சோமிதரனுடன் ஒரு சந்திப்பு “நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு
அது ஒரு பயங்கரமான நிகழ்வு”
சந்திப்பு: தேவிபாரதி
நூலகம் எரிக்கப்பட்ட அதே 1981ஆம் ஆண்டில் மே மாதம் 11ஆம் தேதி யாழ் பகுதியைச் சேர்ந்த பருத்தித் துறையில் நான் பிறந்தேன். சரியாக 19 நாட்களுக்குப் பிறகு, 1981 ஜூன் மாதம் முதல் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தையோ அதற்குப் பின்னர் 1983 ஜூலையில் நடைபெற்ற பெரும் இனக்கலவரத்தையோ நேரில் அறிந்த தலைமுறையைச் சேர்ந்தவனல்ல நான். கால் நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரைத் தொடங்கிய தலைமுறையைச் சேர்ந்தவனுமல்ல. குண்டுவெடிப்புகளினூடாகவும் இடப்பெயர்வுகளினூடாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்காணவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமுறையைச் சேர்ந்த நான் எங்கள் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை, அது எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் கடந்து சென்ற பின்னரே தெரிந்துகொண்டேன்.
என் பத்தாம்வயதில் எரிந்து நின்ற அந்தக் கட்டடத்தை முதன்முதலாகப் பார்த்தேன். அப்பொழுது, பத்தாண்டுகளுக்குப் பிறகு யாருமே அதை நினைவில் வைத்திருக்கவில்லை. நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு அது ஒரு பயங்கரமான நிகழ்வு. அதனால்தான் அதைக் குறித்து பெரிய இலக்கியப் பதிவுகள் உருவாகவில்லை. சேரன் ஒரு கவிதை எழுதினார், எம். ஏ. நுஃமான் ஒரு கவிதை எழுதினார், வேறு சில நல்ல கவிதைகளும் உள்ளன. மற்ற பல கவிதைகளிலும்கூட எரிக்கப்பட்ட யாழ் நுணலகம் பற்றிய சில வரிகள் தென்படுகின்றன. ஆனால், ஒரு பெரிய நாவலோ குறிப்பிடும்படியான திரைப்படமோ ஒரு நாடகமோகூட எம்மிடையே உருவாகியிருக்கவில்லை.
அது தமிழர்களின் பண்பாட்டு மையம், அறிவுத் தேடலின் அடையாளம். பிறகு அது ஈழ விடுதலைப் போராளிகளுக்கான பாசறையாகவும் மாறியது. நூலகத்தை மையமாகக்கொண்டு அப்பொழுது யாழ்ப்பாணத்தில் ஏராளமான வாசக சாலைகள் இருந்தன. அவை எல்லோரும் ஒன்றுகூடுமிடங்களாகவும் விளங்கின. பல்வேறு போராளிக் குழுக்களும்கூட அவற்றில்தான் உருவாயின. பிற்காலங்களில் பல வாசக சாலைகள் போராளிகளுக்கான தங்கும் இடங்களாக மாறியிருந்தன.
எரிக்கப்பட்டுச் சாம்பல் படர்ந்து நின்ற யாழ் நூலகமேகூடப் புலிகளின் ராணுவத்தளமாகத்தான் எனக்கு அறிமுகமாயிற்று. அப்பொழுது யாழ்ப்பாணக் கோட்டை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு நாள் யாழ் கோட்டையில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக அழைத்துச்செல்லப்பட்ட மாணவர் குழுவுடன் நானும் கோட்டைக்குள் நுழைந்துவிட்டேன். மற்றவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தருணத்தில் நானும் என் தோழன் ஒருவனும் எரிந்து நின்ற அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதிக்குச் சென்றோம். வியப்பூட்டும் விதத்தில் கம்பீரமாக நின்ற அந்தக் கட்டடம்தான் இயக்கத்தின் பேஸ் (படைத்தளம்) என்று சொன்னான் என் தோழன். நான் பார்த்த அந்தக் கட்டடத்தைப் பற்றி அன்றிரவு என் அம்மாவிடம் சொன்னேன். அம்மாதான் எனக்கு அது யாழ் நூலகம் எனச் சொன்னவர். நூலகம் பற்றிய முதலாவது தகவலை எனக்குச் சொன்னவர் என் அம்மாதான்.
