Wednesday, April 29, 2009

சிறீலங்கா-கொலையான ஒரு பத்திரிகைகாரன் -சிவராம்- 1

பாகம் -1
2005 ஏப்பிரல் மாதம் 28 ம் திகதி மதியம் முகமாலைக்குச் செல்லும் கடைசி தொடர்புப் பேருந்தில் தொற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படுகிறேன். மூன்று பேருந்து மாறி 90 கி.மீ தூரம் உள்ள வவுனியாவுக்கு வந்த போது மாலைதண்டி இருட்டு மெல்ல எட்டிப் பாக்கிறது. ராணுவச் சோதனை, புலிகளின் சோதனை பின்னர் மீண்டும் ராணுவச் சோதனை என்று ஒவ்வொன்றிலும் குறைந்தது அரைமணி நேரம் போக அவசர அவசரமாக 5 மணிக்கு பாதை மூடுவதற்க்குள் ஓமந்தை கடந்து ஒரு வெற்றிக் களிப்போடு இப்போது வவுனியா வந்திருகிறேன். மாலை 5 மணிக்கு ராணுவம் எல்லையில் பாதையை மூடினால் பிரக்கு இரவு முழுவதும் எல்லையில் காத்திருந்து காலை 7 மணிக்கு பாதை திறந்த பின்னர்தான் வரவேண்டும்

கொழும்பு செல்லும் பேருந்தில் இரவு 7.45 க்கு பயணிக்கும் முடிவோடு வழக்கமாக வவுனியாவில் சந்திக்கும் பத்திரிக்கை நண்பன் மகாமுனியைப் பார்த்து சில பல கதைகளைப் பேசி சிவராம் வவுனியாவின் ஒரு பத்திரிகையாளர் பற்றி சொன்ன கிண்டல் ஒன்றைச் சொல்லி மகாமுனியை குசிப் படுத்திவிட்டு கொழும்பு பஸ்ஸில் புறப்பட்டேன்.

9 மணிக்கு அனுராதபுரத்தில் ஏறிய சிங்கள பெண்களில் யாராவது காலியாக இருக்கும் என் பக்கத்து இருக்கையில் அமருவார்களா என்ற என் எதிர்பார்ப்பு வழமை போலவே பொய்த்துப்போக ஒரு 'இஸ்லாமிய வயோதிபர் வந்து உட்காந்தார். தூக்கம் வரவில்லை. தமிழ்நாட்டுப்(இந்திய) பேருந்துகள் போல அங்கே பேருந்தில் சின்னதிரை இல்லை. வேகமாக செல்லும் பேருந்தின் வெளியே வீதியோரத்தில் சிங்கள இளைஞர்கள் கூட்டம் போட்டுக் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். வீதி விளக்குகள் பிரகாசமாக இருந்தன. சிங்களப் பெண்களின் சிரிபொலி காற்றினை ஊடறுத்து கேட்கிறது.

இரவு 12 மணி எனக்கு இன்னமும் துக்கம் வரவில்லை. அனுராதபுரம் வரும் வரை ஒலித்த தமிழ் பாடல் இப்போது நிறுத்தப்பட்டு சிங்கள மெல்லிசை பாடல் இதமாக பேருந்தினுள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. என் செல்பேசி மணியடிக்க ஆரம்பித்தது. நண்பர் சிவகுமாரின் அழைப்பின் போது மட்டும் பிரத்தியோகமாக ஒலிக்கும் ஒலி அது.
'என்ன சிவா அண்ணா இந்த நேரத்தில்'
'சோமி.... சிவராம கடத்திப் போட்டாங்கள். . . .'

கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் 'பம்பலபிட்டி ரெஸ்ரொரண்ட் ' வாசலில் வைத்து இரவு பத்தரை மணியளவில் சிவாரமை கடத்திச் சென்று விட்டர்கள்.கூட இரண்டு சிங்களப் பத்திரிகையாளர்கள் இருந்தார்களாம். சிவராம் தண்ணியடித்திருந்தாராம். ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது பேசிக்கொண்டே பஸ்நிறுத்தம் அருகே வந்தப்போது ஒரு பஜிறோ வாகனதில் தூக்கிப் போட்டுக் கோண்டு போய் விட்டர்களாம் என்று சிவகுமார் விபரம் சொன்னார். சிவராம் தண்ணியடிக்க ஆரம்பித்தால் ஒரு முடிவு வரை அடிப்பார். எல்லோரும் போதும் என்று முடிக்கிறபோது இரண்டு லாட்ஜ் கொண்டுவரச் சொல்லி குடிப்பார். அன்றும் அப்படித்தான் குடித்திருக்க வேண்டும்.

சோமி முடிந்தவரை சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் சொல்லியாகிவிட்டது. சிங்களப் பத்திரிகையாளர்கள் அரசியல் அமைப்பைச் சார்ந்தவர்கள் அனைவரும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறனர். என்று சொல்லி சிவா அண்ணா தொடர்பைத் துண்டித்தார். எனக்கு பதட்டத்தின் உச்சத்தில் வியர்க்க ஆரம்பித்தது. நானும் என் பங்குக்கு யார் யாரோவிடமெல்லாம் பேசினேன். ஒரு உலகறிந்த பத்திரிகைக் காரன், முன்னாள் போரளி, உலகின் பல நாட்டின் இராஜதந்திரிகளொடு நேரடித் தொடர்பில் இருந்த ஒருவர் சிவராம்.

மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்து படித்த சிவாராம் பல்கலைக்கழக படிப்பை இடை நிறுத்திவிட்டு. புளட் இயக்கத்தில் இணந்து அதன் அரசியல் பிரிவின் முதலாவது பொதுச் செயலாளராக பதவியேற்று பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி பத்திரிகைக்காரனாகி சராசரிகளைத் தாண்டி அரசியல், இலக்கிய,கருத்தியல்,ராணுவ,புவியியல் தளங்களில் மிக ஆழ்ந்த ஞானம் கொண்டு.. . . .. புலிகளை விமர்சித்து பின்னர் தீர்க்காமாக ஆதரித்து..சிங்கள தமிழ் ஆங்கில ஊடகவியாலளர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஆராவாரத்திற்குரியாவராகி..... சிவராம் பற்றி நினைத்துக் கொண்டே அவ்வப்போது சிவா அண்ணாவிடம் நிலமையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

எனக்கு சிவாரம் என்ற பெயர் என் பள்ளிகூடக் காலங்களில்தான் அறிமுகமானது. ஒயாத அலைகள் தாக்குதல்களில் புலிகள் வெற்றிகளைப் பெற்று இலங்கைப் படைகளை ஓட ஓட விரட்டிய நாட்களில் நாங்கள் பி.பி.சி மற்றும் வெரிட்டாஸ் தமிழ்பணி செய்திகளை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்போம். தினமுரசு எங்களின் வெற்றிக் களிப்புக்கு புலிகள் பற்றிய நிறையச் செய்திகளைத் தந்தது. தினமுரசு ஆசிரியர் அற்புதன் எங்களின் ஹிரோ ஆனது போலவே பின்னாளில் போர் பற்றிய செய்திகளையும் நகர்வுகளையும் பி.பி.சி யில் தொடர்ந்து சொல்லும் ராணுவ ஆய்வளர் சிவராமும் எங்களுக்கு பரிச்சயமாகிறார்.

மட்டக்களப்பு சந்தைக்கு அருகில் உள்ள சுப்பையா வீதியில் எங்கள் வீட்டுக்கு பக்கதிலும் எதிரிலுமாக சிவராமின் சகோதரிகளின் வீடுகள் இருந்தன. வாவியோரதில் சுப்பையா வீதிக்கும் லேடிமானிங் வீதிக்கும் இடையில் இருந்த வீட்டில்தான் சிவராமின் அம்மா இருந்தார். எபோதாவது அங்கு வந்து செல்லும் சிவராமை தெருவில் வைத்து என் பக்கத்து வீட்டு அங்கிள் அடையாளம் காடினார்.அதன் பின்னர் மட்டகளப்பில் நடந்த சில கூட்டங்களில் எட்ட நின்று சிவராமை வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

எஞ்சினியர் கனவுகளோடு இருந்த எனக்குள் பத்திரிகை மீதான பரவசங்கள் ஏற்பட்ட அந்த நாடகளில் மட்டக்களப்பில் அரிதாய் நடக்கும் சில நிகழ்வுகளில் சிவராமைப் பார்த்திருகிறேன், ஆனால் பேசியதில்லை. கால ஓட்டதில் என் கணிதத்துறை கலைந்து பொறியாளர் ஆகும் எண்ணம் தூராமாகி பத்திரிகைத் துறைக்குள் வந்து சேர்ந்து விட்டபின்னர் யாழ் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

யாழ் மாவட்ட ராணூவத் தளபதிசரத்பொன்சேகா யாழ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில் ஒரு ரகசியக் கூட்டம் கூட்டுகிறார். இந்த செய்தி எனக்கு பழக்கமான ஒரு கப்டன் மூலம் கிடைகப்பெற அவனின் உதவியோடு அந்த கூட்டம் நடைபெற்ற இடத்திற்க்கு வந்து ராணுவத்தினரோடு உட்கார்ந்து கொள்கிறேன், யாழ் மாவட்ட கல்வித்துறையினருக்கும் ராணுவத்தினருக்குமான சந்திப்பு அது. மிகவும் இரகசியமாக நடந்த அந்த சந்திப்பில் சரத் பொன்சேக்கா பேசியவைகளை நான் பதிவு செய்துக் கொண்டேன். சமாதான காலம் என்பதால் ராணுவதினரோடு நமக்கிருந்த பழக்கம் காரணமாக உள்நுழைய முடிந்தது.மற்றது துணைக்குழுகளும் இருந்ததால் என்னை அவர்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லை. அந்த கப்டனுக்கும் வேறு இருவருக்கும் மட்டுமே நான் பத்திரிகைக் காரன் என்பது தெரியும்

புலிகள் ஆயுதங்களை கைவிடும் வரை யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுக்காப்பு பகுதிகளில் இருக்கும் பொதுக் கட்டடங்கள் மற்றும் பாடசாலைகளை விட்டு ராணுவம் வெளியேறாது என்ற சரத் பொன்சேக்காவின் பேச்சு அடுத் நாள் தினக் குரலில் வெளியாகிறது. ஏனைய பத்திரிகைகளுக்கு இந்த செய்தி முழுமையாக கிடைக்காததால் சரத் பொன்சேகா கல்வித்துறயினரை சந்தித்துப் பேசினார் என பெட்டிச் செய்தி போட்டார்கள். பேச்சுவார்த்தை நடந்து வந்த அந்தகாலப் பகுதியில் மக்கள் வாழ்விடங்களிலும் பொது இடங்களிலும் இருந்து ராணுவம் வெளியேறும் என அரசாங்கம் புலிகளிடம் கூறியிருந்தது. இது பேச்சு வார்த்தையிலும் உடன் பாடாகியிருந்தது. இந்த நிலையில் சரத் பொன்சேக்கா வின் இந்த கருத்து ராணுவத்தின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்த செய்திதான் என் வாழ்க்கையில் ஊடகத் துறைக் கதவுகளை அகலத் திறந்தது. நண்பர் தயாபரன் அழைத்தார்.
'சோமி சிவாரமண்ணை உன்னைப் பாக்கோணுமாம்.இப்பவே உன்னைக் கூட்டி வரச்சொன்னார்.'
'இல்ல இப்ப ஒவிசில இருகிறன் இந்த செய்தியை எழுதிக் குடுத்திட்டன் எண்டால் வேலை முடிஞ்சிடும் நான் வாரன் .'
'கட்டாயம் வா ஆள் உன்ர சரத் பொன்சேகா செய்தியை பார்த்துட்டுதான் உன்னை கூப்பிட்டுது. என்ரார் தாயபரன்.

தினகுரலின் பிரதான தலைப்பு செய்தியாக என் செய்தியப் போட்டிருந்தார்கள்.ஒரு செய்தியின் மூலம் சிவராமே என்னை அழைக்கிறார் என்ற பரவசம் உள்நுழைய சிவராமைச் சந்தித்தேன். சாப்பாடுகளின் மீது அதிகம் பிரியம் கொண்டவரான சிவாரம் ஏதோ ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். கூடவே பருத்தித்துறையில் பிரபலமான எள்ளுப்பாகு ஒரு பைநிறைய அருகில் இருந்தது. என்னையும் சாப்பிடும் படி சொல்லி அவரும் சில பல உருண்டைகளை உள்ளே தள்ளினார்.

சோமிதரன் நீ தினகுரல விட்டுத்து என்னோட சேந்து வேலை செய்யிறியா..? உன்ர நியூஸ் பாத்தன். இவனுகள் ஆருக்கும் தகவல் கூட தெரியா நிலையில நீ நியுஸ் போட்டாய்..ஒரு பத்திரிகைக் காரனுக்கு எல்லப்பக்கதிலையும் ஆள் இருக்கோணும் அப்பதான் நியூஸ் தவறாம கிடைக்கும். சமதானத்தை குழப்புறதில ராணுவம் எப்பிடி வேலை செய்யுது. மக்கள் அமைதிக்காலத்தை அனுபவிக்கிராங்களா? நம்மட ஊர் ட அபிவிருத்தி ,வளங்கள் ,கலை இதுகளப் பத்தியெல்லம் நாம வெளிய கொண்டு வரணும். உனக்கு தமிழ் நெற்றில வேலை செய்ய் விருப்பமா எண்டார். நான் உடனே இல்லை...அதன் மீதான அடையளாம் எனக்கு பிரச்சனையாக இருக்கும் என்றேன்.

சரி.. நீ அதுக்கு வேலை செய்ய வேணாம். நாங்கள் தொடங்கியிருக்கிற நோர்த் ஈஸ்டன் ஹெரல் பேப்பருக்கு வேலை செய். நான் யோசித்தேன். சோமிதரன்..நீ ஒரு பத்திரிகைகாரனாக இருகிரதெண்டால் முதல்ல சுதந்திரமான பத்திரிகைகாரனா வா...தினகுரல்ல இருந்து வெளிய வந்து "பிறீலான்ஸ்" ஆக இரு .இல்லாடி காலம் முழுவதும் எதோ ஒரு பத்திரிகையில இருந்து குப்பை கொட்ட வேண்டியதுதான். யோசிச்சுப் போட்டு நாளைக்கு சொல்லு... சிவரமிடமிருந்து விடைபெற்றேன்...மேலும் இரண்டு எள்ளுபாகுகளை உள்ளே தள்ளிக் கொண்டு கணனியில் தான் எழுதிய கட்டுரையை தொடர்ந்தார் சிவராம்.

அதன் பின்னர் சிவராமோடு ம் , திசநாயகத்தோடும் இணைந்து நோர்த் ஈஸ்டன் ஹெரல்டில் பணீயாற்றுகையில் நிறைய விசயங்களை வெளியே கொண்டுவர சிவராம் என்னைத் தூண்டினார். வழுகையறு என்று ஒரு ஆறு யாழ்ப்பாணத்தில் ஓடுது அதைப் பற்றி எழுது என்பார். அகதிகளாக உயர் பாதுக்காப்பு வலையத்தில் இருந்து இடம் பெயர்ந்தவரகள் குறித்து எழுது என்பார். சிவராமின் ஊக்கம் என்னை நோர்த் ஈஸ்டர் ஹெரல்ட் ஆங்கிலப் பத்திரிகை தாண்டி தினகுரல் உட்பட பல பத்திரிகைகளில் எழுத தூண்டியது. பிபிசி யோடு இனைந்து அவர்களின் செய்தி ஆவணவிவரண படத்தில் பணியாற்றுவதற்க்கான வாய்ப்புக் கிடைத்தது.

ஒரு கட்டுரைக்கான விரங்களை சேகரித்து எழுதினால். அதில் பல குறைகள் சொல்வார். இது காணாது போய் இன்னும் விசயம் தேடு என்பார். கேள்விகளாய் கேட்பார். அவரின் கேள்விகள் பின்னர் எனது கேள்விகளாகின. நான் ஒரு கட்டுரைக்காக மாதக் கணக்கில் உழைக்கும் நிலையைக் கூட உருவாக்கியது. உதாரணமாக வழுக்கையாறு பற்றிய காட்டுரையை எழுதி முடிக்க 6 மாதம் ஆனது. உண்மையில் சிவராம் யாருக்கும் எதையும் நேரடியாக கற்றுத் தர மாட்டார். தனக்கிக்ருக்கும் தொடர்புகளை ஒருக்காலும் சொல்ல மாட்டார். ஆனால் அவருக்கு இல்லாத சில இடங்களில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வலுவையும் ஒரு முழுமையான விவரணக் கட்டுரையை எழுதுவதற்க்கான அர்பணிப்பையும் தேவையான உழைபின் அளவையும் அவர் உணர்த்தியபடியே இருப்பார். உண்மையில் உரு பத்திரிகைக்கரன் எனபன் செய்தி சேகரிப்பவன் மட்டுமல்ல அவன் தினம் தினம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டியவன் எனபதை அவர் உணர்த்துகிறவராகவே எனக்கு இருந்தார்

மிகச் சாதாரணமானவர்களை, பத்திரிகையியலுக்கு புதியவர்களை பத்திரிகைக்காராக்கிய பங்கு சிவராமுக்குரியது. ஆனால் கொஞ்சம் போதையேறினால்...இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களின் தலைகள் உருள ஆரம்பிக்கும். நான் எழுதிய சில கட்டுரைகள் பற்றி யாரவது நன்றாக சொன்னால் சிவராமுக்குக் குஷி வந்து என்னை அழைப்பார். நான் அப்போதெல்லாம் மது அருந்துவதில்லை. ஒரு பெப்சி யோடு உட்காந்திருப்பேன். எனக்காக பார்ட்டி என்று கூறி சிவராம் குடிக்க ஆரம்பிப்பார். சமயத்தில் திசநாயகம் அல்லது வீரகேசரி தேவராஜ் வருவார்கள். குறிப்பாக கிழக்கிலங்கை செய்தியாளர்களை காச்சியெடுப்பார். ஒரு காட்டுரை பத்திரிகையில் எப்பிடி எழுதக்கூடாது என்பதற்க்கான உதாரணங்களாக சிலரது பெயர்களைச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் கட்டுரை எழுதுவார்கள். என்று விவரிப்பார். ஆனால் அவருக்கு எல்லார் மீதும் நட்பு இருந்தது.

என் மனது சிவாராம் பற்றிய நினைவுகளில் ஓடிக் கொண்டிருக்கும் போது. கொழும்பு பேருந்து நிலையத்தில் நான் வந்த பேருந்து நிறுத்தப் பட்டது. நள்ளிரவில் களுத்துறை பஸ்ஸில் ஏறி கல்கிசையில் இருக்கும் சிவகுமார் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். சிவா அண்ணா விழித்தே இருந்தார். விடிய விடிய நானும் சிவா அண்ணாவும் மற்றவர்களோடு தொட்ர்பு கொண்ட படியே இருந்தோம். காலை 6 மணிக்கு பத்திரிகையளர் புத்திக வீரசிங்க தொடர்பு கொண்டார். இலங்கைப் பாரளுமன்றத்துக்கு பக்கத்தில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதனைப் பார்ப்பதற்க்காக புறப்படுகிறேன். பொலிசார் அங்கு இருகிறார்கள். தமிழ் பத்திரிகையாளர்கள் யாரும் இப்போது வர வேண்டாம் என்றார்.

எங்களுக்கு பதட்டம் .....கடத்தியவர்கள் சிவரமைக் கொன்று விட்டர்களோ? அடுத்து வந்த அரை மணி நேரத்தில் நாங்கள் நுகேகொடையில் காத்திருக்கிறோம். புத்திக்காவின் அழைப்பு வருகிறது. அவரின் குரல் உடைகிறது. அது சிவராமின் உடல்தான். தலையில் சுட்டுள்ளார்கள் போல இருக்கு........ ... . . .,.

90 இல் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளார் ரிச்சட் டி சொய்சாவின் உடலை இனம் காட்டிய சிவராமின் உடல் இன்று இன்னொருவரால் இனம் காட்டப் படுகிறது.ஆட்சியும் , கட்சிகளும் மட்டுமே அரசியலில் மாறுகின்றன. அதிகாரத்தை எதிர்த்து ஒடுக்குமுறைக் கெதிராக போராடுபவர்களின் நிலையும் மக்களின் நிலையும் மாறவில்லை. இலங்கை முழுவது அதிர்ச்சிக் கண்டன அறிக்கைகள் வெளீயாகின்றது. அடுத்து வந்த சில மணி நேரத்தில் சிவராமின் உடல் கிடந்த இடம் ஊடகக்காரர்களாலும் பொலிஸாலும் முற்றுகைக்குள்ளாகிறது. சிவராமுக்கு நெருக்கமான கிழக்கிலங்கைச் செய்தியாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு வருடதினுள் இப்போது சிவராம் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

கூட்டம் வருவதற்க்கு முன்னமே முதல் ஆட்களாக சிவகுமார்,குருபரன் ஆகியோரோடு நானும் சென்றேன். உயரமான் ஒரு வீரனைப் போன்ற தோற்றமளிக்கும் அந்த உடல் மல்லாந்து கிடந்தது.உறைந்தும் உறையாமலும் இரத்தம் பரவியிருக்கிறது அவரின் தலையெங்கும்.

சிவராம் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு பத்திரிகையாளன் எவ்வளவு கற்க வேண்டும் எவ்வளவு தேடல் கொண்டிருக்க வேண்டும்,எத்தகைய பணியை எந்த நிலையில் ஆற்ற வேணும் என்பதை அடுத்த தலை முறைக்கு உணர்த்தியவர் சிவராம்.சிங்களவர்களாலும் தமிழர்களாலும் மிகவும் அறியப்பட்ட பல்மொழி புலமை மிகு ஆளுமையின் மூளை சிதறியிருந்தது..................

சிவராமின் மகளை அழைத்து வருகிறார்கள். இலங்கை பாரளுமன்றத்தை நோக்கி தலை வைத்து மல்லாந்திருந்த சிவராமின் உடலின் மீது போர்த்தப் பட்டிருந்த துணியை விலக்குகிறார்கள். ஒரு பத்திரிகையாளனின் மகள் கதறிய கதறல் இலங்கைப் பாராளுமன்றின் தோட்டக்காரன் காதுவரை கேட்டிருக்கக்கூடும். சிவராம் என்கிற பத்திரிகைகாரனின் நிரந்தரமான இழப்பின் தொடர் அவலத்தை அவனின் குடும்பம் சுமக்க இருக்கிறது.

சிவராமின் உடல் காவல் துறையினரால் வாகனத்தில் ஏற்றப் படுகிறது. 6 அடுக்குப் பாதுக்காபு நிறைந்த இலங்கையின் பாரளுமன்றதின் அருகில் மிகத் துணிகரமாக தூக்கியெறியப்பட்ட பத்திரிகையாளனின் உடல் நாடளுமன்ற வளாகத்தைத் தாண்டி பயணீக்கிறது.உலகின் பல நாடுகளில் இருந்து கண்டணக் அறிக்கைகளூம் அனுதாபங்களும் வருகீரது. வழமை போலவே இலங்கை அரசு விசாரனைக் குழுவை அமைக்கிறது.

ரிச்சட் டி சொய்சா, யாழ்பாணத்தில் கொல்லப்பட்ட நிமலராஜன் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட நடேசன் போனற பத்திரிகையாளர்களின் கொலைகளைப் போலவே முற்றுப் பெறாத விசாரனைக்கான ஒரு குழு அமைக்கப் படுகிறது.கல்கிசையில் உள்ள சிவராமின் வீட்டினைச் சுற்றி ஏராளமான இரணுவ மற்றும் துணைபடகளின் உளவுத்துறைகள் காத்திருகின்றன. உடல் வீட்டினுள் கொண்டு செல்லப் படுகிறது.

29 ம் திகதி அதிகாலையிலேயே சிவராமின் உடல் அந்த இடத்தில் இருப்பது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது அதாவது 28 ம் திகதி 10.30 க்கு பம்பலபிட்டியில் கடத்தப்பட்ட சிவராம் 29ம் திகதி 1.30 இற்க்கு கடத்தப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீ க்கு அப்பால் இருக்கும் பாரளுமன்றத்திற்க்கு அருகில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். கண்டவர்கள் காவற்துறைக்கு தகவல் கொடுக்க காவல் துறை அதிகலாஇயில் உடலை கைபெற்றியிருக்கிறார்கள்.

ஆக இந்த கொலைத் திட்டத்தை நிறைவேற்றியவர்கள் இரண்டரை மணி நேரம் சிவராமை உயிரோடு வைத்திருந்திருக்கிறார்கள். குடிக்கும்போது சிவராம் பேசுவார் பின்னர் அதிகமாக குடித்து மட்டையாகுவதுதான் பெரும்பாலும் அவரின் வழக்கம். அவரை நல்ல போதையில் கடத்திச் சென்றவர்கள் அவரின் போதையை தெளிய வைக்க நினைத்திருபார்கள் போல. அவரின் உடலுக்கு அருகில் இரத்தம் தோய்ந்த தயிர் சட்டி இருந்தது. அவருக்கு தயிர் ஊட்டி போதை தணிக்க முனைந்திருபார்கள்.

இரவில் பேசாலம் என்பதின் அர்த்தம் குடித்துக் கொண்டே பேசுவதுதான் என்பதை எனக்கு முதலின் தெளிவித்தவர் சிவராம். குடி என்பது கூட சேர்ந்து குடிப்பவரைப் பொறுத்தே அதன் அற்புதம் தெரியும் என சிவராம் சொல்வார். உண்மைதான் எல்லோரோடும் குடித்துவிட முடியாது. சிவாரம் இன்று யாரோடு குடிப்பது என தீர்மானித்து வீட்டில் இருந்து புறப்படுவார்.

சிவராமின் உடல் மட்டக்களப்புக்கு கொண்டு செல்வதற்க்கான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அவரின் சொந்த மண்ணில் தனது உடல் புதைக்கப் பட வேண்டும் என்ர அவரின் ஆசையை நிரைவேற்ற அரசிடமும் ராணுவத்திடமும் அதிக அனுமதிகலைப் பெறவேண்டியிருந்தது.எனில் எங்கள் மண்ணியில் சுடலையில் கூட ராணுவம் முகாம் அமைதிருந்தது.மரணித்த பின்னரும் ராணுவ அனுமதியோடுதான் மயானதிற்க்குள் செல்ல முடியும்.....

12 comments:

Anonymous said...

மாமனிதர் ஆனாதால் மாடுமே பலரும் முண்டியடித்து பேசினர். விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் அறிவுஜீவிகளின் இழப்பு இழப்பல்லவோ?

Anonymous said...

இனியாவது பத்திரிகைக்காரர்கள் தமது நடுநிலைத் தன்மையை உறுதிப் படுத்த வேண்டும்.

பிரதீபன் said...

வழுக்கையாறு எனது வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி கந்தரோடை அம்மன் கோவிலுக்கு முன்னால் ஓடுகிறது. வழுக்கையாறை ஆவணப்படுத்த செங்கையாழியான் "நடந்தாய் வாழி வழுக்கையாறு" என்று ஒரு சிறுகதைப் புத்தகம் எழுதியவர். வழுக்கையாறு பற்றிய உங்களது கட்டுரையை எங்காவது வாசிக்கக் கிடைக்குமா?

Priya said...

சிவராம் கருணா பிரிந்த பொது ஆதரவளித்தவர் என்றும் பிறகு தனதுஆதரவை விலக்கிக் கொண்டதாகவும் கதை அடிபடுகிறதே. உண்மையா?

சோமி said...

http://www.tamilcanadian.com/page.php?cat=381&id=1864

பிரதீபன்,இந்த இணைப்பில் அந்த கட்டுரை இருக்கு. பார்த்து தெரிந்து கொள்ளலாம்

வெண்காட்டான் said...

see how fast the forces agaist us comment. Leave it. I didnt know him personally. But understood his ability. There is noone to equal him. He is simply superb. I had the same experience u had. I got to know about him at 7 am. Most horrble days. But I am sure they will assasinate him. He is such a GREAT person. I love to read his articles came in Veerakesari. On the last sunday he had booked 2 pages. May be he thought they wont shoot him because of his talent. Because I had that feeling earlier. but later I felt how his articles are strong. Tehre wont be anyone to replace him. There are somany aritcles are appeared in net. why dont u create a blog to him. all photos and articles. His articles are not avialble freely. naangal avaruku saiyum thoorogam ithu. innamum avar pattriya book velivaravillai. I will help you to find some artiles. I think tamilnaatham.com had some. but most of the links are not working.

சோமி said...

சிவராமின் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுவதாக பலரும் சொன்னார்கள் வெளியிட்டார்களா இல்லையா என்பது குறித்து எனக்கு தகவல் இல்லை. ஆனால் சமாதான காலதில் அவர் எதிர்வு கூறிய பல விசயங்கள் இப்ப நடக்குது..

வெண்காட்டான் said...

http://www.sangam.org/2009/05/Sivaram.php?uid=3451

pls keep in touch. u or me will caeate a blog for him. I am on a move. so I cant keep records. on a way to canada as a refugee. tc. this is not a comment. thanks

சோமி said...

dear venkaattaan,
i got ur msg. pls mail me.
my email Id: someeth13@gmail.com

Anonymous said...

ஒவ்வொரு தமிழ் பத்திரிகைக்காரனும் வைத்திருக்கும் சிவராமின் கதைகளை எழுதினாலே பல பத்தகங்கள் போடலாம். அவரால் வளர்க்கப்பட்ட எம்மால் எதனைத்தான் செய்யமுடிகிறது. அரசியலாலும் அதன் வெக்கையாலும் நாம் இம்சைதான் படுகிறோம். சோமி. நம்மால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்க வேண்டும். முடியுமாக இருந்தால் அவருடைய கட்டுரைகளைத் தொகுத்துப் போட பொருளாதாரத் திட்டமிடல் ஒன்றைச் செய்து முடியுங்கள். முடியுமாக இருந்தால்.
அது நல்லதொரு முயற்சியாக இருக்கும். நாளைக்கே காணாமல் போகும் வாழ்க்கையில் நாம் இப்போதும் கஸ்ரப் படுகிறோம். அதற்குள் ஏதாவது செய்து விட்டால் பரவாயில்லை.

சோமி said...

நிச்சயமாக...நம்மால் எது முடிகிறதோ அதைச் செய்வோம்.
நன்றி பெயரை போட்டு எழுத முடியாத நண்பர்களே நண்பர்களே.

மு. மயூரன் said...

தகவல்களுக்கு நன்றி சோமி. வாசித்து முடிக்கும்வரை கண்களை அப்பால் செல்லவிடவில்லை உங்கள் பதிவு.

சிவராமின் கட்டுரைகள் கொஞ்சம் தமிழ்நேஷனில் பார்த்துள்ளேன்.

இன்று நடப்பவற்றை சிவராம் அப்போதே எதிர்வு கூறியிருந்தார் என்பதுபோல் சொல்லி இருந்தீர்கள்.

புலிகளின் அழிவினை சிவராம் முன்கூட்டியே கணித்திருந்தாரா? அவ்வாறான கட்டுரைகளுக்குத் தொடுப்புக்கள் கிடைத்தால் இங்கே பகிருங்கள்.