Sunday, January 09, 2005

கடல்கோள்...

இது மரண்ங்கள் மலிந்து போன கிரமத்தின் கதை. . .

உயிர் பலிகொண்ட கடற்கோள் பேரலை அடங்கிய மயான பூமியில் நாங்கள் பயணம் செய்தோம். மட்டக்களப்பு நகருக்கு வடக்கே இருக்கும் சீலா முனை கிராமத்தின் வாவியோரத்தில் இருந்து எதிர்க்கரையில் இருக்கும் நாவலடிக் கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் ரவி. வாவியோடும், கடலோடும் அதிகம் பரிச்சயம் உள்ள மீனவரான ரவி இன்னமும் பேரழிவு தந்த அதிர்ச்சி. அவலம், துன்பம் எதிலிருந்தும் மீளாதவராய் இருந்தார். இன்று நாவலடி கிராமத்தில் எஞ்சிய மக்கள் இவரைப் பற்றியே பேசுகின்றனர். நீரில் சிக்குண்டு தத்தளித்துக் கொண்டிருந்த நூறு பேரை இவர் காப்பாற்றியிருக்கிறார்.
ரவி பார்த்துக் கொண்டிருந்த நாவலடி கிராமம் இன்று பிணங்கள் புதையுண்டு போன மணல் மேடையாகக் காட்சி தருகின்றது. மட்டக்களப்பு வாவிக்கும், கடலுக்கும் இடையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் 475 குடும்பங்களைச் சேர்ந்த 1890, பேர் வசித்து வந்ததாக பிரதேச செயலகத் தரவுகள் கூறுகின்றன.
இவர்களில் 310 பேர் இறந்து போயுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தொகை 1000 க்கும் அதிகமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கு வசித்து வந்த குடும்பங்கள் அனைத்தும் குறைந்தது தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரையாவது இழந்துள்ளனர்.
கடல்வெள்ளம் உயர்ந்த போது வாவியின் நடுவில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக ரவி கூறுகிறார். அவர் தனது அனுபவத்தை விபரித்தார். நாங்கள் போட்டில் நின்ற போது திடீரென நீர்மட்டம் இப்பொழுது இருப்பதிலிருந்து 13,14 அடி உயர்ந்தது. எங்களுக்குச் சுற்றிலும் நீர் தான் தெரிந்தது. சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் வெறும் இலைகள் இருப்பதுபோல், அவற்றின் உச்சிகள் தெரிந்தன. சிறிது நேரத்தில் நீர் குறையத் தொடங்கியபோது தான் எங்களுக்கு விபரீதம் புரிந்தது. ஊரைக் கழுவிக் கொண்டு தண்ணீர் கடலுக்குள்; வடிந்து சென்றது. ஆற்றுக்குள் இருந்து மக்கள் கத்திக் கொண்டிருந்தனர். அவர்களின் ஓலங்களுக்கு இடையில் எங்களால் இயலுமான வரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தோம். இருப்பினும் ஆற்றின் உள்ளே தத்தளித்தவர்களில் ஒரு சிலரைத்தான் எங்களால் காப்பாற்ற முடிந்தது. பெருமளவு மக்கள் மரங்களைப் பிடித்த வண்ணம் கரைகளிலே கூக்குரலிட்டவாறு நின்றனர். அவர்களில் 100 பேர் வரையில் எங்களால் காப்பாற்ற முடிந்தது. இவர்களில் 8 இராணுவத்தினரும் அடங்குவர். மக்களைக் காப்பாற்றுவதற்கு இராணுவமும் எங்களுக்கு ஓரளவு உதவி புரிந்தது. கடைசியில் எனது படகும் உடைந்து போய்விட்டது. இந்தப் போராட்டம் முடிந்த பின்னர் சடலங்கள் மிதக்கத் தொடங்கின. ஆற்றில் மிதந்த எல்லாச் சடலங்களையும் எங்களால் எடுக்க முடியவில்லை. அவை கடலோடு சங்கமிக்கத் தொடங்கின என் அதிர்ச்சியான தனது அனுபவத்தைக் கூறுகிறானர் ரவி.
அரைமணி நேரம் வரையில் தண்ணீர் கிராமத்திற்குள் இருந்தது. எங்களால் எடுக்க முடிந்த சடலங்களை எடுத்தோம். இப்போது உள்ளவற்றை அவை உள்ள நிலையிலேயே எரியூட்டுகிறோம். பெருமளவில் கம்பிவேலிகளில் சிக்கியபடி பெருமளவு பெண்களின் சடலங்கள் இருக்கின்றன என்று ரவி கூறிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த அவரது உதவியாளர் இரவு பூராகவும் நாவலடி கிராமத்தில் அழுகுரல் கேட்பதாகவும் பேரலை வந்த அன்றிரவு தங்களைக் காப்பாற்றுமாறு நாவலடிப் பகுதியில் இருந்து கூக்குரல் கேட்ட வண்ணமே இருந்தது. எங்களால் அந்தச் சத்தங்களைத் தாங்க முடியவில்லை. ஆற்றங் கரை ஓரத்தில் இருந்த நாங்கள் உடனடியாக அதிலிருந்து தூர இடங்களுக்குச் சென்று தங்கினோம் என்றார்.