பிறகு யாழ் கோட்டை சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொழுது புலிகளோடு சேர்ந்து அங்கு வசித்துக்கொண்டிருந்த 5 லட்சம் மக்களும் வெளியேறினோம். ஆசியாவின் பெரிய இடப்பெயர்வுகளுள் ஒன்று அது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வெளியேறிய பிறகு ஆள் நடமாட்ட மற்ற வெற்று நிலமாகத்தான் சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. பிறகு யாருமே வசித்திருக்காத ஒரு தருணத்தில் நூலகத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டது சந்திரிகா அரசு. அது ஒரு வகையான நல்லெண்ண நடவடிக்கை போலத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் இருந்த அரசியல் வேறுவகைப்பட்டது. இடம்பெயர்ந்து சென்றவர்களை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப அழைப்பதற்கு அதைப் பயன்படுத்திக்கொண்டது சிங்கள அரசு. நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை உலகின் நினைவுகளிலிருந்து முற்றாக அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சி என்றும்கூட அதைச் சொல்லலாம். அது ஒரு நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
1981இல் நடைபெற்ற கொடிய நிகழ்வுகளுக்கான ஒரு வரலாற்றுச் சாட்சியமாக எரிக்கப்பட்ட அந்த நூலகம் அதன் சாம்பல்களோடு அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிப் பாதுகாக்கப்பட்டிருந்தால் எம் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு எனக்கும் என் தலைமுறைக்கும் இருபது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்காது. ஆனால், வரலாற்றின் பக்கங்களிலிருந்து தன் கொடுஞ்செயலை முற்றாகத் துடைத்தெறிய முற்பட்ட சிங்களப் பேரினவாத அரசு எதிர்ப்புகளே இல்லாத ஒரு தருணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. இப்பொழுது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எங்களிடையே அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. பதற்றத்துடன் இடம்பெயர்ந்து சென்ற யாழ்ப்பாண மக்கள் எந்த ஆதாரத்தையும் எடுத்துச் செல்லவில்லை.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளனாக யாழ் நகருக்குத் திரும்பிவந்தபொழுதுதான் அந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தெரிந்துகொண்டபொழுது நான் கடும் அதிர்ச்சிக்குள்ளானேன். அநேகமாக அந்தத் தருணத்தில்தான் யாழ் வரலாற்றின் இந்தக் கொடிய பக்கங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் எனக்குத் தோன்றியிருக்க வேண்டும். காட்சி ஊடகத் துறை மாணவனாக, சென்னை லயோலாக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கியபொழுது அந்த எண்ணம் வலுவடைந்தது. பிறகு நான் அதைப் பற்றிச் சிந்திக்கவும் திட்டமிடவும் தொடங்கினேன். இங்கு சென்னையில் அதற்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் கிடைத்தன. உயிர்நிழல் இதழ் எனக்குப் பெரிய அளவில் துணை நின்றது. பணம் முதலான அடிப்படை விஷயங்களைச் சேகரித்துக் கொண்டு தயாரானபொழுது மறுபடியும் ஈழத்தில் போர் மூண்டுவிட்டது. பிறகு எனக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது. என்ன நடந்தாலும் சரி எனச் செயலில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எதிர்காலத்தில் யாராலும் அந்த வரலாற்றை மீட்டெடுக்க முடியாமல் போய்விடலாம்.
இலங்கையில் அப்போது வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகைகள் இது குறித்து வெளியிட்டிருந்த செய்திக் கட்டுரைகளும் பிரசுரித்திருந்த புகைப்படங்களும்தான் இப்பொழுது எங்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ள சில வகைப்பட்ட ஆவணங்கள். அவை கொழும்பு நூலகத்தில் இருந்தன. அங்கு ஆவணங்களைத் தேடும் முயற்சியை மேற்கொள்வது அபாயகரமானது. நூலகத்திற்கு வரும் தமிழ் வாசகர்கள் எதைப் படிக்கிறார்கள் என்பதுகூடக் கண்காணிப்புக்குட்பட்டதாயிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான செய்திகளை அந்த நூலகத்திலிருந்துதான் நான் திரட்டினேன். அவற்றைத் திரட்டுவதற்கு நான் பெரிய அளவு சிரமப்பட வேண்டியிருந்தது. என் சிங்கள நண்பர்கள் பெருமளவில் உதவினார்கள். நூலகத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ஆட்களைக் கண்டறிவதிலும் எனக்குப் பல தடைகள் இருந்தன. பெரும் முயற்சிக்குப் பிறகு அதன் ஒரே ஒரு வாசகரைக் கண்டுபிடித்தேன். அப்போதைய நூலகர் இப்போதும் யாழ்ப்பாணத்திலேயே வசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது யாழ் நகரின் மேயராக இருந்தவரே இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மேயராக இருந்தார். யாழ் சூறையாடப்பட்டபொழுது எரிக்கப்பட்ட ஈழநாடு பத்திரிகையின் பணியாளர் ஒருவரையும் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. தன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதை எரியும் அந்தக் கட்டடத்தினுள் பதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த நேரடிச்சாட்சி அவர். ஆனால், முழு நகரமுமே ராணுவத்தின் கண்காணிப்புக்குட்பட்டிருக்கும் ஒரு தருணத்தில் இது போன்ற ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்கும் முயற்சி கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சவாலானது.
படம் பிடிப்பதற்கும் நேர்காணல்களை எடுப்பதற்கும் நாங்கள் பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. நடந்தவற்றை நினைவுகூர்வதிலும் விமர்சனங்களை முன்வைப்பதிலும் எல்லோரிடத்திலும் தயக்கம் நிலவியது. நிச்சயமற்ற ஒரு சூழலில் அது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். நாங்கள் பல பொய்களைச் சொன்னோம். சென்னை லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத் துறை மாணவன் என்ற அடையாளம் எனக்குப் பெரிய அளவில் உதவியது. அப்படியும் ராணுவத்தினர் எங்களைக் கண்காணித்துக் கொண்டேதான் இருந்தனர். பெரும்பாலும் கையடக்கக் காமிராவைக்கொண்டே படம் பிடித்தேன்.
பிறகு எல்லாவற்றையும் ஹார்ட் டிஸ்க்குகளில் பதிவுசெய்து சென்னைக்கு எடுத்துவந்தேன். இங்கு எல்லாத் தரப்பினரும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்தனர். நாசர், லெனின் எனப் பலரைச் சொல்லலாம். இங்குள்ள பத்திரிகைகள் எங்களுக்குப் பக்கபலமாக இருந்தன. பல நிர்ப்பந்தங்களுக்கிடையே தமிழகம் எங்களுக்கு உறுதுணையாக நின்றது.
என்னுடைய இந்த ஆவணப்படத்தில் போதாமைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். கிடைக்கப்பெற்ற ஆதாரங்களைக் கொண்டு சிறப்பாகச் செய்ய முயன்றுள்ளேன். என் இந்தத் தலைமுறைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய அந்தக் கொடூர நிகழ்வை நினைவூட்ட வேண்டும். சொந்த நாட்டிற்குள்ளும் அயல் நாடுகளிலும் அகதிகளாக வாழும் எம் மக்களுக்கு அவர்களது உன்னதமான பண்பாட்டு அடையாளத்தை, அது பிறகு எரிக்கப்பட்டதை நினைவூட்ட வேண்டும். யாழ் நூலகம் ஈழத் தமிழர்களின் பழங்கனவாகப் போய்விட்டது.
அதை நினைவுகூரும் திராணிகூட அகதிகளுக்கு இல்லை. கல்வி கற்பதற்கேகூட வாய்ப்பில்லாதவர்களாய் அகதி முகாம்களின் சுகாதாரமற்ற, பத்துக்குப் பத்தடி கொண்ட குறுகிய அறைகளில் வாழும்படி சபிக்கப்பட்டவர்கள் எம் மக்கள். பெரும் சுமையாய் மாறிவிட்ட வாழ்வை எந்தக் கனவுமின்றி வாழ்ந்து தீர்க்க வேண்டியவர்களாய் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு அவர்களுடைய எரிக்கப்பட்ட கடந்த காலத்தை நினைவூட்ட வேண்டும். சாம்பல் குவியல்களிலிருந்து எம் துயரங்களை மீட்டெடுத்தாக வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது இல்லையா?