Thursday, March 10, 2016

புலிப் பெண்கள்

மற்றுமொரு பெண்கள் தினமான இன்று இதை எழுதிவிடவேண்டும்  என நினைத்தேன். அடக்கப்பட்ட இனத்திற்குள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் வாழும் பெண்கள் பாலினச் சிறுபன்மையினராகக் கொள்ளப்படும் ஒரு சமூகத்தில் வீரம் செறிந்த பெண்கள் படையணிகளின் போராட்டம் நிகழ்ந்தது முடிந்தது. அத்தகைய போராட்டத்தில் முன்னணியில் நின்று மரித்துப் போனவர்கள் எழுதிவைத்த குறிப்புக்களில் மிக முக்கியமான அனுபவப் பதிவாக வந்திருக்கும் ஒரு கூர்வாளின் நிழலில்நூலை முன்வைத்தே இதை எழுத முயல்கிறேன். விடுதலைப் புலிகளின் அரசியல்துறையின் மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி தனது மரணத்திற்க்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த பொழுதுகளில் எழுதி முடித்த தன் வரலாற்றுப் பதிவு இந்த நூல்.

2003 மற்றும் 2004 இல்  கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் தினங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒரு ஊடகக்காரனாக எனக்கு அப்போது வாய்த்திருந்தது. ஊர்வலம், பொதுக் கூட்டம், கலைத்துவ வெளிப்பாடுகள் என போராளிப் பெண்களும் பொதுப் பெண்களும் கூடி எழுந்து நிற்க்கும் நிகழ்வு. இது போன்ற மற்றுமொரு எழுச்சி நிகழ்வு மாலதி படையணி கிளிநொச்சி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த வீரத்தைப் பறைசாற்றும் விழா. கிளிநொச்சி வீதியெங்கும் பெண் போராளிகள் நிறைந்திருந்தனர். அப்போது சமாதானத்தின் கதவுகள் A9 நெடுஞ்சாலையில் திறந்து விடப் பட்டிருந்ததால் உலக மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அந்த மைதானத்தில் தலைவர் பிரபாகரனைத் தவிர மற்றைய தளபதிகள் அனைவரும் வெளிப்படையாகத் திரிந்தனர். ஒழுங்குபடுத்தும் பொறுப்பில் தமிழினி அக்காவும் முன்னின்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு அவர் பெரிய பழக்கமில்லை. பாவடை சட்டையில் தலைகுனிந்து நடந்து செல்லும் பெண்களை அதிகம் பார்த்திருந்த எனக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னார் வரியுடை தரித்த அந்த பெண்களின் மிடுக்கு அதிக கவர்ச்சியுடையதாக இருந்தது. நான் 10 வயதாக இருக்கும் போதே இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டிருந்தமை சூழலில் ஒரு அன்னியத்தை ஏற்படுத்தியிருந்த்து. பெண் கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் கட்டி இழுத்துவரப்பட்டு வீதிகளில் பிரமாண்டமாக நிறுத்தப் பட்டிருந்தன.   நான் பெண் போராளிகளை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

 அந்த மைதானத்திலேயே மாலதி படையணியின் ஒரு தாக்குதல் நடவடிக்கையின் மாதிரியைச் செய்து காட்டினர். ஆக்ரோசமான ஒத்திகைப் பயிற்சியாக அது இருந்தது. பெண் போராளிகளின் கைகளில் ஒரு துப்பாக்கியும் சிலர் கைகளில் கமெராவும் இருந்தது. அங்கே ஆண்களுக்கு எந்த வேலையும் இருக்கவில்லை. பல சிங்களப் பாத்திரிகையாளர்களுக்கு பேச்சே வரவில்லை. மச்சான் இந்த நாட்டுக்குள் இப்படியொரு பெண்களா என்று வியந்தார்கள்.  சிறிலங்காவின் பெண்களில் இருந்து தமிழீழத்தின் பெண்கள் வேறுபட்டிருக்கிறார்கள் என்பதே அவர்களின் வெளிப்பாடக இருந்தது. அடுத்தநாள் சிங்கள ஆங்கில பத்திரிகைகள் பலவற்றின் முகப்புப் படங்களாக அந்த நிகழ்வு இருந்த்து.   இந்த நிகழ்வுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நான் தினக்குரல் பத்திரிகையில் புலிகளின் புகைப்படப் பிரிவு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் பெண் ஓளிப்பதிவாளர்கள் போர்க்களங்களில் துப்பாக்கிகளுக்கும் வெடித்துச் சிதறும் குண்டுகளுக்கும்  நடுவே மரணத்தின் முன்னே படம்பிடித்த அனுபவங்களைப் பதிவு செய்திருந்தேன். உண்மையில் அந்த கட்டுரை வெளியான 2002 இல் கமெராமென் என்ற சொற்றொடரே அதிகம் புழக்கத்தில் இருந்தது கமெராவுமென் என்று யாரும் உச்சரித்தில்லாத சூழல் அது. இப்போது வரை பெண்கள் கமெராவுக்கு முன்பாக நிறுத்தப்பட வேண்டியவர்கள் கமெராவை இயக்கும் வல்லமை ஆண்களுடையதே என்பது பொதுப் புத்தியில் இருந்து முற்றாக விடுபடவில்லை. ஆனால் புலிப்பெண்கள் அதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்து கொண்டிருந்தார்கள். தலைவரும், தமிழ்ச் செல்வனும் பெண்கள் அனைத்து செயற்பாடுகளிலும் இயங்க வேண்டும் என்ற எண்ணதுடன் இருந்தார்கள் என தமிழினி தனது நூலில் பதிவு செய்கின்றார். பெண்கள் ஆண்களுக்கு நிகரான வலிமையுடையவர்கள் என்பதை பிராபகரன் உணர்ந்திருந்தார் என்பதை தலைமை மீதான தமிழினியின் இப்போதைய விமர்சன்ங்களுக்கு அப்பாலும் அவர் பதிவு செய்கின்றார்.  

 2003 இல்தான் எனக்கு தமிழினி பழக்கமானார். அவர் அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் மருத்துவப் பிரிவு போர்பயிற்சி பிரிவு புகைப்படப்பிரிவு எனச் சில பல பிரிவுகளின் போராளிகள் அறிமுகமானார்கள்.  மற்றொருபுறம் வெளிச்சம் இதழின் ஆசிரியர் கருணாகரன் மூலமும் புலிகளின் குரல் வானொலி தவபாலன் மூலமும் சில போராளிகள் அறிமுகம் கிடைத்தது. பின்னாட்களில் தமிழீழ தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப் பட்ட போது இசைப்பிரியா அறிமுகமானார். நான் என் ஊடகப் பணிக்காக எப்போது வன்னி சென்றாலும் தவறாமல் சந்திக்கும் நபராக தமிழினி இருந்தார். அவரின் அலுவலகத்தில் வைத்துதான் நான் மலைமகளையும் சதித்தேன். போர்க்குணமும் எழுத்து வன்மையும் கொண்டவர் மலைமகள். அமைப்புக்குள்ளும் வெளியேயும் வெளிப்படையாகவே இருக்கும் ஆணாதிக்க மனோநிலைக்கு இந்த புலிப் பெண்கள் எதிர்வினையாற்றிக் கொண்டிந்தது எனக்கு தெரியும். ஆனால் வெளிப்படையாக வீரம் செறிந்த பெண்கள் பற்றிய பிரச்சாரங்களை மட்டுமே தமிழினி அப்போது விரும்பியிருந்தார். புலிப்பெண்களிடம் குறை கண்டுபிடிக்க காத்திருந்தவர்களுக்கு பிடி கொடுத்துவிடக் கூடாதென தமிழினி அப்போது எண்ணியிருக்கலாம்

பெண்களுக்குக்கான படையணியையும் பெண்களுக்கான உடையையும் நேர்த்தியாக உருவாக்கிய தலைவரைப் பற்றி அவர் அப்போது பெருமையாகச் சொல்வார். இப்போதும் இந்த நூலிலும் பெண்களையும் அவர்களின் வீரத்தையும் அறிவையும் குறைத்து மதிப்பிடாத தலைமை குறித்து தமிழினி பல தடவை குறிப்பிடுகிறார். இந்திய ராணுவத்திற்க்கு பின்னான ஈழப் போர்களத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது ஆண்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இருந்திருக்கிறது என்பது தமிழினியின் தன்வரலாற்று நூலின் மூலம் உணர்ந்துகொள்ளமுடியும். இயக்கம் மீதான விமர்சனங்களும் கோபங்களும் ஆற்றாமைகளும் வெப்பிராயங்களும் கண்டனங்களும் நிறைந்ததாக தமிழினியின் நூல் இருக்கிறது. ஆனால் இந்த பிராந்தியத்தில் நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கும் எந்தவொரு விடுதலைப் போராட்ட்த்தை விடவும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் இருக்கும் சிறப்பே பெண்கள் படையணிகள்தான். இன்று குர்திஸ்தானிலும் அன்று எரித்திரியாவிலும் போர்களத் தலைமையேற்ற பெண்கள் அணிகளின் வீரத்திற்க்கு ஒப்பான அல்லது அதனிலும் சிறப்பான  வீரத்தை ஈழப் பெண்களும் கொண்டிருந்தார்கள்.அவர்கள் களமாடுபவர்களுக்கு துணைபுரியும் அணியாக இல்லாமல் களமாடும் அணியாக இருந்தார்கள்.

இதனாலேயே சமாதானப் பேச்சு நடந்த காலத்தில் ஒருமுறை விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பெண்மை உணர்வு அற்ற மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். உணர்வு மரத்தவர்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதற்க்கு தமிழினி கடுமையான எதிர்வினையாற்றியிருந்தார். இதனை அடிப்படையாக வைத்து பிபிசி தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட ஆவணப் படத்தில் பிரான்ஸிஸ் ஹாரிஸனோடு அப்போது நானும் பணியாற்றினேன். வீரம் செறிந்த போர்களங்களில் களமாடத் தெரிந்த அந்த பெண்கள் எல்லோருக்கும் வைதீக ஆச்சரங்கள் நிறைந்த சைவ பாரம்பரியத்தில் ஊறிய சாதியச் சிறப்புமிக்க ஆண்மேலாதிக்க  ஈழத் தமிழ் வாழ்வுக் களத்தில் களமாடத் தெரியுமா என்ற கேள்விக்கு தமிழினியிடம் அப்போது முழுமையான பதில் இருக்கவில்லை ஆனால் இப்போது இந்த நூலில்  அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்பெண்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்த போதும் தமது உடல் வலிமையை நிருபிக்கக் கூடியதாக இருந்த போதிலும் அவர்களது அடிப்படைச் சிந்தனைகளில் எந்தளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக் குறியானது. குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்து வெளியே வந்து இயக்கம் என்ற அமைப்புக்குள் புகுந்துகொண்ட புலிப் பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்திற்க்கு உட்பட்டார்கள் என்று சொல்ல முடியாது. எப்படிக் கட்டுக் கோப்பான குடும்பப் பெண்களாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ அதேபோல கடினமான இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்.” இந்த கருத்தை , குறிப்பாக யாழ்ப்பாண மைய கலச்சாரச் சமூகத்தில் நிகழ்ந்திராத சமுக மாற்றத்தினூடாகவே பார்க்க முடியும்.

தனது நூலில் தமிழினி பெண்கள் குறித்துப் பேசியிருப்பவை போருக்குப் பின்னரான வாழ்வில் போராளிப் பெண்கள் சமுகத்தினால் எதிர்கொள்ளப்படும் முறையின் தாக்கத்துடன் இணைத்தே பார்க்கப் பட வேண்டும். பல பெண்கள் இயக்கத்தில் சேர்வதர்வதற்க்குத் தூண்டுதலாகவும் ஆட்சேர்ப்பில் பிரபலமான பிரசாரகராகவும் தான் இருந்ததைப் பதிவு செய்யும் தமிழினிக்கு இன்று அந்த பெண்கள் வந்து நிற்க்கும் இடம் நிச்சயம் வலியை ஏற்படுத்தியிருக்கும். ஒரே ஆடையுடன் பல நாட்கள் வெயிலிலும் மழையிலும் களமுனையில் நின்ற பெண்களின் தீரம் பற்றி தமிழினி பதிவு செய்கிறார். போராட்டத்துக்கு வெளியே பெண்கள்ளின் சமூக வகிபாகம் என்பது பரதம் ஆடுவதும் அழகுபடுத்துவதும். வெளிநாட்டில் உள்ளவர்களைக் கரம்பிடிப்பதும் பாதுகாப்பான வேலை பெறுவதும் என்பதாகத்தான் பெரும்பாலும் இருந்ததுவிடுதலைப் புலிகளின் மணக்கொடைத் தடைச் சட்டம் என்பதும் வலுவிழந்தே இருந்தது என்பதை தமிழினி குறிப்பிடுகிறார். அது கடுமையாக்கப்பட்ட போது அதற்க்கான மாற்று வழிகளில் சீதனமென்ற மணக் கொடைப் பரிமாற்றத்தை தமிழ் சமூகம் நடத்தியது. பல சந்தர்பங்களில் விடுதலைப் புலிகளால் அவை கண்டு பிடிக்கப்பட்ட போது வாங்கிய சீதனத்தில் இருந்தே தண்டப் பணம்  கட்டியதும் நடந்திருக்கிறது. இப்போது புலிகள் இல்லாத போது புலம்பெயர் நாடுகள் வரையிலும் சீதனம் வாங்குவது என்பதை திருமணத்தின் சம்பிரதாயங்களில் ஒன்றாக வைத்திருகிறார்கள். அதுகுறித்த கூச்சம் கூட வாங்குபவர்களுக்கு இருப்பதில்லை.

இன்று 10 மில்லியன் இலங்கை ரூபா கொடுத்து வாங்கப்படும் டாக்டர் மாப்பிள்ளைகள் முதல் பல ரேட்டுகளில் போகும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் வரை எதுவும் மறைவாக நடப்பதில்லை. அண்மையில் பெண்கள் சீலை அணிவதைக் கட்டாயமாக்கும் அறிவிக்கை ஒன்று யாழ் பல்கலைக்கழத்தால் வெளியிடப்பட்டது. சேர்ட்டும் நீளக் கால்ச்சட்டையும் இடுப்பில் பட்டியும்  அணிந்து பெண் போராளிகள் உலாவியது இந்த பல்கலைக்கழகச் சூழலில்தான். போலிப் பண்பாட்டைப் பேணும் யாழ்ப்பாண மனோநிலையில் இந்த அறிவிக்கை ஒன்றும் அத்தனை அபத்தமானது கிடையாது. இன்று கலாச்சாரக் காவலர்களால் நடத்தபடும் பல ஈழத்து செய்தி இணையத் தளங்களால் அவமானப்படுத்தப்படும் பெண்களின் உரிமை குறித்து பேச யாருமில்லைபுனர்வாழ்வில் இருந்து திரும்பிய பென்ணின் எதிர்காலம் குறித்த அச்சங்கள் போர் முடிந்த 7 வருடங்களின் பின்னரும் தொடர்கிறது. பெண் போராளிகளின் ஆயுதங்களின் மீதிருந்த அச்சம் இன்றில்லை என்பதால் ஆண்கள் ஆளப்பிறந்த ஆண்களாக முழுமையாக உணர்கிறார்கள்.
 தமிழ் இளைஞர்களுடன் உரையாடும் பொழுதுகளில் அவர்கள் பேசும் பேச்சுக்கள் பெண்கள் மீதான பாலியல் வன்மத்துடனேயே இருக்கிறது. முன்னர் இயக்கப் பெண்களை ஒரு வித மிரட்சியோடும் பயத்தோடும் வேறாகவும் பார்த்தனர். அதே நேரம் மற்றைய பெண்கள் குறித்தான அவர்களின் பார்வையில் பெரிய மாற்றம் ஏதுவும் இருக்கவில்லை. இந்த பின்னணியில் இப்போது எத்தகைய சூழல் இருக்கும் என்பதை நாம் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும்.

தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில்  நூலை முன் வைத்து நான் இதனை எழுத நினைத்தாலும் அந்த நூலின் பெண்கள் குறித்தான பதிவுகளின் தாக்கமாகவே நான் இதனை பதிவு செய்ய விளைகிறேன். முள்ளிவாய்காலின் இறுதி நாட்களில் பெண் போராளிகளின் நிலை மிகப் பரிதாபமாக இருந்த்து என்கிறார் தமிழினி. அதுவரை போராளிகளாக இருந்தவர்கள் அந்த கணம் முதல் ஈழத்துப் பெண்காளாக மாறுகிற தருணம் அல்லது நிர்பந்தம்அந்த இடத்திலே பல புலிப் பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று சொல்லும் தமிழினி தான் அந்த முடிவை எடுக்காமால் வருவதை எதிர் கொள்ள முடிவெடுத்ததாக கூறுகிறார். அன்று தற்கொலை முடிவை எடுக்காமல் எதிர் கொள்ளும் முடிவை எடுத்த பலர் அரச படையினரை எதிர் கொள்ள முடியாமல் போயினார். இதைவிட வலியானது எல்லாம் முடிந்து ஊர் மீண்ட பின்னர் இந்த சமூகத்தை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் நமக்குச் சொல்லிவிட்டுச் சென்ற சேதி என்ன?


தமிழினியின் நூலைப் படித்த போது அதன் உள் அரசியல், வெளி அரசியல் புலி அரசியல், புலி எதிர்ப்பு அரசியல் ல்லாவற்றையும் கடந்து ஈழப் பெண் அரசியல் குறித்த கேள்விகளே அதிகம் இருந்தது. புலிப் பெண்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்திருக்கலாம். அந்த தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவர்கள் பெண்களாக தலைநிமிர்ந்துவிட முடியாமல் நாம் வாழும் இந்த சமூகம் அவர்களைத் தோற்கடிக்க முயல்கிறது. உலகின் உச்சபட்ச பெண்ணுரிமை பேசும் சமூகத்தின் போராட்டங்களைவிடவும்  வீரியமான செயலை போர்களத்தில் அந்த பெண்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் நாம் நிர்வாணப்படுத்தப்பட்ட அந்தப் பெண் உடல்களை வைத்து மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். எதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமானாலும் நமக்குப் பெண் உடல்தான் தேவையாக இருக்கிறது. அது உயிருடன் இருக்கும் பெண்ணா கொல்லப்பட்ட பெண்ணா என்பது மட்டும்தான் வேறுபடுகிறது. ஒரு போராட்டத்தின் பயன் என்பது போர் வெற்றி தோல்விகளுடன் மட்டும் முடிந்து போவதல்ல.  அது உருவாக்கிய தாக்கம் என்ன ? அதன் மூலம் அடைந்திருக்கும் சமுக மாற்றம் என்ன? என்பதுதான் அதன் படுதோல்வியை மீண்டும் மீண்டும் பறைசாற்றுவன.  ராணுவ ரீதியில் தோல்லிவியடைந்த போராளிகள் சுயநலமும் பிற்போக்கும் நிறைந்த நம் சமுகத்தின் முன்னே மீண்டும் மீண்டும் தோற்கடிப்படுகிறார்கள்.

No comments: