Sunday, March 01, 2009

மட்டக்களப்பு முற்றவெளி. . .

மட்டக்களப்பின் மையப்பகுதி,
'மட்டக்களப்பு மாநகரசபை'என்ற பெரிய பெயர் பலகை,உயர்ந்து நிற்கும் காட்டடம் அதன் அருகே வாவியோரத்து முற்றவெளி, முன்னால் வெபர் மைதானம் அல்லது முற்றவெளி மைதானம்,கோட்டைச் சுவர் இவையனைத்தையும் இராணுவகச் சுருள் முட்கம்பிகளினூடே ஆவலாய்ப் பார்த்தன என் கண்கள் ஆயுதம் தரித்த 3 இராணுவத்தினரது கண்களும் 2 பொரிஸ்காரரது கண்களும் ஆயுதம் வைத்திருக்கும் இன்னுமொரு நபரது கண்களும் சமகாலத்தில் என்னைப் பார்த்தன.இண்டைக்கு இதை பார்க்கும் எனக்கு வயது 25.இன்றைய தேதி ஜூன் 15,2006.(மட்டக்கள்ப்பு உயர் பதுக்கப்பு வலையம்)


ஒரு நாள் மட்டக்களப்பு முற்றவெளி அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாலைப் பொழுதிலிருந்தே எக்கச்சக்க கூட்டம். சிறிதரன், மாபி என்கிற சிறீபவன்(மாப்பிளையின் சுருக்கம்) பவுச்சா இன்னும் சிலர் வின்சற் மகளீர் பாடசாலைக்கு அருகில் இருக்கும் மகளிர் விடுதிக்கு முன்பு சீமைப் பனைகளுக்கு கீழே நின்று கொண்டிருந்தனர்.
அன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு இந்தப் பகுதி மிகப் பெரும் பொழுது போக்குப் பிரதேசம்."இண்டைக்கு யாரெல்லம் பாடபோறாங்களாம்" என்று கேட்கும் சிறிதரனுக்கும் வயது 25 தான்.

அது ஒரு பெரிய இசை விழா, ஏ.ஈ.மனோகரன் குரல் மட்டக்களப்பு மையப் பகுதி வரை ஒலிக்கிறது. "மட்டு நகர் மரகத வீணை மீன்பாடும்..... " இலங்கையின் முன்னணி பொப் இசை பாடகர்களும் மெல்லிசைப் பாடகர்களும் பாடிகொண்டிருகிறார்கள்.பொப் பாடல்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்களின் ஆட்டம் பலமாக இருகிறது.

முற்றவெளி முழுவதும் சரியான கூட்டம். மாநகரசபைப் பகுதி ஒளிவெள்ளத்தில் தெரிகிறது. சறோயினி,மலர்,தேவகி இன்னும் சில பெண்கள் அப்பா அம்மவோடு கோட்டைக்கும் அரச அதிபர் பங்களாவுக்குமிடைப்பட்ட ஆற்றங்கரைப்பகுதியில் உட்காந்திருக்கிறர்கள்.எல்லா இடமும் துள்ளல் பாட்டும் மெல்லிசைப் பட்டும் இரவு 11 மணி தாண்டிக் கேட்டுக் கொண்டிருகிறது.

தா தையத்தைய தா தையத்தைய....... வந்தேன் இராவண மகாராசன்.... தென்மொடிக் கூத்து சத்தம் முத்தவெளியில் இருந்து வருகிறது.

"என்ன கூத்துக்கு போறயா? ஆரு நம்மட கன்னங்குடா சினத்தம்பி அண்ணாவியாரா போடுறாரு?"

"ஓண்டா......"

"மறுகான்ன நானும் வாறன் அவர் போடுற கூத்த பாத்திட்டே இரிக்கலாமெல்லுவா....."
"அவளுகளும் கூத்து பாக்க போயிரிக்களுகள்......நீ அவளுகளப் பாத்து கூத்தாடாமவுட்டா சரி"


(இது இன்றைய கூத்துப் படம் 2003 இல் மட்ட்க்களப்பில் நடந்தது.)

முழுநிலவு நாளில வருசா வருசாம் முத்தவெளியில நடக்கிற கூத்து அதிகம் பிரபலமானது.தென்மோடி வடமோடி 2 வகை கூத்தும் வருசா வருசம் மாறி மாறி நடக்கும்.தர்மபுத்திரன் கூத்தும் இராவணன் கூத்தும் பிரபல்யமானவை விடிய விடிய முற்றவெளி களை கட்டியிருக்கும்.

என்ன....இதெல்லம் எப்ப நடந்திச்சு தெரியுமா? நான் பிறக்கிறதுக்கு முந்தி அதாவது 25 வருசத்துக்கு முந்தி. என்னுடைய அப்பாதான் இந்தக் கதையளச் சொன்னார்.அதில இருக்கிற சிறீதரன்தான் என்து அப்பா. நான் பிறந்த பிறகும் கூட மட்டக்களப்பில கூத்து நடந்ததாம். 90க்கு பிறகுதான் முற்றாக நின்று போய் விட்டது.அதுக்குப் பிறகு இந்தப் பகுதி முழுமையான இரணுவலையமாகப் போய்விட்டது.இந்தியன் ஆமியும் முத்தவெளியில தங்கியிருந்தவனுகள்.இப்ப இலங்கை இரணுவம் இருக்கு.

92 இல் நான் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மாணவனாக சேர்ந்து கொண்டேன்.

"சேர் றில்(உடற் பயிற்சி கண்காட்சி க்கான தயார்ப் படுத்தல்) பழகுறதுக்கு இண்டைக்கு எத்தினை மணிவரைக்கும் முத்தவெளிக்குள்ள விடுவானுகள்".

"காலையில 7 மணியில இருந்து 11 மணிவரைக்கும் "
எனது கேள்விக்கு சுரேசாநந்தம் சேரிடமிருந்து வந்த பதிலிது.

இப்ப நாங்க போவதற்கு அனுமதிக்கப்படும் முற்றவெளி முன்பு டச்சு மற்றும் ஆங்கிலேயர் காலத்து மயானமாக இருந்ததாம்.அருட் தந்தை வெபர் அவர்களின் முயற்சியால் இது பின்னர் மைதானமாக மற்றப் பட்டது இதனால் இதற்கு வெபர் மைதானம் என்று பெயர் சூட்டப் பட்டது.

உணமையில ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் முற்றவெளியிலதான் கூத்து நடந்தது.அந்தப் பகுதியை இதுவரை நான் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை.எங்களுக்கு இது மட்டும்தான் முத்தவெளி.

இதுதான் மட்டக்களப்பு நகரில் இருக்கும் நான்கு பாடசாலைகளுக்கான ஒரே மைதானம்(புனித மிக்கேல் கல்லூரி,மெதடிஸ்த மத்திய கல்லூரி,விசன்ற் மகளிர் உயர்தப் பாடசாலை,புனித சிசிலியா மகளிர் பாடசாலை ஆகியவை அந்த நான்கு பாடசாலைகளுமாகும்) எங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டி காலத்தில் மட்டும் இந்த மைதானத்தை முழுமையாக எங்களால் உபயோகப் படுத்த முடியும்.

மைதானத்தை சுற்றி இராணுவ பாதுகாப்பு அரண்கள் இருக்கும்.கிட்டத்தட்ட ஒரு இராணுவப் பாடசாலை மாணவர்களைப் போல சூழல் எங்களை மாற்றி விட்டிருக்கும்.

ஆன, அப்ப எங்களுக்கு அது பெரிய பிரச்சனையே அல்ல வின்சன்ட் ,கொன்வெண்ட் பொம்பிளப்பிள்ளையள் வரும் அதுகளும் நாங்களும் ஒரே மைதனத்தில் இருப்பது என்பது ........எவ்வளவு பெரிய நிகழ்வு.நான் மாணவத் தலைவனாக இருக்கையில் மற்ற மாணவர்களை ஒழுங்கு படுத்துறது,உத்தியோக பூர்வத்த தொடர்புகளை வைத்துக் கொள்ளுவது எண்டு வின்சன்ற் ,கொன்வென்ற் பிள்ளையளுகளோடு அறிமுகமாகிறதுக்கு எடுத்த பிராயத்தனங்கள் எத்தனை. . .

நான் மட்டுமில்ல என் சக மாணவ தலைவர்களும் எனக்கு முன்பிருந்தவர்களும் கூட எத்தனை முயற்சி எடுத்திருப்பார்கள்......நாலு பொம்பிளப் பிள்ளையளுக்கு நம்மள தெரிஞ்சா அது நமக்குப் பெருமை எண்டுற காலமது.

வருசத்தில ஒருக்கா வெசாக் பண்டிகை(புத்த பகவான் ஞானம் பெற்ற காலம் இது யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட சர்வதேசப் பண்டிகை) இந்த மைதானத்தில கொண்டாடப் படும் அண்டைக்கு மட்டுதான் நங்கள் இந்தப் பகுதியில் ஒளியூட்டப் பட்ட இரவினைப் பார்க்க முடியும்.

"ஆச்சித்தப்பர லாளிலா பீச்சித்தப்பர லாளிலா ஆச்சித்தப்பர பீச்சித்தப்பர லாளிலாளி லாளிலா...."
சிறிலங்கா இராணுவ இசைகுழுவின் சிங்களப் பைலாப் பாடல்கள் அந்த முத்தவெளியை வியாபித்திருக்கும்.அன்றைக்கு ஒருநாள்தான் இரவில் வெளியில் வருவதற்கு அனுமதி என்பதால் சிங்களப் பாடல்களின் இடையே ஒலிக்கும் தமிழ்படல்களையாவது கேட்போம் என்று ஒரு பெரிய கூட்டம் வரும்.

விளையாடுவதற்கு இராணுவம் அனுமதித்த நாட்களில் இந்த முற்றவெளீ மைதானம் அமைந்துள்ள பகுதி முழுமயினையும் பார்ப்பதற்கு ஆர்வப்பட்டு இரணுவப் பகுதிகளுக்குள் ஒரு நாள் உள்நுழைந்தோம்.துப்பாக்கி முனையில் ஒருமணி நேரம் வைத்திருந்துவிட்டு பின்னர் ஆசிரியர் வந்து கேட்டுக் கொண்டதன் பின்னால் எங்களை விடுவித்தனர் அதுவும் தண்ணிகுடிக்க வந்தம் தெரியாமல் வந்து விட்டோம் என்று சொன்ன பிறகு.

இலங்கை இராணுவத்தின் மட்டக்களப்பு தலைமையகம் இந்தப் பகுதியில்தான் இருகிறது. எமது முத்தவெளியில்தான் இராணுவ உலங்கு வானூர்திகள் தரையிறங்கும்.இராணுவத்திற்குப் பயிற்சிகளும் இந்த மைதானத்தில் வைத்துதான் கொடுக்கப்படும்.

பெண்கள் பாடசாலை மாணவிகள் பயிற்சியில் ஈடுபடும் சமயங்களில் பெரும்பாலும் ஆண்கள் பாடசாலை மாணவர்களை உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை.இந்தப் பொழுதுகளில் அரைக் காற்சட்டை இராணுவத்தினர் மைதானத்தில் நிறைந்திருப்பர்.அவர்கள் செய்யும் பல சேட்டைகளை என் தங்கைகள் சொல்லக் கேட்டிருகிறேன்.

அப்போது என்னோடு படித்த ஒரு நண்பனொருவனுக்கு இதெல்லம் பார்க்கும் போது ஆத்திரமாதிரமாக வரும்.அவனுக்கு மட்டுமல்ல நாங்களும் இராணுவத்தை திட்டிகொள்ளாத நாட்கள் குறைவுதான்.மட்டக்களப்பின் மிக அழகான பகுதியொன்றை மயானமாக்கிவிட்டிருக்கும் இராணுவம் எங்களுக்கு பயங்கரமாகவே தெரிந்தனர்.

"இவனுகளை இங்கயிருந்து விரட்டணும்.நம்மட மைதானத்தில விளையாட நம்மள வுடுறதுக்கு அவனிட்ட கையேந்தோனுமாம் நீங்க போய் இளிச்சிக் கொண்டு நில்லுங்க.....அவனுகள் என்ன சோக்கா நம்மட இடத்துல விளையாடுறானுகள்"

இரணுவத்தினர் கிறீக்கற் உதைப்பந்தாட்டம், கூடைபந்தாட்டமெல்லம் வேளையாடுறதை மைதானத்தின் கம்பி வேலிகளுக்கு வெளியே இருந்து பார்க்கும் எங்களுக்கு கோவம் வரும்.என் நண்பன் இதையெல்லம் பார்த்துக் கொதித்துப் போவான்.

அந்த நண்பன் 1998 இல் படுவான்கரைக்குப் போனான். அதன் பின்னர் அவன் குறித்த தகவல்கள் இல்லை. சமதான பேச்சுவார்த்தக் காலத்தில் அவனை கொக்கட்டிச்சோலையில் சந்திதேன். விடுதலைப் புலிகள் இயக்கதில் இருப்பதாக சொன்னான். என்னோடு பேசுவதற்க்கு அவனுக்கு இப்போது அவகாசம் இல்லை.

அவனை சந்தித்துவிட்டு வரும் போது என்னை கூட்டிச் சென்ற இன்னுமொரு நண்பன் சொன்னான்

"இவன் இப்ப ஆட்லறி பிரிவில இரிக்காண்டா............."

இப்போது 2006 இல் நிலமை இன்னும் மோசம் முற்றவெளி அமைந்துள்ள இந்தப் பகுதிக்கு அவசரத் தேவைக்கு மட்டும் என் நண்பர்கள் போய் வருவதாகச் சொன்னர்கள்.என்னையும் சும்மா போகத்தேவையில்லை என்றார்கள். அஞ்சல் அலுவலகம்,மெத்டிஸ்ட் ஆலாயம்,வில்லியம் ஓல்ட் மண்டபம்,மகளிர் விடுதி, வின்சன்ற் பாடசாலை இவற்றுக்கு போபவர்கள் மட்டும் போய்வருகிறார்கள்.

முன்புபோல் சீமைப் பனைகளுக்கு கீழ் சைக்கிளை நிறுத்திவிட்டு ,இராணுவம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் இளைஞர்களைக் கூடக் காணவில்லை. எனது பழைய நண்பர்களில் பலர் நாட்டை விட்டு வெளீயேறி விட்டிருந்தனர்.(கிளைவிடும் பனைமரமே சீமை பனைகள் இவை பனங்காய் போல ஒருவகை காய்களை காய்க்கும். ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் அரிய வகை இனம். மட்டக்களப்பின் அற்புத அடையாலங்களில் ஒன்று)

நான் இப்போது முற்ற வெளியை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். துப்பாக்கி ஏந்திய அவர்களின் கண்கள் தொடர்ந்தும் என்னை நோக்கியே இருந்தன நண்பன் அவசரப் படுத்தினான் டேய் அவனுகள் உன்னப் பாக்கிறானுகள். நீ புது ஆள் பிரச்சனை வாரதுக்குள்ள கிளம்பணுண்டா.

சரியென்று ஹாயியார் ஹொட்டலுக்கு போவதற்காக வண்டியைத்திருப்பினோம்....( மட்டக்களப்பின் சுவைமிகு அசைவ உனவுகளுக்கு பெயர் பெற்ற இடம் அங்கு சாப்பிடும் மாட்டிறச்சிக்கு அப்பிடியொரு சுவை)

பெரியதொரு வெடியோசை ...

ஒரு பதட்டம்.....

ஹாயியார் கடைக்குள் நாம் ....

இன்னுமோரு சத்தம்......

பதட்டம் கூடியது.......

நண்பன் சொன்னான் *படுவங்கரையில் இருந்து ஆட்லெறி வருகுது. முத்தவெளிக்கு பின்னால விழுந்திரிக்கலாம் இவனுகளுக்கு எதும் சேதமெண்டால் சிக்கல்.

என் பழைய நண்பண் எனக்கு நம்பிக்கை தருவதற்க்காக இதை அடித்திருக்க கூடுமோ....
என் மனது சொல்லியது. . .

*(படுவான்கரை மாட்டக்களப்பு ஆற்றின் மேற்க்கு பகுதி இங்கு சூரியன் படுவதால்(மறைவதால்) இந்தப் பெயர் வந்தது கிழக்கு பகுதியில் சூரியன் எழுந்து(உதிப்பது) வருவதால் மட்ட்க்கள்ப்பு நகரம் இருக்கும் பகுதிக்கு எழுவான்கரையென்று பெயர்.படுவான்கரை முழுவதும் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது.)


***
(இந்தக் கட்டுரை கிழக்கு மாகாணம் முழுவது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் படுவதற்க்கு முன்னர் 2006 இல் மட்டக்களப்புக்கு இறூதியாக சென்று வந்த பின்னர் எழுதப் ப்ட்டது. என் மககளின் நம்ம்பிகைகள் தளர்ந்து போன இந்த சந்தர்ப்பத்தில் மீள் பிரசுரிக்கின்றேன்)

5 comments:

Anonymous said...

//*(படுவான்கரை மாட்டக்களப்பு ஆற்றின் மேற்க்கு பகுதி இங்கு சூரியன் படுவதால்(மறைவதால்) இந்தப் பெயர் வந்தது கிழக்கு பகுதியில் சூரியன் எழுந்து(உதிப்பது) வருவதால் மட்ட்க்கள்ப்பு நகரம் இருக்கும் பகுதிக்கு எழுவான்கரையென்று பெயர்.படுவான்கரை முழுவதும் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது.)//

????!!!! `கிழக்கின் உதயத்து`க்கு முன்பிருந்த நிலமையாதலில், இந்த வரிகளில் இருக்கிற குரூரமான குறியீட்டு ஒப்புமை ஏதோ செய்கிறது

சோமி said...

ம்....உண்மையில் எங்களின் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நாட்டுக்கு வெளியே இருப்பது வலி நிறைந்தது....

கண்னன் said...

மட்டக்களப்பு வாழ்வியல் குறித்த பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

செல்லையா முத்துசாமி said...

சோமி, நீங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் கூத்து படக்காட்சியை இத்துடன் இணைக்கலாம்.

சோமி said...

உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் செல்லையா அவர்களே. அதனை எடிட் செய்து அரைமணி நேரக்காட்சியாக வெளியிடும் எண்ணம் இருகிறது. தொடர்ந்து உங்கள் மேலான ஆலோசனைகலை எதிர்பார்க்கிறோம்