ரவியுடன் உரையாடிக் கொண்டிருக்கையிலே நாவலடியில் இருந்து சிலர் வள்ளத்தின் மூலம் வாவியினைக் கடந்து சீலாமுனைக்கு வந்தனர். இவர்கள் இறந்த தங்கள் உறவுகளுக்கு 8ஆம் நாள் செய்யப்படும் சடங்கினை செய்து விட்டு வருவதாக ரவி கூறினார். அழுத வண்ணம், வாய்விட்டு தங்கள் வேதனையைக் கதறிய வண்ணம் அவர்கள் வள்ளத்திலிருந்து இறங்கினர். 'எங்கட பிள்ளைகள காப்பாற்ற முடியல்லையே" என்று அவர்களின் அவலமான குரல் மிக வல நிறைந்ததாய் இருந்தது.
என்.சௌந்தராஜா தனது இரண்டு பிள்ளைகளையும் தாய், தந்தையரையும் இழந்து தனது மனைவியை மட்டும் காப்பாற்றி இருக்கிறார். இறந்து போன நால்வரில் மூவரின் சடலத்தை மட்டுமே மீட்டெடுக்க முடிந்த இவர் இன்று தனது உடைந்து போன வீட்டினுள்ளே இறந்தவர்களுக்கு 8 நாள் கிரியை செய்து விட்டு வந்திருக்கிறார். தனது உறவுகள் பறிபோன சோகத்தை விபரித்தார். 'என்ட பிள்ளை கடைசி வரையும்" அப்பா", அப்பா. என்று கத்தியபடி என் கழுத்தை கட்டியணைந்தவாறே இருந்தான். கடல் அலைகளில் தாக்கம் அதிகமாக இருந்த போது நான் நீருக்குள் சிக்கி செத்துப் போய் விடுவேன் என்ற கட்டத்தில் அவனாவது பிழைக்கட்டும் என்று என்னில் இருந்து அவனைக் கழற்றி விட்டேன். அவன் கடலோடு போய்விட்டான். மற்ற மகன் வகுப்புக்குப் போனவன் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து கடலோடு சங்கமமாகி விட்டான்.
எங்களுக்கு யாராவது இதைப் பற்றிச் சொல்லியிருந்தால் சொத்துகள் அழிந்தாலும் பரவாயில்லை, எங்கள் உறவுகளையாவது காப்பாற்றியிருக்கலாம். 'இனி இந்த உயிர்களை எவ்வாறு நாங்கள் மீட்டெடுப்பது" என்று சௌந்தராஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தனது நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்து அவர்கள் விபரங்களைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையெ என்று கண்களில் நீர்வழியக் கூறினார் சௌந்தராஜாவின் மைத்துனரான எஸ்.கெனமன்.
' 5 நிமிடத்திற்கு முதல் சொல்லியிருந்தால் கூட தப்பியிருப்போம். இன்றைக்கு இந்த ஊரே இப்படி அழிந்து போயிருக்காது. எங்களிடம் 300 இற்கும் மேற்பட்ட படகுகள் இருக்கின்றன. அதில் எங்கள் உறவுகளை ஏற்றி நடு வாவிக்கு வந்தாவது உயிர்களைக் காப்பாற்றியிருப்போம்" என்றான் கெனமன். இனி விறகு வெட்டிப் பிழைத்தாலும் பிழைப்போமே தவிர, இந்த மயான பூமியில் குடியேற மாட்டோம் என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போது இப்பகுதியில் மீள்குடியமர 30000 ரூபா தருவதாகவும் இனிமேல் இவ்வாறான பிரச்சினைகளின்போது உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரச அதிகாரிகள் கூறுகின்றனர் என ஒரு இளைஞர் தெரிவித்தார். அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே கெனமனும் சௌந்தராஜாவும் கோபமடைந்தனர். இங்கிருந்து பார்த்திருந்தால் தான் எங்கட கஷ்டம் புரியும். இனி கடலுக்குப் பக்கத்தில் ஒரு நாளும் இருக்க மாட்டோம். நாவடி இப்ப ஊர் கிடையாது. அது சடலங்கள் நிரம்பிய சுடுகாடு என்று கூறியபடி அரசாங்கத்தைக் கெட்ட வார்த்தைகளினால் திட்டத் தங்கள்; ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.
எங்களுக்கு இப்படியான அலை பற்றியும் அலை ஏற்பட்டால், கடலில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் சொல்லியிருந்தால் இன்றைக்கு எங்கள் உயிர்களைக் காப்பாற்றியிருப்போம். இன்று தரை மட்டமான எங்கள் வீடுகளுக்குச் சென்று அழுகிய பிணங்களுக்கு இடையிலும், துர்நாற்றத்துக்கு இடையிலும் இறந்தவர்களுக்கான இறுதிக் கடமைகளை நிறைவேற்ற வேண்டி வந்திருக்காது என்றார் சௌந்தராஜா. மிகவும் உணர்வு பூர்வமாக இருந்த இவர்களால் அதிக நேரம் பேசமுடியவில்லை. என் உறவினர்கள் 42 பேர் மாண்டு போய்விட்டனர். இனி எங்களுக்கு என்ன வேண்டும். யாருக்கு வேண்டும் நிவாரணங்கள் எல்லாம் என்கிறார். தன் மூன்று பிள்ளைகளின் உடல்களைக் கூடக் காணக் கிடைக்கவில்லையே என்ற வற்றாத கவலையோடு இருக்கும் கெனமன்.
யாராலும் பேச முடியவில்லை. பேச ஆரம்பித்ததும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். மனோநிலை ரீதியில் இவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்பு வெளிப்படையாகவே தெரிகின்றது. இப்போது கௌரீசன் என்ற கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரி இளைஞன் மனோவியல் ரீதியான தனது பாதிப்பைக் கூறினார்.
எனக்கு மக்களின் கத்துகிற, ஓடுகிற சத்தங்கள் இரைச்சல்களைக் கேட்டாலோ இப்போது பயமாக இருக்கிறது. நான் தண்ணீர் திரண்டு வருவதைக் கண்டு ஓடிச் சென்று ஒரு மேல் மாடி வீட்டில் ஏறினேன். மேல் மாடியில் கீழ்த் தளத்தை நிரப்பிய தண்ணீர் மேலே வருமோ என்று பயந்து கொண்டிருந்தோம். தண்ணீர் வடிந்து செல்லும்போது மக்களை அடித்துச் செல்வதைப் பார்த்தேன். அவர்களின் ஓலம் இன்னமும் என்னுள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. சாகலாம், ஆனால், இப்படி பயந்து சாகக் கூடாது. எங்களின் ஒரு தலைமுறை அழிந்து போய் விட்டது (12000 சிறுவர்கள் இறந்துள்ளதாக இதுவரையில் கிடைத்த உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.) இந்த மிகப் பெரிய அழிவை முன்கூட்டியே சொல்வதற்கு யாராலும் முடியவில்லையே. குளோபர் விலேஜ் என்கிறார்கள். உலகம் சுருங்கி விட்டது என்கிறார்கள். ஆனால் 3 மணிநேரத்துக்கு முதல் நடந்த விடயத்தை நாங்கள் அறிய முடியவில்லையே. இது தான் தகவல் யுகமா? நியூஸிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், எங்களுக்கு அறிய முடியவில்லை. இதைத் தான் உலக மயமாக்கல் என்பதா? என்று கேள்வி எழுப்பினார் கௌரீசன்.
நான் குழந்தைகள், சிறுவர்களை நினைத்துக் கதறினேன். என் கண் முன்னால் அடித்துச் செல்லப்படும் சிறுவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்று ஆதங்கம் எனக்கிருக்கின்றது. இருப்பினும் ஆற்றுத் தண்ணீரோடு பரிச்சயமான இந்தச் சிறுவர்கள் ஓடித் தப்பி தங்கள் உயிர்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் என்னால் இன்னமும் சகஜ நிலைக்கு வர முடியவில்லை. என்று சொல்லும் கௌரீசனின் முகத்தில் இன்னமும் கலவரம் தெரிகிறது.
எந்த உதவியும் இன்றி நாங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள முடியாமல் நீரோடு பேராடியபடி இறந்துபோன உடல்கள் இன்னமும் நாவடியில் இருப்பதாக ரவி கூறுகின்றனர். இன்னமும் ஆங்காங்கே இந்த உடல்கள் இருந்த வண்ணமே இருக்கின்றன. பாண்டி மன்னனின் புகழ் சொல்லும் ஒரே ஒரு பண்டைய பாடலில் 'பிடித்த வேலுடனும் மடித்த வாயுடனும் பாண்டிய வீரன் போர் முனையிலே இறந்து கிடக்கிறான்" என்பதைப் போல இறந்த பின்னும் தங்கள் உயிருக்கான போராட்டத்தை வெளிக்காட்டிக்கொண்டு இன்னமும் உடல்கள் ஆற்றினுள் மிதந்த வண்ணமும் நாவலடிப் பிரதேசத்திலும் இருந்து கொண்டிருக்கின்றன.
இந்த நாவலடி கிராமத்தில்தான் அன்னை பூபதியின் சமாதி இருந்தது. இன்று அந்த பூமி சமாதிகளின் பூமியாகிவிட்டது. இந்த கிராமத்துக்கு அண்மையாக இருந்த காயந்திரி பீடத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் கடலினால் காவு கொள்ளப்பட்டனர். இன்று பல கிராமங்கள் இல்லாமலே போய் விட்டன. இந்தக் கிராமங்களில் இருந்து தப்பியவர்களின் உள்ளங்களும் சொனந்தராஜாவைப் போலவும் கெனமனைப் போலவும் ரவியைப் போலவும் கௌரீசனைப் போலவும் கொதித்துக் கொண்டு வேதனையின் வடிவமாயிருக்கின்றனர். இதில் சொல்லப்பட்ட கதை ஒரு கிராமத்தின் கதை மட்டு மல்ல ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த கதையின் ஒரு பிம்பமே.

No comments: