Monday, February 26, 2007

World Record......சிறிலங்கா

இலங்கை இந்தியாவுக்கு பக்கதில இருந்தாலும் 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியா சாதிக்காத சாதனையை இலங்கை சாதித்திருகிறது.எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன்

Oggetto: World Record......



Mahinda Chinthana has kept a world record in having the largest cabinet.
The below is a comparison between the cabinets of some countries and that of Sri Lanka.


Canada - 31 ministers for 37 million people
India - 20 ministers for 1000 million people
Russia - 25 ministers for 150 million people
Malaysia - 23 ministers for 25 million people
Bangladesh - 22 ministers for 150 million people
America - 15 ministers for 274 million people
Pakistan - 13 ministers for 130 million people
Sri Lanka - 108 ministers for 19 million people

Monthly salary of a cabinet minister ? Rs. 65,000
Monthly salary of a non cabinet minister ? Rs.63,500
The incentive for participating for a parliamentary session ? Rs.500
The incentive for participating for a select committee? Rs.200
Monthly fuel incentive for a cabinet and a non cabinet minister ? Rs. 75,000
Monthly fuel incentive deputy minister - Rs.50,000
Monthly incentive for the personal telephone ? Rs.20,000
Monthly mobile incentive ? Rs. 10,000
The facility is provided to take an unlimited amount of IDD and local calls from the official telephone for a month.

Every minister has a right to employ 4 secretaries as media, personal,
coordinating, and public relations. Vehicles, fuel incentives, telephone
incentives and limited entertainment incentives are provided for all of
them from the ministry.

For the 18 cabinet and non cabinet ministers, the monthly expense for fuel
From the government is Rs:1,350,000. Also for the 10 new deputy ministers,
Rs:500,000 should be separated. The total monthly fuel expense for them is
Rs:1,850,000.

Oh.... what a blessed Nation.....

Friday, February 23, 2007

கடைசிக் கடிதம்..........

பிரியத்துகுரிய என் செல்பேசியே,

இப்போது நீ யாரோ ஒருவரின் வாய்க்கும் காதுக்கும் இடையில் சிக்குப் பட்டிருக்கலாம்.

எவனோ ஒருவன் சொல்லும் ஆபாச ஜோக்கை இன்னொருவனுக்கு கடத்திகொண்டிருகலாம்.

ஒரு இனிய காதலர்களின் மொழி உன்னூடே பகிரப் பட்டுக்கொண்டிருக்கலாம்.

கலைஞர்,திராவிடம் ,செயலலிதா பற்றிய அரசியல் பேச்சுக்கள் நடக்கலாம்.

யாரவது ஆன்மிக அருளுரை நிகழ்த்திக் கொண்டிருக்காலாம் ஒரு பக்த்தன் உன் வழியே அதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

ஒருவனை கொல்லும் சதித் திட்டம் உன் ஊடே நிகழ்த்தப் படலாம்.
இப்படி இப்படி இன்னும்...

சாரு நிவேதிதா கற்பனை செய்தது போல் நானும் கற்பனை செய்து பார்த்தேன்...வேண்டாம்....
இதற்கு மேல் என்னால் கற்பனை செய்வது இலகுவானதாயில்லை.இன்னும் வலிக்கிறது
உனக்கு சாருவையும் தெரியும் போனவாரம் தனது கவிதைப் புத்தகம் தந்து விட்டுப் போன சேகரையும் தெரியும்.கடந்த மூன்று வருடத்தில் எனக்கு தெரிந்த அத்தனை பேரையும்தெரிந்தவள் நீ.
உனக்கு தெரியாமல் நான் சல்லாபித்ததுகூட இல்லை.நான் உறங்கும் போதும் என் கூடவே அருகில் விழித்திருந்து அதிகாலையில் நேரம் சொல்லி எழுப்பியவள் நீ.நடு இரவிலும் என்னை உலகத்தோடு இணைத்தவள். நான் ஒரு பத்திரிகைக்காரன் என்பதை நள்ளிரவில் தட்டியெழுப்பி சேதி சொல்லிப் புரிய வைத்தவள்.உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த அரசியல் இரகசியங்கள் எத்தனை(என் காதல் அரசியல் வரைக்கும்).எத்தனை முக்கியத்துவம் மிக்க தொலைபேசி இலக்கங்களை உன்னுள் தேக்கி வைத்திருந்தாய்.

என் தோழிகளுக்கும் எனக்குமான ஊடாட்டத்தை முற்றிலும் அறிந்தவள் நீ.அன்று அவள் பேசிய வார்த்தைகளில் நொந்து போயிருந்த எனக்கு நீடித்த தனிமையில் இருந்த ஒரே ஆறுதல் நீதானே.என் தோழியின் பல குறுஞ்சேதிகளைத் தேக்கிவைத்து நினைவுகளில் என்னை தினம் தினம் மகிழ்ச்சிப் படுத்தியவன் நீ. இன்றைக்கு எல்லாவற்றையும் உன்னுள் வைத்து கொண்டு என்னைப் பிரிந்து போனாயோ.

என் தோழி என்னைப் பிரிந்த பொழுதுகளிலான அதே வேதனையே இப்போதும் என்னுள்.
விடிய விடிய உன்னில் பேசியிருகிறேன்.அந்த பொழுதுகளில் என் தோழியின் துக்கத்தையும் வேதனையையும் நீ தூங்காது விழித்திருந்து உள்வாங்கினாய்
என் துயரம் சந்தோசம்.அழுகை,வன்முறை,அறிவு ,உணர்வு எல்லாமும் தெரிந்த ஒருத்தி நீ மட்டும்தான்.

நீ பிரிந்து போன போதுதான் எனக்கு தெரிந்தது எனக்கும் உனக்கும் இத்தனை உறவிருந்ததென்று. ஒரு நாள் முழுவதும் சாப்பிடவே பிடிக்கவில்லை அழுகை அழுகையாக வந்தது.ஒரு செல்போன் போனதுக்கு ஏன் இவ்வளோ அதுவும் பழைய போன், வித்தாலும் 1000 ரூபா தேறாது என்று என் நண்பன் சொன்னான் அவனுக்கு தெரியாது உனக்கும் எனக்குமான உறவு
புதிய போன் வாங்க வேண்டிய தருணங்களிலெல்லாம் உன்னை என்னில் இருந்து பிரிக்கமுடியாமல் உன் கூடவே இருந்தேனே உனக்கு மட்டும் எப்படி மனசு வந்தது என்னைப் பிரிந்து செல்ல.

அந்த திங்கள் பின் காலைப் பொழுது வரை தூங்கி கண் விழித்த போது என்னில் நீ பிரிந்திருந்தாய்.நான் உன்னைப் பிரிந்து தூங்கியதில்லையே.என் நண்பன் உன்னைப் பிரித்து மேசையில் தனித்து வைத்த கோபத்தில் என்னை விட்டுப் போனாயோ இல்லை அப்படிச் செய்வதற்க்கு நீ சாதாரண மனுசி இல்லையே. இல்லை உன்னை யரோ பலாத்காரமாக திருடிச் சென்றிருக்கிறார்கள்.அவர்களோடு நீ முரண்டு பிடித்திருப்பாய்.அவர்கள் யாரிடமாவது இப்போது உன்னை விற்றிருக்க கூடும்.

உன்னை போலவே என் கூட இருந்த ஒரு டிஜிற்றல் கமரா என்னை விட்டுப் போனதன் பின் வந்தவள் நீ.உனக்கு அது பற்றிய நிறையக் கதைகள் சொல்லியிருகிறேன்.நண்பன் செந்தூரன் விருபிய கமெரா அது.அவன் அகாலமாக இறந்து சில நாட்களில் அதுவும் அகாலமாக என்னை விட்டுப்போனது. எனக்கு தொடர்ந்து வலியைத் தந்த அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் பிறகு உன்னில் ஒன்றித்தேன்.மனிதர்களைவிடவும் உன்னை நான் நேசித்தேன்.நான் விரும்பியும் இருக்கமுடியாமல் தவிக்கிற நானாக இருத்தலில் நீ நீயாக இருந்தாய்.நானும் உன்னில் மட்டும்தான் அதிகம் நானாக இருந்தேன்.என் கோபத்தில் எத்தனை தடவை நீ அடிபட்டிருப்பாய்? உன்னை நான் தூக்கியெறிந்த பொழுதுகள் எத்தனை. உன்னை இந்தனை கொடுமைப் படுத்திய போதும் எனக்காக எப்படி உன்னல் இயங்க முடிந்தது என்று நானே ஆச்சரியப் பட்டேன்.

இதற்கு மேல் எழுத முடியவில்லை. இபோது தவிர்க்கமுடியாமல் புதியவள் ஒருத்தி வந்திருக்கிறாள்.அவள் உன்னை விட பெறுமதியானவளாம்.அழகானவளாம்.என்னைப் படமெடுகிறள்.பாட்டுப்பாடுகிறாள்,நியும் பாடக் கூடியவள்தான் ஆனால் நான் உன்னில் பாட்டை ரசித்ததில்லை.என் குரலைப் பதிவு செய்கிறாள்.இன்னும் நிறைய சாகாசங்கள் செய்கிறாள். ஆனால்,என்னால் இன்னும் அவளோடு இணைய முடியவில்லை. நீ கூட இருந்த போது இருந்த உணர்வு இல்லை.

அடுத்த முறை சிலவேளை உனக்கு நான் மடல் எழுதலாம் அப்போது அவள் என்னில் நெருங்கியிருக்கலாம்.இதுதானே மனித இயல்பு.உன்னைப் பற்றிய வலி நிறைந்த உணர்வுகளை சுமந்த படியே இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளுவது எனக்கு அவசியமாகிறது.கால ஓட்டத்தில் நீயும் கூட என்னை மறந்து விடுவாய்.என்னுடன் புதியவள் அப்போது மிக நெருகமானவளாக இருக்கலாம். நினைவுகள் மட்டுமே அப்போது நம்மிடம் மீதமாக இருக்கும்.

என் பிரிய செல்போனே நான் உன்னில் இருந்து விடை பெற்றுக் கொள்ளுகிறேன்.
பிரியமுடன்
உன் தோழன்
சோமி.


குறிப்பு: அன்பு நண்பர்களே என் செல்போன் எனது வீட்டில் வைத்தே திருட்டுப் போன காரணத்தால் உங்கள் அனைவரினதும் தொலைபேசி, செல்லிடபேசி இலக்கங்கள் தொலைந்துவிட்டன தயவு செய்து போன் பண்ணூகள் இல்லையெனில் மிஸ்டுகால் கொடுங்கள் நான் போன் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளுகிறேன்.இல்லையெனில் குறுஞ்செய்தி அனுப்புங்கள்.எனது பழைய இலக்கமே தொடர்ந்தும் பாவனையில் உள்ளது.(0091 9940 390 479)

Friday, February 16, 2007

தமிழாலயம்.........

தமிழாலயம். இந்த பெயர் கொழும்பு இளவட்டங்களுக்கு நிறையப் பரிட்சயமானது.சாதிய,வர்க்க,கருத்தியல்,காதலியல்,வேதியல்,விளங்காதவியல்,தேசியம்,பண்பாடு,
கலாச்சாரம் உள்ளிட்ட இன்ன பிற விடயங்களில் ஆர்வமுள்ள இளந்தலைமுறையினரை ஒன்றிணைத்த இடம்.உயர்தரப் பரீட்சை எடுத்துப் போட்டு சும்மா இருக்கிற காலத்தில பயனுள்ள வேலையளச் செய்யுறதுக்கு ஆசைப் படுகிற கூட்டத்துக்கான இடம்

நான் கொழும்பு வந்த புதிதில் அடக்கமுடியாத என் ஆர்வத்தில் சேர்ந்து கொண்ட அமைப்பிது.நண்பர் ஏ.ஆர்.திருச்செந்தூரன்(இவர் இப்ப பெரிய வானொலி அறிவிப்பாளர்)எனக்கு தெரிந்த ஒரே கொழும்பு நணபர்.சோமி எங்கள மாதிரி ஆர்வமுள்ள இளஞர்களுக்காக உருவான தமிழாலயம் எண்ட அமைப்பில உங்களைச் சேர்த்து விடுறன் எண்டு அழைத்துப் போனார்.

நான் அவ்வப் போது உயர்தர வகுப்புகளுக்கு செல்லும்(எந்த காலத்தில வகுப்புக்கு ஒழுங்கா போயிருக்கம்) கொழும்பு தமிழ்ச்சங்க கட்டடத்தில் நடந்த தமிழாலயக் கூட்டத்திற்குச் சென்றேன்.ஆக கொழும்பு பெட்டையளோட சேர்ந்து நாடகம் போட ஒரு அரிய வாய்ப்பு எண்ட புழுகம் ஒரு புறம் என்னை உசுப்பேற்றியது.அநியாயத்துக்கு காலுக்குச் சப்பாத்து வேற போட்டு கொண்டு தமிழ்ச்சங்கம் வந்து சேர்ந்தேன்.

5 மணிக்கு கூட்டமென்றார்கள். எப்போதுமில்லாத அதிசயமாக ஆர்வத்தில 5 மணிக்கே நான் கூட்டத்துக்கு போனே 5.40 க்கு ஒரு நாலு பேர் வந்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.6 மணிக்கு இன்னும் இருவர் வந்து சேர்ந்தனர். என்னை அறிமுகப் படுத்த வேண்டிய திருச்செந்தூரன் 6.10 கு வந்து சேர்ந்தான். ம் 6.15 க்கு வந்து சேர்ந்த மூவரில் ஒருவர்தான் அன்றைய கூட்டத்துக்கு தலமையாம். சரியெனகூட்டம் ஆரம்பமாகியது.

இவர்தான் சோமிதரன், பிறந்தது யாழ்ப்பாணதில. யாழ்ப்பாணத்தில எங்கெயெடா? ஒருவன் கேட்டன். கேட்டவன் பெயர் சேயோன் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உயர் தரம் படித்தவன். 'பருத்தித்துறை" என்றேன் இவனும் பருத்திதுறைதான் என்றான் சேயோன்.அந்த பருத்தித்துறைப் பையன் பெயர் இ.செந்தூரன்.பிறகு கதைக்கலாம் என்று பேச முற்பட்ட செந்துரனை தடுத்தவன் பெயர் ராகுலன்.

இவர் மட்டக்களப்பில படிச்சவர்.நாடகம் போடுவார் என்னைப்போல என்று திருச்செந்துரன் சொல்ல என்னை உற்றுப் பார்த்தவன் பெயர் சயந்தன்(இதுதான் எனக்கும் சயந்தனுக்குமான முதல் பார்வை ஹி..ஹி...) இவர் சிறுகதையாசிரியர் சயந்தன் என்றார்கள்.சோமிதரனை அகில இலங்கை தமிழ்மொழித்தின விவாத போட்டியில் சந்திதோம். உமாசுதன் ,ரஜீவ் நிர்மலசிங்கம் இவர்கள் இருவரும் நான் ஏற்கனவே விவாதத்தில் சந்தித்தவர்கள். திருச்செந்தூரனின் விவாத சகபாடிகள் இவர்களும் தமிழாலயத்தில் இருந்தார்கள்.

பி.எஸ்.செந்தூரன் ரோயல் கல்லூரி மாணவன். கூட்டம் முழுவதிலும் சயந்தனுக்கு பெரும் சவாலாக இருந்தவன்(தமிழாலயம் அடுத்த பாகத்தில இது பற்றிய பல சுவாரஸ்யங்கள் சொல்லுறன்).இவர்களைத்தவிர பிரவினும் அந்த கூட்டத்தில் இருந்திருக்க வேணும் மற்றவர்கள் யாரென்பது மறந்து விட்டது. தமிழாலயத்தின் முதலும் கடசியுமான சஞ்சிகை உயிர்ப்பு.அதில அன்றைய தமிழாலயம் உறுப்பினர்கள் ஒரு 30 பேருக்கும் மேல பெயர் வெளிடிட்டிருந்தார்கள் அதை விரைவில் வெளியிடுறன்.உயிர்ப்பு பற்றியும் தனி பதிவு போடுறன்.எனது முதலும் முடிவுமான கவிதையை வெளியிட்ட சஞ்சிகை அது.சயந்தன்தான் அதற்கு ஆசிரியர்.

சரியென என் நாடகம் ஒன்று தமிழலயத்தின் தைப் பொங்கல் விழாவில போடுவதாக முடிவானது.25 பேர் கோண்ட நாடகமாக தொடங்கின் கடசியில் ஓரங்க நாடகம் போடும் நிலைக்குக்கு நான் தள்ளப் பட்ட சோகம்.(அதுவும் தனிப் பதிவா போட வேண்டியதுதான்).கிட்டத்தட்ட 2 வருடங்கள் நான் தமிழாலயத்தில் இணந்திருந்தேன். 4 உயிர்ப்பு இதழ்கள் வெளிவந்தன. ஒன்றைத் தவிர மற்றய மூன்று இதழ்களின் ஆசிரியர் பீடங்களும் சயந்தனின் ஆழுகைக்குள் இருந்தது.

பொங்குதமிழ் எழுச்சி நடந்த போது மேத்தா,அப்துல் ரகுமான் ,வைரமுத்து கவிதைகளை வாசித்த படி பொங்கியது தமிழாலயம்மும்.சும்மா சொல்லக் கூடாது பெடியள் எல்லாருக்கும் ஓவரான தமிழ் உணர்ச்சிதான். அடுத்த பொங்கலுக்கு இரட்மலானை இந்துக் கல்லூரியில மாணாவர்களுக்கு பரிசுகளோடு சென்ற தமிழாலயம் படை ஏழைச் சிறுவர்களுக்கு உதவிகளைச் செய்தது.அடுத்து நிதி சேகரிப்புக்காக நடத்தப் பட்ட கலைச்சாரல் விழா அந்த நாளில் வெள்ளவத்தை இளசுகளை அமர்க்களப் படுத்தியவொன்று உயர்தர வகுப்பு வாத்தி மாரைக் கூப்பிட்டு விவாதம் புரிய வச்சதில எக்கச்சக்க கலக்சன்.(தமிழ் நாட்டில செலிபிரேட்டியா சினிமாக்காரர ககூப்பிடுறதைப் போல.உங்களுக்குத் தெரியாது உயர்தர வகுப்புக்காலத்தில வாத்திமார்தான் எங்களுக்கு ஹீரோக்கள்.அவையளப் பற்றிக் கிசுகிசுவும் வரும்) கலைச்சாரலில சேர்த்த காசு இப்பவும் அன்றைய பொருளாளரும் சயந்தனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான ஒருவரிடம் இன்னும் பாதுகாப்பாக உள்ளது.

இப்பிடியாக 2000ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எடுத்த மானவர்களிடமிருந்த தமிழாலயம் அதன் பின்னர் அடுத்த உயர்தர வகுப்பு தேர்வெளுதிவிட்டு சும்மா இருப்பவர்களிடம் கொடுக்கப் பட்டது. அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கோ ஏன் ஒரூகாலத்தில் தமிழாலயத்தில் கோலோச்சிய சயந்தனுக்கோ தெரியாது.

சரி இவளவு சொன்னன் நான் மினகெட்டு போனதுக்கு அந்த கூட்டத்தில ஒரு பொம்பிளப் பிள்ளையாவது இருந்ததோவெண்டு சொல்லையில்லையே எண்டு நீங்கள் கேட்கிறது விளங்குது.அட அநியாயத்திலும் அநியாயம் பெண்களை உள்ளெ சேர்ப்பதில்லை என்று தமிழாலயத்தில் முடிவே எடுத்திருக்கிறார்களாம்.காரணம் இளஞர்கள் தமிழாலயத்தில நடக்கும் உறுப்பினர் கூட்டத்தை சரியாக கவனிக்க மாட்டார்களாம்.

பின்னர் சில மாதங்களில் சயந்தன், பி.எஸ் செந்தூரன் ஆகியோரின் பெரும் முயற்சி மற்றும் போராட்டத்தின் பயனாய் பெண்களுக்கு தமிழாலயத்தில் இடஒதுக்டு கிடைத்தது.(இதுக்குப் பிறக்கு குட்டங்அகளுக்கு கணிசமானவர்கள் வந்தனர்.இ.செந்தூரன் பெண்கள் வருகையினால் இளஞர்கள் திசை மாறுவார்கள் என்று கூறி வெளிநடப்புச் செய்தார்) அனைவரும் எதிர்பார்த்தது போலவே வந்து சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவர் நிரந்தரப் பொருளாளர்.இன்னொருவர் ஆசிரியர் பீட உறுப்பினர்.அடுத்தவர் செயலாளரோ இல்லை வேறு ஏதோ ஒரு பெரிய பதவி.(இதுவும் சயந்தன்,பி.எஸ் ஆகியோரின் முயற்சி எண்டு நீங்கள் நினைத்தால் ஆம் என்று சொல்ல முடியாது.என்ன இருந்தாலும் உள் விவகாரங்களை வெளியில் சொல்லி கட்டுப்பாட்டை மீறுவது நாகரிகமல்ல).

இப்பிடியாக இருந்த தமிழாலயத்தில் எனக்கு தெரிந்து கொழும்பு பாடசாலைகளில் பயின்ற பெரும்பாலான விவாதக்காரர்கள் இணைந்திருந்தனர்.தமிழாலயத்துக்கும் ஒரு விவாத அணி இருந்தது. நான் அணியில் ஒருவன். தொடர்ந்து அணியில் இருந்த நான் ஒரு விவாத அரங்கில் பெண்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்ற நிர்பந்ததில் எனது இடத்தை வழங்க வேண்டியதாகப் போனது.அதன் பின்னர் நான் வேலையில் பிசியாகியதில் மீண்டும் அந்த இடத்தை பிடிக்க முடியாது போனது.பெண்கள் இட உதுக்கீட்டுக்காக ப்ரும் போராட்டம் நடந்ததால் பலர் தாமது இடங்களைத் தியாகம் செய்தனர்.

இப்படிப்பட்ட தமிழாலயத்தை சொன்ன நான் ஒருவர் பெயரை சொல்லாமலேயே வந்து விட்டேன்
அவர்தான் க.க.உதயக்குமார் ஆசிரியர்.எங்கள் தலைவர் அவர்.அவரை ரேடியோவில் அறிவுப்பு செய்யுமாபோல அறிவுப்பு செய்துகொண்டிருந்த ஏ.ஆர்.திருச்செந்தூரன் காகா உதயக்குமார் எண்டு அறிவுப்பு செய்தது முக்கிய வரலாற்று நிகழ்வு.

அடுத்த தமிழாலயம் தொடரில் பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன .இதுவரை எழுதியது தமிழாலயம் பற்றிய உற்சாக அறிமுகம் மட்டுமே.

கொழும்பில் என் முதல் அறை நண்பர்கள்..

நவம்பர் 27, 2000 . எனக்கு பரிட்சையமில்லத கொழும்புக்கு இடம்பெயர்ந்தேன்.இலங்கையைப் பொறுத்தளவில் இது எல்லோருக்குமே முக்கியமானதும் பதற்றமானதுமான நாள்.தெகிவளையில் ஒரு சிங்கள வீட்டில் அம்மா என்னை விட்டுச் சென்ற போது எனக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை. எனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் என்னுடன் சேர்த்து மொத்தம் 6 பேர்.அந்த அறை வீட்டின் மையப் பகுதியில் இருந்தது.பக்கத்து அறையில் வீட்டு ஓனர் அன்ரியின் மகள் படித்து கொண்டிருப்பது கேட்டது.குரலை வைத்து அவளின் முகத்தை கற்பனை செய்துகொண்டேன்.அன்ரி அருமையாகப் பேசினார்.எனக்கு பிடித்திருந்தது.அறைக்குள் வந்தவுடன் என்னை அறிமுகப் படுத்தினேன். 

“அன்ரியோட இவ்வளவு நேரமாக கதைத்தீர்” என்ற அவர்கள் கேள்விக்கு,"அன்ரி நல்லவா போல இருக்கு" என்று பதில் சொன்னேன். "புதுத் தும்புத்தடி நல்லா கூட்டும்" சட்டென பதில் அவர்களிடமிருந்து வந்தது. அந்த பதிலைச் சொன்னது அமுதன்.பொறியியல் மாணவன் பகுதி நேரத் தொழிலாகப் படிப்பதாகவும் ஊர்சுற்றுவது முழு நேர தொழிலெனவும் சொன்னார்.அடுத்து வந்த நாட்களில் அதனை உறுதியும் செய்தார்.இன்னொருவர் சுரேஷ் இவர்தான் அந்த அறைக்குத் தலைவர் யாழ்ப்பாண சைவ வேளாள கட்டுமானத்தின் பிரதிபலிப்பு. சுரேஷ் கட்டிலுக்கும் மேல் சாமிப் படமிருக்கும் காலை மாலை இருவேளை பூசை செய்வார்.வெளிநாடுக்கு போவதே குறிக்கோள்.வெளிநாட்டில குடியுரிமை இருக்கும் பொம்பிளையள் கிடைத்தால் கலியாணம் செய்து கொண்டு போகலாம் எண்டதும் இவரிண்ட எண்ணம்.முப்பதைத் தாண்டிய வயதில் பிடித்த பெண் வரும் வரை போட்டோக்களையும் குறிப்புகளையும் பார்த்தபடி ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருந்தார். அடுத்தது ரஞ்சித் உசார் பேர்வழி வெளிநாட்டுக்குப் போவதே இவரதும் ஒரே இலக்கு, அதுவரை சிங்களமே தெரியாமல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வண்டி ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்.ஒவ்வொரு நாளும் தன்ர புளுகல்களை சொல்வது இரவில் இவரது வேலை. "ரஞ்சித் பறக்கவிட்டு சுடாத சும்மவே சுடு" இது அமுதன் ரஞ்சித்துக்கு கொடுக்கும் பதில்.(புளுகுறதைத்தான் பறக்கவிட்டுச் சுடுதல் என்பார்கள்)
 நானும் அமுதனும் ரஞ்சிதோடு அடிபிடி சண்டையில் இறங்கும் நண்பர்கள்.அமுதனின் ஆதரவிருந்ததால் என் உடம்பை ஒத்த ரஞ்சித்தோடு சண்டைக்கு போவதில் எனக்கு பயம் இருக்கவில்லை. இன்னொருவர் மலையகத்தைச் சேர்ந்தவர். இவரும் பறக்கவிட்டு சுடுவார். ஆனால் நல்ல ஆங்கில மற்றும் சிங்களப் புலமையும் சுறுசுறுப்பான ஆர்வம் கொண்ட இளைஞர். வீட்டுகார அன்ரியோடு நல்ல ஒட்டு.அதனால் தினம் தினம் எங்கள் அனைவரின் கிண்டலுக்கும் உள்ளானார். ஆனால் அவர் அன்ரியோடு ஒட்டாய் இருப்பதற்க்கு காரணம் எங்கள் அறையில் இருந்த யாழ்ப்பாண மேலதிக்கம். தோட்டாக்காட்டன் இங்கிலிஷ் கதைகிறதப்பார் என்கிற கிண்டல்கள் முதல் தோட்டக்காட்டன் வடக்கத்தையான் போன்ற பல கிண்டல்கள் அவனுக்கு கேட்க்கும் படியே சொல்லப்படும். அறையில் யாழ்ப்பாண நண்பர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு. ஏதும் ஆங்கிலத்தில் தெரிய வேண்டுமெண்டால் மேல் வீட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்து அங்கிளிடம் கேட்பார்களே தவிர தோட்டக்காட்டானிடம் கேட்பது சங்கை குறைவு என்பார்கள்.அவனுக்கும் எனக்கும் ஒரு உறவு இருந்தது. காரணம் நானும் அந்த அறையில் மைன்னாரிட்டிதான் என்னை மட்டக்களப்பான் என்பார்கள்.யாழ்ப்பாணதில் பிறந்திருந்தாலும் அந்த அறைக்குள் நான் மட்டக்களப்பானாகவே நுழைந்தேன்.
 இரவு நெடு நேரம் வரை மட்டக்களப்பானும் தோட்டக்காட்டானும் அன்ரியோட என்ன கதைகிறார்கள் எண்டு அறைக்குள் ஒரு குசுகுசுப்பு வரும். நான் அப்ப உயர்தரம் படித்துக் கொண்டிருந்ததால் நெடு நேரம் விழித்திருப்பன். அவனும் விழித்திருந்து படிப்பான். அவன் அப்பாவும் அம்மாவும் இன்னும் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். எப்பிடியாவது அதிக சம்பளம் வாங்கும் வேலைக்கு சேர்ந்து அவர்களை வீட்டில் உட்கார வைத்து சோறு போட வேண்டும் என்பதே அவன் கனவாக இருந்தது. பின்னாளில் சிங்களத்தில் பல வேலைகளைச் செய்வதற்க்கும் ஆங்கிலத்தில் எழுதுவதற்க்கும் ஆங்கிலத்தில் பேசிப்பழகுவதற்க்கும் எங்கள் அறை நண்பர்களுக்கு தோட்டக்காட்டன் துணை புரிந்தான்.(எங்களுக்கு இங்கிலிசுல கிரமர்தான் தெரியும் பேசுறது கஷ்டம் எண்டதாலதான் உன்னட்ட கேட்க்கிரம் என்பது அமுதம் சொல்லும் தன்னிலை விளக்கம்.) இருப்பினும் அவனுள் அரம்பம் முதலே உருவான அல்லது உருவாக்கப் பட்ட தாழ்வுமனப்பான்மை எங்களில் இருந்து சற்று தள்ளியிருந்து பேசும் நிலையினை அவனுக்குள் உருவாக்கி விட்டிருந்தது.

 இப்படியான பின்னணியோடு அந்தஅறை இருப்பினும் பொலிசுக்காரன் சோதனைக்காக வருகிறபோதும். வீட்டு அன்ரிக்கெதிராய் அணிதிரளும்போதும். ஏன் கட்டுநாயக்கா தாக்குதல் செய்தி கேட்டு துள்ளிக் குதித்த போதும் நாங்கள் அனைவரும் தமிழராக உணர்ந்தோம் என்பதை மறுப்பதற்கில்லை. பொது இடத்தில் என்னையோ அவனையோ மற்ற நால்வரும் தனியாக விட்டதில்லை. சிக்கலெதிலும் மாட்டி விட்டதுமில்லை சிக்கல் வந்தால் காப்பாற்றவும் தவறியதில்லை. 
 எமது அறையின் ஆறமவர் அமுதனின் நண்பர்(அவர் பெயரும் மறந்து விட்டது) அருமையயன காதல் கதை அவருடையது. கண்களால் மட்டும் பேசும் பல்கலைக்கழகக் காதலை வியந்து பேசுவார்.அவரும் அவரின் காதலியும் வெவ்வேறு சாதிக்காரர்.இருந்தாலும் காதலிக்கும்வரை காதலிப்போம் எண்டு காதலித்தார். அமைதியானவர் பின்னர் இவர் எமது அறையில் இருது வேறு அறைகுச் சென்று விட்டார். பின்னர் ஒருநாள் வெள்ளவத்தையில் அவரைச் சந்தித்தேன் திருமனம் முடித்துவிட்டதாகச் சொன்னார். யார் அந்த அக்காவா நான் ஆர்வமாகக் கேட்டேன். அவரிடம் ஒரு சிரிப்பு பதிலாக வந்தது அதன் பின்னர் நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை. 
 
 அறைக்கு  பின்னர் ஒருவர் வந்தர். லண்டனுக்கு போகப் போய் 6 மாதம் வெளிநாடெல்லம் சுற்றி 3 மாதம் பெல்ஜியம் சிறையில் இருந்தவர். பின்னர் இவரின் கோரிக்கை மனு அங்கிகரிக்கப்படாததால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட்டார். வந்து 1 வாரம் அவரின் அனுபவக்குவியல்களை அவிட்டுவிட்டர். 9 லட்சம் இழந்தும் சிரித்துக்கொண்டே தனது அனுபவக்கதையின் இறுதியில் ஒரு வசனம் சொன்னார் "நான் கிட்டத்தட்ட 20 விமானநிலையங்களைப் பார்த்திருப்பன், இப்ப சொல்லுறன் இன்னும் ஆறுமாதத்தில நான் லண்டனுக்கு எப்பிடியும் போவன்" இதைக் கேட்டதும் கடுப்பான அமுதன் இன்னும் உனக்கு புத்தி வரவில்லையா என்று கேட்டார்."எனக்கு எந்த நாட்டில எப்பிடி பேசோணும் எப்பிடி அசேலத்துக்கு கடிதம் கொடுக்கோணும் எண்டு தெரியும் நான் போய் காட்டுறன் பாருங்கோ'வெண்டார். அவர் சொன்ன மாதிரியே இப்போது அவர் லண்டனில இருகிறார். இப்படியான என் முதல் அறை எனக்கு குட்டித் தமிழீழம் போன்றதுவே

Sunday, February 04, 2007

வித்தியாசமான ஆடை...



2005 இல் கோவாவில் நடை பெற்ற சர்வதேச திரைப் பட விழாவில் நகைச்சுவைப் பிரஞ்சுப்(french) படமான Astrix And Obeliex - Mission Cleiopetra வில் நடித்த நடிகை படம் இது. எனது கமராவுக்குள் சிக்கிய இந்தபடத்தில் உள்ள அவரது ஆடை வித்தியாசமாக இருந்தது.


கிளியோப்பட்ராவுக்கும் சீசருக்கும் இடையிலானா ஈகோவும் அதன் பயனாக விளைந்த சவால் ஒன்றை மையப் படுத்திய கதை.நல்ல நகைச்சுவை உணர்வுடன் திரைக்கதை வடிமைக்கப் படுள்ளது. குறித்த காலத்தில் பிரமாண்டமான மாளிகையொன்றை கட்டி முடிப்பதற்க்காக கிளியோபட்டாரா முயல்கிறார்.அது நிறைவடைந்தால் சீசர் தோற்று விடுவார் அதனைத் தடுப்பதற்க்கான முயற்சியும் கட்டுவதற்க்கான முயற்சியுமே கதை.

இந்த புகைப்படத்தில் பிண்னணியில் இருப்பவர்கள் இந்தியாவுக்கான பிரஞ்சுத்தூதுவர் மற்றும் பிரஞ்சு திரைப்பட இயக்குனர்

( என்ன சோமி ஏதாவது சீரியசான விசயங்களை புளக்கில பகிர்ந்துகலாமே என்று எனது நண்பர் கேட்டிஇருந்தார்......அத்தானுங்கோ இது...ஹி..ஹி)

Saturday, February 03, 2007

சின்னம்மம்மா. . .

காலையிலிருந்தே திருச்சி மாமா வீட்டில் இருந்து பலதடவைகள் போன் வந்தாகிவிட்டது.கையில் வைத்திருக்கும் கமராவை இறக்கி வைக்க முடியாதபடி வேலை.அன்றைகென்று கமராமேன் இல்லாமல் நானே கமரா பண்ணுவதால் அதிக அழுத்தம் வேறு.சிறிது நேரத்தில் எனது உதவி இயக்குனர் செல்லிடப் பேசியையும் உறங்கு நிலமையில் வைத்து விட்டர்.
சரி ஒரு படியாக 6 மணிக்கு மேல் வேலை முடித்து அழைப்பெடுத்தால் கனடாவில் உள்ள எனது சின்னமம்மா இறந்துவிடார் என்ற செய்தி மாமாவிடமிருந்து பகிரப் பட்டது

வீட்டுக்கு வந்து மின்னஞ்சலைத் திறந்தால் கனடாவில் உள்ள எனது அக்கா இதே செய்தியை அஞ்சலிட்டிருந்தார்.இப்படித்தான் இரண்டு வருடங்கள் முன்பு எனது அம்மம்மா யாழ்ப்பாணத்தில் இறந்த போதும் எனது தங்கை குறுஞ் செய்தி அனுப்பினார்.பின்னர் தொலைபேசியில் தகவல் சொன்னார் அந்தத் தகவல் மாமாவிடம் பகிர்ந்து கொண்டேன்.எனது அம்மம்மா மாமாவுக்கு அம்மா எனபதால் அவருக்கு ஆறுதலாக சிறிது நேரம் பேச வேண்டியிருந்தது.

இதை எழுதும் இந்தக் கணத்தில் சின்னமம்மாவின் உடல் எரியூட்டப் பட்டிருக்கக் கூடும் இல்லை புதைதார்களோ தெரியவில்லை.கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கனடாவில் வசிக்கும் சின்னமம்மா பற்றி எழுதுவதற்கு நிறய இருகிறது.யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மட்டுவில் என்று ஒரு ஊர் இருக்கிறது.அதுதான் என் தாய் வழி ஊர்.அங்குதான் சின்னமம்மா பிறந்தார்.3 ஆண்களும் 5 பெண்களுமான ஒரு குடும்பத்தில் கடைசிக்கு முதல் பிள்ளை எனது சின்னமம்மா.எனது அம்மம்மா பெண்களில் மூத்தவர் மொத்தத்தில் மூன்றாவது.

மிகக் கெட்டிக்காரியான எனது அம்மம்மாவை அரை குறைப் படிப்போடு எனது தாத்தாக்கு திருமணம் முடித்து வைத்தனர்.மிக அழகான எனது அம்மம்மாவை அதிகம் வீட்டை விட்டு வெளியேறாதவாறும் அழகுபடுத்திக் கொள்ளாதவாறும் தாத்தா பார்த்துக் கொண்டார்.வீட்டைத் தவிர வேறு உலகைக்காட்டமல் தாத்தா தன்னை வைத்திருந்ததாக சாகும் வரை அம்மம்மா சொல்லுவார்.தான் படித்திருந்தால் இண்டைக்கு எத்தினை பெரியாளாக இருந்திருப்பன் எனபது இறுதிவரை அம்மாவிடம் இருந்த ஆதங்கம்.

இந்த சூழலில் சின்னம்மா அதிக சுறுசுறுப்பான ஒரு நபராகவே எனக்கு தெரிந்தார்.பள்ளிப் படிப்பை நிறைவு செய்த சின்னமம்மா குடும்ப வாழ்க்கைக்குள் போனதும் சுறு சுறுப்பான பெண்ணாகவே இருந்தார்.எங்களூரில் சின்னமம்மா வீட்டிலேயே முதன் முதலில் தொலைக் காட்சி வாங்கியாதாக அம்மா சொல்லியிருக்கிறா.சின்னத்தாத்தா அதிக சொத்துக் காரர் என்பதால் ஊரில் மாடி வீடு கட்டிய பணக்காரக் குடும்பமாக சின்னமம்மா குடும்பம் இருந்தது.

வேளாளர் ,பள்ளர், நளவர், கரையார், வண்ணார் உள்ளிட்ட சாதியினர் அதிகம் வாழ்ந்த எங்ளுரில் துரும்பர் என்ற ஒரு சாதியினரும் வாழ்ந்தனர்.துரும்பர் எல்லாரிலும் குறைந்த சாதியினரெண்டும் அவர்கள் ஒரு காலத்தில் காவோலை(காய்ந்த பனையோலை) இழுத்துகொண்டே வீதியில் போவர் என்றும் அம்மம்மா சொன்னர்.கவோலை இழுக்கும் சத்தம் கேட்டால் யாரும் வீதிக்கு வரமாட்டார்களாம்.

சின்னமம்மா விட்டிலும் நிறையப் பள்ளர்கள் வேலை செய்தார்கள்.அவர்களுக்கு தனி பேணிகளை கனடா போகும் வரை சின்னம்மா வைத்திருந்தார்.ஆனால் வேடிக்கை என்னவெனில் எனது அம்மாவின் திருமணத்தில் சின்னம்மா கலந்து கொள்ளவில்லை காரணம் சின்னமம்மாவின் மகள் அப்போதே கலப்பு திருமனம் செய்து கொண்டிருந்தார்.இதனால் ஊரில் பணக்கார, நிலபுல செல்வாக்குடையவரான சாதிய தடிப்புள்ள பிரிவினரான சின்னம்மாவை பொது விழாக்களில் கலந்து கொள்ள ஊர் ஒத்துக் கொள்ளவில்லை.

இருப்பினும் பின்னர் ஊரில் தவிர்க்க முடியாமல் சின்னமம்மா ஏற்றுகொள்ளப்பட்டர்.ஊர் பாடசாலைக்கு நிலம் ஒதுகியதில் இருந்து பல உதவிகளை ஊருக்காக சின்னமம்மா செய்திருந்தாலும் இறுதியில் கடந்த வருடம் ஊர் சென்ற போது ஊர் வேளாளர் சிலர் இவ்வாறு பேசிக்கொண்டனர் சின்னமம்மா கனடாவில் இருந்து கொண்டு நிலத்தை பள்ளருக்கு விற்று ஊரில் இருக்கும் வெள்ளாள ஆதிகத்தை உடைத்து விட்டர் என்று.இத்தனைக்கும் இதற்காகவே அருகில் இருந்த பல காணிகளை ஒரு காலத்தில் வாங்கி வைத்திருந்தவர் சின்னமம்மா.

நான் ஊர் பாடசாலையில் படித்த நட்களில் சின்னம்மா வீட்டில்தான் அதிகம் இருப்பன் தனியாளாக தேங்காய் உரித்து அதிகாலையில் சின்னத்தாத்தவோடு வண்டிலில் தேங்காய் கொண்டு சாவகச்சேரி சந்தைக்குப் போகும் போது அவரில் தெரியும் உசாரும் வேகமும் என்னை இப்போது வரை ஆச்சரியப் படுத்தும் ஒரு விடையம்.

எனக்கு தெரிந்து ஊரில் வேகமான ஒரு பெண்ணாக அவர் இருந்தார்.எப்போதும் அவருக்கு ஊரை விட்டு செல்வதில் பிடிப்பு இருந்ததில்லை.பரந்த தோட்டத்தில் நடந்த அவருக்கு கனடா ஒத்து வரவில்லை கடந்த சில வருடங்களாகவே சுய நினைவு மங்கியவராகவே அவர் இருந்தார்.அம்மம்மா தனது 83 வது வயதில் இறக்கும் போது கூட நிறைந்த நினைவாற்றலுடன் இருந்தமை ஆச்சர்யமானது.ஆனால் இறக்கும் போது 75 தொடுகிற வயதான சின்னமம்மா நினைவு தவறி வாழ்ந்தார்.

கனடாவை அவரால் சகித்திருக்க முடியவில்லை. ஓடிய அவரது கால்கள் ஓர் அறையில் கட்டப் பட்டதின் அவலம்.துரு துருவென இயங்கிய ஒரு விவசாயப் பெண்ணாக வாழ்ந்தவர் அவர். வீட்டுக்குள் அடங்கிபோய் தன் கனவுகளைத் தொலைத்த என் அம்மம்மாவைவிட உசார் பெண்ணான சின்னம்மம்மா ஒடிந்துபோய் சிலகாலம் இருந்து இறந்தார்.தோட்டத்தில் காலை முதல் இரவு வரை வேலை செய்வார்.பின்னர் அதிகாலையில் சந்தைக்கு வண்டிலில் புறப்படுவர்.அம்மா எனக்கு சுறு சுறுப்புக்கு உதாரணம் காட்டுவது சின்னம்மாவைத்தான்.

என் சின்னமம்மாவை எனக்கு நிறையப் பிடிக்கும்.அவரோடு வண்டிலில் போயிருகிறேன்.சமைக்கும் போது கூட இருந்து பேசியிருகிறேன் தென்னந்தோப்பில் நடந்திருகிறேன்.. . . . .எனக்கும் சின்னமம்மாவுக்குமான ஊடாட்டம் பற்றி சின்னம்மம்மாவின் அரவணைப்பை தனது சின்னக்காலங்களின் தவற விட்ட எனது கனடா அக்காவுக்கு கடந்தவாரத்தில் நினைவு மீட்டியிருந்தேன்.ம்..கடந்தாவரம் சின்னத்தாத்தாவுக்கும் சின்னம்மம்மாவுக்கும் திருமண நாள் வந்தது.....

ம்..இப்போது,

என் அம்மம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோ பதிவு எனது பார்வைக்காக கொடுக்கப் பட்டதைப் போல சின்னமம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோவும் எனக்கு கொடுக்கப் படலாம்.அம்மம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோவைப் போல இதையும் நான் பார்க்கப் போவதில்லை.

சென்னை மாடுகள்-போராட்டம் வெடிக்குமா?!

நான் வண்டியை வீதிக்கு எடுக்கவும் பக்கத்து வீதி மாடு பாய்ந்து வரவும் சரியாக இருந்தது.நான் வண்டியை ஒரத்தில் நிறுத்தி விட்டு மாட்டை ஒரு முறை முறைத்தேன்.பாவம் மாடு வேர்த்து விறு விறுத்து பத்தட்டமாக இருந்தது.காலையில் இருந்து அது சாப்ப்பிட வில்லை என்பது அதன் முகத்தில் தெரிந்தது.பழக்கமான மாடு என்பதால் என்ன ஏது என்று விசாரித்த போது த்ன் சோகக் கதையச் சொன்னது.

சென்னையில் எங்களது பிரதான உணவு சுவரொடிகள்.எங்களின் பெரும் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யும் சுவரொட்டிகளுக்கு பக்கத்தில் போகவே மாடுகள் பயப்படுகின்றன.என்னைப் போல துணிகரமான மாடுகள் கூட சுவரை நெருங்க முடியவில்லை காரணம் சென்னை முழுவது ஒட்டப் பட்டுள்ள திகிலூட்டும் போஸ்டர்கள்.கடந்த பத்து வருடமாக சென்னையில் போஸ்டர் தின்று வருகிறேன் ஒரு போதும் நான் இவளவு பயந்ததில்லை என்று சொல்லி நிறுத்தியது மாடு.

அப்படி என்னதான் என்று பார்க்க சென்னையை வலம் வந்த போது சுவருக்கு அருகில் சென்று தலை தெறிக்க ஒடிவரும் பல மாடுகளைப் பார்த்தேன்.



இது குறித்து மாடுகள் சங்கத்தின் துணைத் தலைவர் கோயம்பேடு பெரிய மாடு அவர்களை தொடர்பு கொண்டோம்."சென்னை நகரில் தற்போது ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்கள் காரணமாக மாடுகள் சுவருkகருகில் போவதற்கு அஞ்சுவதாகவும் இதனால் பல மாடுகள் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் அபாயம் இருப்பதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகான வேண்டும் இல்லையெனில் மாடுகள் பல்வேறு இடங்களிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும்" என்று ஓரே மூச்சில் கூறி முடித்தார் பெரிய மாடு.

மாடுகள் சுவரொட்டிகளை தின்பதை நிறுத்திவிட்டதால் சகல சுவரொட்டிகளையும் அகற்ற வேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு வந்துள்ளது.இதனால் சென்னை மாநகராட்சிக்கு பலகோடி ரூபாய் நஸ்டமேற்படுமென பதவி விலகிய கவுன்சிலர் ஒருவர் கூறினார்.இதேவேளை மாடுகள் சுவரொட்டிகளை அகற்றும் போது கட்சிப் பாகுபாடு இன்றி அகற்றுவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த பிரச்சனகளுக்கு காரணமான போஸ்டர்களைப் பார்த்தேன் அட நம்ம டி.ஆர் இன் வீராசாமி போஸ்டர்கள்.சென்னையில் சகல இடத்திலும் இடைவேளி எங்கெல்லாம் இருகிறதோ அங்கெல்லாம் மும்தாச் ,மேக்னா நாயுடு சகிதம் கையில் வாழுடன் நம்ம வீராச்சாமி.இதைப் பார்த்து குழந்தைகள் வெருண்டதும் நாம பயந்ததும் பழைய கதை இப்ப மாடுகளுக்கு இது பெரும் உணவுப் பிரச்சனக்கு வழி வகுத்து விட்டது

இதேவேளை மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள உணவுசிக்கலுக்கு காரணம் திமுக மைனாரிட்டி அரசுதான் என வைகோவும்.மாடுகளுக்கு ஆதரவாக கழத்தில் இறங்கப் போவதாக புரட்சித்தலைவி அம்மா அவர்களும் அறீவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அதிமுக ஆட்சியில்தான் அதிகம் நடந்துள்ளன மோனிசா என் மொனாலிசா காதல் அழிவதில்லை போன்றவற்றூக்கான சுவரொட்டிகள் அதிமுக ஆட்சியிலேயே ஒட்டப் பட்டதாக கலைஞர் அறிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பு: இன்னா மேட்டருன்னா வீராசாமி பத்திப் கலாச்சிகின்னே வீராசாமிக்கு கூட்டம் போய்கின்னு இருக்கு மாமு.

(ஒவரா போராடிச்சா என்ன பண்ணுறது. இப்ப்டி எழுதாலாமெண்டு புறப்பட்டுடன்....ஹி...ஹி)