Tuesday, January 23, 2007

வானம் ஏன் மேலே போனது-சிறுகதைத்தொகுப்பு

பிரபஞ்சத்தின் பல சூனியப் பிரதேசங்களுக்கு
நான் சொந்தக்காரியாய் இருந்தேன்.

வாயில்லாக் காற்றுடன் பேசினேன்.
நட்சத்திரக்கூட்டத்தின் ஏணி தொலைத்தேன்
காற்றில் தடம் பதித்தேன்
காற்றில் கிறுக்கினேன்
காற்றுண்டேன்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பொதுவாய்ப் பெருவெளியில்
நான் மட்டும் நான் மட்டும்
தனிமையை சிறகு விரித்தேன்
அலைந்தேன்..

என்று சொல்லும் விஜயலட்சுமி சேகர் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்.அண்மையில் வெளிவந்த "வானம் ஏன் மேலே போனது" என்ற அவரது சிறுகதைத் தொகுப்பில் அவர் பேசும் மொழியிது.

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் உணர்வுகள் கொலைசெய்யப் படும் பெண்களின் வலிகளை சாதாரண மொழி நடையில் சொல்லியிருகிறார்.சிறுகதைகளில் மட்டக்களப்பு பேச்சு வழக்கும் சூழலும் நிறையவே தெரிகிறது.

ஒவ்வொரு கதயிலும் சாதாரண பெண்களின் வலி தெரிகிறது.ஒவ்வொரு வீட்டுகுள்ளும் பெண்களுகெதிராய் நடக்கும் வன்கொடுமைகளை சாதரண வாசகனுக்கும் புரியும் படியான இலகுவான சொல்லாடலும் யதார்த்தத்தனமும் கதைகளில் தெரிகிறது.கிழக்கில் இருந்து வரும் குறைந்தளவான பெண் எழுத்துகளில் விஜயலட்சுமியின் எழுத்துகளும் இப்போது சேர்ந்துள்ளன.

'எண்ணை வற்றிய குப்பி விளக்கின் மங்கிய ஒளியில் இவளது முகத்தில் அப்பிக் கிடக்கும் வேதனை, விளக்கிற்கு மட்டுமே புரிகிறது.'
என்ற வார்த்தயில் உள்ள கனதியை எல்லாக் கதைகளிலும் காண முடிகிறது. இந்தக் கதைகளுக்கு என்னால் எந்த விமர்சனமும் சொல்ல முடியவில்லை வாசிக்க மட்டுமே முடிந்தது. ஒரு வகை நெருடலும் வலியும் மட்டுமே எனக்கு இந்த கதைகளை வாசித்த போது மீதியாய் வந்தன.

"நிச்சயமாக அசோக்குமார்,பாலு மகேந்திரா,மணிரத்தினம் எவரது கமராக்களுக்கும் அவளது முகத்தில் தெரியும் கவலையின் கோடுகளைக் காட்டும் திறமை இருக்காது" என்ற விஜயலட்சுமியின் வரிகளினையே என்னாலும் உங்களிடம் இந்தச் சிறுகதைகள் குறித்து சொல்ல முடியும்.

வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம்,சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.
மின்னஞ்சல்:panikkudam@gmail.com
விலை:ரூ.30

4 comments:

Anonymous said...

அறிமுகத்திற்கு நன்றி சோமி.

மலைநாடான் said...

சோமி!

தகவலுக்கு நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

அறிமுகத்திற்கு நன்றி சோமிதரன்.

சோமி said...

நன்றி நண்பர்களே. கிழக்கிலங்கயில் இப்போது நிறையப் பெண்கள் எழுத ஆரம்பித்திருகிறார்கள். என் கைக்கு இன்னும் சில சஞ்சிகைகள் கிடைத்துள்ளன அவற்றை பின்னர் தருகின்றேன்.