ஆணாதிக்கத்தனம் இருக்கலாம்.

"அண்ணா யாழ்ப்பாணத்தில ஜீன்ஸ்சும் டொப்பும் போட ஏலாது நான் கொழும்பு வந்ததும் அதை வாங்கித் தா." இது எனது தங்கை எனக்கு சொன்னது. வீட்டில் இருக்கும் போது ஜீன்ஸ் போடும் என் தங்கை வெளியில் போகும் போது அதனைப் போட முடியாதபடி கிண்டல் பண்ணுவதுதான் இப்போது பெண்களுக்கு இருக்கும் எல்லையில்லாப் பரந்த விடுதலையா?

சிறில் அலெக்ஸ் said...

//அவர்களுக்கு வசதியானதையும் விரும்பியதையும் உடுக்க விடுவோம். அது சேலையாக இருந்தாலும்
யோகன் பாரிஸ்//

மறுமொழிகிறேன்.

தம்பி said...

திரும்பவும் தொடங்கிற்றாங்கய்யா தொடங்கிற்றாங்க....

Anonymous said...

ஹாவ்... ஏம்பா புதுசா எதாவது பேசுங்கப்பா.

செல்லி said...

வெளிநாட்டில சேலை அழகை மட்டுமில்ல "அந்தஸ்தையும்" குடுக்குது. இந்தியாவில எந்தச் சேலை latest fashion ஆக வந்தது எண்டு sun T.V, internet இல பாத்திட்டு அதை 50000ரூபாக்கு வாங்கி அடுத்த கொண்டாட்டத்தில கட்டுற பெருமை இருக்கே,..அப்பப்பா.. சொல்ல வார்த்தையே இல்லப்பா!
சந்தனம் மெத்தினா எங்கெடெல்லாமோ பூசுவினமாம்.இதைப்போய் waste of money எண்டு சொன்னவர்க்கு "தம்மைப் பாத்து பொறாமை" என்றார்களாம்.