Wednesday, March 16, 2016

சாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்

சன நடமாட்டம் உள்ள அந்த வீதியில் ஒரு இளம் தம்பதியினர் நடந்து வருகிறார்கள். அங்காங்கே சிலர் கூடிப் பேசிக் கொள்கிறார்கள். சில நொடிகளில் அந்த இளம் தம்பதியினர் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். ஒரு கொலை நடந்து முடிந்தது. சிசிடிவிக் கமராக்களால் பதிவு செய்து விடமுடியாத பல கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் பதிவுசெய்ய முடிந்த ஒரு கொலைக் காட்சி இது. கொலையுண்டு போன அந்த இளைஞனும் வெட்டுக் காயங்களுடன் தப்பித்த அந்த இளம் பெண்ணும் சற்றுநேரத்திற்க்கு முன்னர் என்ன பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். பெரும்பாலும் தமது எதிர்கால வாழ்வு பற்றிய கனவுகளின் உரையாடலாக அது அமைந்திருக்கக் கூடும்.
  அவளின் 22 வயது இளம் கணவனுக்கு சில நாட்களில் நடக்கும் கல்லூரிப்  பிரியாவிடை நிகழ்ச்சிக்கு புதுச்சட்டை வாங்க வேண்டுமென அழைத்து வருகிறாள் 19 வயதான அந்த இளம் மனைவி. இளம் கணவன் பொறியாளர் படிப்பு முடிந்து  கம்பஸ் இன்ரவியூவில் தேர்வாகி விட்டான். சென்னையில் வேலை. காதல் மனைவிக்கும் காதல் கணவனுக்கும் இதை விட என்ன மகிழ்விருக்கிறது. ஏன் இவர்கள் இத்தனை சின்ன வயதில் திருமணம் முடித்தார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சிறு வயதுத் திருமணத்திற்க்கும் இந்த கொடூரக் கொலைக்கும் ஒரே காரணம்தான். அது சாதித் திமிர். காதலை எதிர்க்கும் ஆணவம்.
சில வருடங்களின் முன்னர் தருமபுரியில் இளவரசன் , சில மாதங்கள் முன்பு கோகுல்ராஜ் இப்போது சங்கர். இவர்கள் மூவரின் மரணங்களுக்கும் காரணமான சாதிகள் வேறு வேறானவை. இந்தச் சாதியில் இவ்வளவு கொடூரம் இல்லை அந்த சாதின்னா உடன தூக்கிடுவானுங்க, அவனுங்கன்னா வெட்டிருவானுங்க இவனுங்கன்னா கொழுதிடுவானுங்க என்பது போன்ற உரையாடல்களை தமிழகத்தில் எல்லாரும் கடந்து கொண்டுதானிருகிறோம். வெளித்தெரிந்த இந்த கொலைகள் மூலம் எந்தச் சாதியும் சாது இல்லை என்பது உறுதி. எந்தச் சாதிக்கும் தனிதுவமென்று எதுவுமில்லை. சாதி ஆணவம் என்பதுதான் பொது அடையாளம். இந்த சாதி ஆணவம் கொலைகளின் மூலம் வெளித்தெரிகிறது. பல இடங்களில் அந்த ஆணவம் அமைதியாக இருப்பதற்க்கு காரணம் சாதி ஆணவம் இல்லை என்பதல்ல. கொலை செய்வதற்கான துணிச்சல் இல்லை என்பதும் மேம்போக்காக  பேசப்படும் போலி சமத்துவமும்தான்.
இன்று சமூக வலைத்தளங்களில் சாதிமறுப்புக் காதலுக்கு எதிராக பல கருத்துக்கள் வெளிப்படுகின்றன. சிலர் ஒரு படி மேலே சென்று சாதி மானம் காக்க வந்த சிங்கங்கள் என்று கொலைகாரர்களைக் கொண்டாடுகிறார்கள். இதுதான் சாதி வக்கிரத்தின் வெளிப்பாடு. சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் இந்த வக்கிரம்தான் சமூகத்தில் இன்னமும் புரையொடிப்போயிருக்கும் சாதிய செருக்கை பறைசாற்றுவன. இன்று சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் எல்லாச் சாதிகளுக்கும் குழுப் பக்கங்கள் இருக்கிறது. ஊரில் இருந்த சாதிச் சங்கங்கள் இணையத்தில் இருக்கிறது. ஊருக்கும் வெளியே இருப்பவர்களின் சாதி வேர் இன்னமும் கெட்டியாக இருக்கிறது. ஊர்ப் பாசம் என்பதும் பற்று என்பதும் சாதி சார்ந்ததுதான். சாதிதான் தமிழர்களின் பண்பாடு என்றாக இருக்கிறது.
இந்த சாதியப் பண்பாட்டின் உதாரணமாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வீட்டையும் மண்ணையும் அதன் வாழ்வையும் விட்டுச் சென்றார்களேயொழிய சாதியை விட்டுச் செல்லவில்லை. விமான நிலையங்களின் கழிவறைகளில் பாஸ்போட்டைக் கிழித்துப் போடத் தெரிந்தவர்களால் சாதியைத் தூக்கியெறிய முடியவில்லை.போருக்குள் இருந்த போது அதை நினைப்பதற்கான அவகாசம் இருக்கவில்லை மற்றொன்று சாதித் திமிருக்கெதிரான புலிகளின் கடுமையான சட்டங்கள். இவற்றை வைத்து சாதி பாகுபாடு இல்லாமல் போய்விட்டதாகவே நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் அது போரில் இருந்து வெளியேறியவர்களிடம் மிகக் கவனமாக பாதுக்காத்து வைக்கப்பட்டுள்ளதுஅய்ரோப்பாவில் 30 வருடங்களுக்கு முன்னார் குடியேறிய ஈழத்தின் அடக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்  ஆதிக்க சாதிப் பெண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தார். இன்று வரை அவர் புறக்கணிக்கப்பட்டு வருவதன் வலியைச் சொன்ன போது என்னிடம் பதிலெதுவும் இல்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவரவர் சத்துக்கு ஏற்ப அவரவர் கொரூரம் இருக்கிறது. இணயத்தில் இந்த கொலைக்கான ஆதரவும் அப்படிப் பட்டதுதான். ஒரு வகையில் தமிழகத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நிலவும் போலி சமத்துவ முகத் திரையை கிழித்து போடுபவையாக இந்த பேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் இருக்கின்றன. ஈழத்திலும் அப்படியான போலி சமத்துவமே போராட்டத்தின் காரணமாக உருவாகியுள்ளது. கலப்பு திருமணத்தை ஆதரிக்காத போதும், கொலை வன்மத்தில் நிறைவுறும் சாதியத்திமிராக ஈழத்தில் அது இல்லையென்பது போராட்டத்தின் பயனான சிறு ஆறுதல். ஆனால் கொலையென்பது சதியத் திமிரின் வெளிப்படையான ஒரு வடிவம் மட்டுமே. தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் சிலர் சொல்வதைப் போல சாதி கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் அதுக்காக கொலை செய்வதெல்லாம் கொடூரம் என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்வது. சாதியை எல்லாத் தளங்களிலும் வளர்த்துவிட்டு கொலை செய்வது தவறென்பது எவ்வளவு மோசமானது.
ஒரு முறை நான் தென் தமிழகத்தில் ஒரு ஊருக்குச் சென்ற போது ஈழம் குறித்த உரையாடால் ஒன்று நடந்தது. அது முடிந்து தனியாக பேசும் போது உணர்வாளர் ஒருவர்  “பிரபாகரன் நம்மவாள் தானே என்று கேட்டார் “. நான் முழிப்பதைப் பார்த்ததும் இல்ல அவர் பிள்ளை தானே என்றார். ஆம் அவர் எங்கள் தேசத்தின் பிள்ளை என்றுதான் சொல்லாம் என நினைத்தேன் அதற்குள் பக்கத்தில் இருந்தவர். இல்லைத் தோழர் பிள்ளைமார் சாதி என்று நினைத்து அவருக்காக போஸ்டர் எல்லாம் போட்டார்கள் அதுதான் என்றார்இல்லைங்க பிரபாகரன் மீனவர் சமூகம் என்றேன். அவர் சொன்னார் ஆரம்பத்தில் பல ஈழ இயக்கங்கள் இருந்தபோது வேலுப்பிள்ளை பிரபாகரனில் இருந்த பிள்ளை காரணமாக பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பலர் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்களாம்.
பறையர் பையன் பள்ளர் பொண்ணைக் காதலிப்பதையும் அருந்ததியரைப் பறையர் காதலிப்பதையும் இவர்கள் அனைவரையும் ஆதிக்கம் செய்யும் மற்ற சாதியினரை தலித்துக்கள் காதலிப்பதையும் இந்த சமுக ஒழுங்கு ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது ஒரு சமூகப் பண்பாடாகவே இருக்கிறது. அது தூய தமிழ்த் தேசியத்திற்க்கு ஒப்பானதா என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது. இங்கு சாதிச் சங்கங்கள் சாதிகளை இனம் என்று குறிப்பிடுவதும், தூய்மைவாதம் குறித்த எனது இந்த அச்சத்திற்க்கு காரணமாக இருக்கலாம். எங்கள் ஊரில்இரு மரபும் தூய வந்த யாழ்ப்பாணத்து சைவ உயர் வெள்ளாளர்என்கிறதில் வருகிற இரு மரபு என்பது அம்மா பக்கமும் அப்பா பக்கமும் எந்த சாதிக் கலப்பும் இல்லாமல் தூய்மையாக இருத்தல் என்பதாகப் பொருள் படுமென ஒரு முறை எழுத்தளார் எஸ்பொ சொன்னார்.
சாதி கடந்து காதல் செய்வதை, காதலின் உச்சத்தை காலம் காலமாக கதை கதையாகச் சொல்லும் சினிமாத்துறையில் இருந்து இந்த ஆணவக் கொலைகளை எதிர்த்து ஒரு வாட்ஸ் அப் அறிக்கைகூட வரவில்லை. இப்போது இந்த தேர்தலுக்கு இரு பெரும் கட்சிகளுக்கு அதரவு தெரித்து தினமும் சந்திக்கும் சாதி சங்கங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் அச்சம் வருகிறது. இந்த சாதிச் சங்களின் சமூகப் பணி என்னவாக இருக்கும் என்ற சிந்தனையே அந்த அச்சத்திற்க்கு காரணம். தமிழக முக்கிய கட்சிகளின் திரைகிழிந்த முகம்தான் ராமதாஸ். பத்திரிக்கையாளர் முன்பாக நாகரிகத்திற்க்குக் கூட கருத்து சொல்வது அவசியமென அவர் நினைக்கவில்லை. ராமதஸ்தான் நாடகக் காதல் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்அண்மையில் நான் பார்த்த முசாபர் நகர் ஆவணப்படத்தில் இந்து வெறியர்கள் லவ் ஜிகாத் பற்றிப் பேசுவார்கள். லவ் ஜிகாத் என்பது முஸ்லிம் ஆண்கள் இந்து பொண்களை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்வது. பாஜக வின் தேர்தல் வெற்றிக்காக லவ் ஜிகாத் உத்தரப்பிரதேசத்தில் எவ்வாறு பயன்பட்டது என அந்த படத்தில் பதிவு செய்யப் படுகிறது. தமிழகத்தில் லவ் ஜிகாத்துக்கு ஒப்பான வகையில் நாடகக் காதல் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கொலைகளை அனைத்து ஆதிக்க சாதிகளும் ரசிக்கின்றன. அவர்களின் வீடுகளில் அவர்கள் பிள்ளைகளை அச்சப்டுத்துவதற்க்கும் தலித் பெற்றோர் பிள்ளைகளைப் பயந்து பயந்து வளர்க்கவும் இது காரணமாகிறது. காதலித்தவனுடன் அந்த பெண் நல்லா வாழ்ந்திடக் கூடாதே என்ற பதட்டம்தான்  அவசர அவசரமாக நடந்து முடிந்த இந்த கொலை. சென்னையில் வேலை கிடைத்து சங்கரும் கெளசல்யாவும் சென்று விட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். இது சாதி ஆணவத்திற்க்கான சவால் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வர்க்க விடுதலை சாதியத்திற்கான அச்சுறத்தல் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதை எழுதி முடிக்கும் இந்த தருணத்தில் நண்பன் ஒருவன் பேசினான். ஈரோட்டில் ஆதிக்க சாதிப் பெண்ணை சில நாட்களுக்கு முன்னர் தலித் அல்லாத இன்னுமொரு அடக்கபட்ட சாதிப் பையன் திருமணம் செய்திருக்கிறான்இந்த கொலையைப் பார்த்த பிறகு அந்த பையன் விட்டில் மொத்த குடும்பமும் மரண பீதியிலிருக்கிறார்கள் என்றான் அந்த நண்பன் பதட்டமாக. இந்த பதட்டம்தான் கொலை செய்தவர்களின் வெற்றி. வெளியான அந்த சிசிடிவிக் காட்சியின் வெற்றி. கொலைக் கெதிரான கோபத்தை விடவும் பயத்தையே இது அதிகம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது இந்த தேசத்தின், சமூகத்தின் மிகப் பெரும் அவமானம்

No comments: