Thursday, February 18, 2016

அரசய்யா...

. யாழ்ப்பாணத்து நாடக வரலாற்றில் தனியிடம் பெற்றவரும் ஈழப் போராட்டத்தில் உறுதியோடு இருந்தவரும் உயிருடன் இருக்கும் போதே விடுதலைப்புலிகளின் தலைவரால் மாமனிதர் கெளரவம் பெற்றவருமான திருநாவுக்கரசு என்ற அரசு அய்யா வாழ்வை முடித்துக் கொண்டு விடைபெற்றார். இழப்பு என்பது ஒரு நீண்ட அனுபவத்தின் இழப்பு. நல்லூரில் முதல் முதலில் நண்பர் ஆசிரியர் பா.அகிலன் அவர்களுடன் அரசைய்யாவை சந்தித்தேன். அவரைக் குறித்து ஆவணப்படுத்துவது எங்களின் அப்போதைய நோக்கம். மேவி இழுத்த தலைமுடியும் முறுகேறிய மீசையும் அஜானுபாகுவான உயரமும் உடல் கட்டும் கொண்டவர். பத்தாண்டுகள் முன்பு அவருடனான உரையாடலின் சில பகுதிகளை காட்சி பதிவு செய்திருந்தேன். காலச் சூழலில் நிறைய விசயங்கள் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.. இப்போது ஏறத்தாள 10 ஆண்டுகள் கழித்து நான்கு மாதங்களிற்க்கு முன்னர் அவரை மீண்டும் சந்தித்து உரையாடினேன் மேலும் சில கதைகளைப் பதிவு செய்தேன். சத்தியாகிரக காலகட்டத்தில், இலங்கை ராணுவம் சத்தியாக்கிரகம் இருந்தவர்களை கலைப்பதற்க்குச் சென்ற போது குறுக்கே பாய்ந்து தரையில் படுத்த்க் கொண்டவரை துப்பாக்கியால் சுட முயன்றது ராணுவம். தன்னைச் சுட்டுவிட்டு தமிழரசு தலைவர்களை நோக்கிச் செல்லுமாறு முழக்கமிட்டார். அந்த காட்சியைப் பதிவு செய்த புகைப்படம் ஈழ அறவளிப் போராட்டக் கால கட்டத்தின் புகழ்மிக்க புகைப்படங்களில் ஒன்று. பிரிட்டிஸ் ஆட்சியில் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். பாக்கிஸ்த்தான் பலுசிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அவர் ராணுவ வீரராக இருந்திருக்கிறார். பின்னர் இலங்கை திரும்பி யாழ்ப்பாணத்தில் நாடக சபாக்களில் நடிக்க ஆரம்பித்தார். போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னார் போராட்டங்களில் வெறுப்பும் அடைந்தார். தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தார். நான் கடைசியாக சந்திக்கும் போது கூட நாடகங்கள் குறித்தும் ராணுவீராக பணியில் இருந்த காலம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். இறுதிவரை மிடுக்குடனேயே இருந்தார் ஆனாலும் அவரது மனது சோர்வுற்றபடியே இருந்தது. நான் இறுதியாக சந்திக்கும் போது கூட அவரது மகளின் அகால மரணம் குறித்தும் தான் வாழும் மண்ணின் சிதைவுகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அவர் புகைப்படக் காரராகவும் இருந்திருக்கிறார். லேசாக மழை தூறிக் கொண்டிருந்த நாளில் அவர் தந்த தேனிரைப் பருகியபடியே உடைந்து போன அவரின் வீட்டின் தரையில் மாமரத்துக்கு அருகில் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். இன்னும் எத்தனை நாளோ என்றார். அடுத்த முறை வந்து சந்திக்கிறேன் என்றேன். அவருடன் சென்றூ இன்னும் சில பேரை சந்திப்பதாக திட்டம் வைத்திருந்தோம். அவரையும் அவர்களையும் உரையாட வைத்தால் இன்னும் பலகதைகள் கிட்டும். நாம் தொலைத்துவிட்ட , என் தலைமுறைக்கு தெரியாது போன பல கதைகளின் சொந்தக்காரர்கள் அவர்கள். நான் தயாரித்து விரைவில் வரவிருக்கும் ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆவணத் தொகுப்பில் அவரும் பேசுவார். நான் அடைந்த வெற்றியென்பதும் மகிழ்வென்பதும் இவர்களுடன் பழக முடிந்ததும் அவர்களின் கதைகளைக் கேட்கமுடிந்ததும் மட்டுமே.......

No comments: