Wednesday, January 06, 2016

த்தூ..... ஊடகம்

த்தூ..... என்று ஊடகங்களின் மீது காறித் துப்புவதற்கான எந்த அருகதையும் அற்றவர் விசயகாந்து. ஆனால் காறித் துப்பப் படுவதற்க்கான தகுதியை பல ஊடகங்கள் கடந்த காலங்களில் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. ஊடகச் சந்திப்பு ஒன்றில் வைத்து  ஊடகங்கள் அவற்றின் முதலாளிகளுக்கு விசுவாசமாகச் செயற்படுவதாகக் கூறி  ஊடகவியலாளர்களைப் பார்த்து விசயகாந்து காறித் துப்பினார். இதற்க்கு சாமானியர்கள் பலரிடமிருந்து ஆதரவான கருத்துக்கள் வந்தன.

இங்க கட்சிகாரனும் ஊர ஏய்ச்சவனுந்தானே டிவி நடத்துறான் என்று   காய்கறிக் கடையில் ஒருவர் சொன்னதை அடுத்தவர் வழிமொழிகிறார்.
ஆகவே கண்டவரெல்லாம் துப்பக் கூடிய அளவுக்கு ஊடகங்களின் மாண்பு தரம்தாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதுதானே இதன் வெளிப்பாடு.  ஆனால் இதில் சுவாரசியம் என்னவெனில் இந்த துப்பல்கள் காட்சி ஊடகத்தின் மீதுதான் பெரும்பாலும் விழுகின்றது. டிஆர்பி என்ற ஒன்றுக்குக்காக அவை எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவை என்பதை மக்கள் புரிந்திருக்கிறர்கள்.

.விசயகாந்து துப்பியிருப்பது நாகரிகமற்ற செயல் ஆனால் இதைத்தான் அண்மையில் இளையராஜாவும் சில நாட்கள் முன்பு பாமக நிறுவனர் ராமதாசும் நாகரிகமாகச் செய்தார்கள். திரும்பத் திரும்ப கேட்கப்பட்டஒரே கேள்வியால் சலிப்படைந்த ராமதாசு மிக சாதுர்யமாக ஒரு பதில் கேள்வி கேட்டார்.அது அண்மையில் நடந்த உலகப் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டின் பெயர் குறித்த கேள்வி . பதில் தெரியாமல் தவித்த ஊடகக்காரரிடம்  கேள்விக்கான விடையச் சொன்னார். பின்னரும் விடாமல் அந்த மாநாடு எங்கே நடந்தது எனக் கேட்டார் அதற்க்கும் பதில் தெரியவில்லை. பாரிஸ் நகரில் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
 இது நமக்கான பாடம் .  திரும்ப கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.  திரும்பக் கேள்வி கேட்கக் கூடாது என நாம் சொல்ல முடியாது.

அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி , திறமை, கட்சித்தாவல் குறித்து நாம் கேள்வி கேட்டு அவர்களை அசிங்கப்படுத்த முனைந்தால் அவர்கள் பதிலுக்கு நமது  ஊடகத் தாவல்கள் குறித்து கேட்க ஆரம்பிக்கிறார்கள். 5000 சம்பளம் அதிகமாகக் குடுத்தா நீங்க வேற டிவிக்கு வேலைக்கு போயிடுவீங்க என்று விசயகாந் பல முறை சொல்லிவிட்டார்.   சனநாயகத்தின் ஒரு தூண் இன்னொரு தூணைப் பார்த்து கேள்வி கேட்கிறது. ஏனெனில்  சனநாயகத்தில்  எதிர்க் கேள்வியே கேட்க முடியாத ஒரு தூணுக்கு  இருப்பது போன்ற சட்ட அதிகாரம்  ஊடகத் தூணுக்கு இல்லை. அரசியலும் ஊடகமும் பிழைப்புக்கான வழி என்று நினைப்பவர்கள் அதிகரித்துவிட்ட ஒரு சூழலில் இதுதான் நிகழும்.

நான் ஊடகவியலாளனாக உள் நுழைந்த அந்த நாட்களில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் களப் போராளிகளாகவும் இருந்தனர். மக்கள் பிரச்சனைக்காகவும் அரச அடக்குமுறைக்கு எதிராகவும் எழுதுவதோடும் பேசுவதோடும் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் களத்தில் இறங்கிப் போராடவும்  செய்தனர். மே 3ஆம் திகதி உலக  ஊடக தினத்தில் ஒரு ஒன்றுகூடலோ பேரணியோ  போராட்டமோ  பல இடங்களிலும் நிகழும். வலுவான ஊடக இயக்கங்கள் உயிராபத்திலும் இயங்கிக் கொண்டிருந்தன. இன்று, இலங்கைத் தமிழ் ஊடகச் சூழலும் கொண்டாடப் படக்கூடிய நிலையில் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நிகழ்ந்த கொலைகளும் இடப் பெயர்வுகளும் கணிசமான ஊடகவியலாளர்களை மௌனிக்கச் செய்திருக்கிறது. இந்த இக்கட்டான காலப்பகுதியில் ஈழச் செய்திகளை வழங்கும் பல அரைவேக்காட்டு பொறுப்பற்ற அவதூறு பரப்பும்  இணயத் தளங்கள் வந்துவிட்டது. இது குறித்து விரிவான கட்டுரை எழுதலாம்.

இந்த நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் ஊடகங்களுக்கு எதிரான அச்சுறத்தல் காலம் காலமாகவே இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான் சென்னை வந்த பின்னர் மிக  அரிதாகவே இவற்றுக்கு எதிரான ஊடகப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஊடகங்களின் மீதான அவதூறு வழக்ககுகள் , குண்டுத்தாக்குதல்கள், தீ வைப்புக்களுக்கு எதிரான ஊடகக் கூட்டியக்கங்களின் செயற்பாடுகள் மிகச் சொற்பமே.
இலங்கை அளவுக்கு இங்கு ஊடகங்களின் மீது அழுத்தம் இல்லையென்றாலும் . பல ஊடகங்கள் சுய தணிக்கையுடன் செய்திகளை வெளியிடுமளவுக்கு அழுத்தங்கள் இருப்பது கண்கூடு. மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் உயிரோடு எரிகப்பட்டவர்கள் குறித்த  எந்த நினைவேந்தல்களும் இல்லை. அப்போதைய ஆளும் கட்சியான திமுகவுக்கு நெருக்கமானவர்களே இதனைச் செய்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகைகுள் நுழைந்து  துப்பாகிச் சூடு நடத்தியவர்களுக்கு எடிற்றோரியல் எது விளம்பரப் பிரிவு எதுவெனத் தெரியவில்லை . விளம்பரப் பிரிவில் இருந்தவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அது போலவே மதுரையிலும் நிகழ்ந்தது. இங்கு எரித்தே விட்டார்கள்.

ஒரு முறை சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் நான் தயாரித்த  தராகி ஆவணப் படம் திரையிடப் பட்டது. இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் குறித்த ஆவணப்படம் அது.  தராக்கி சிவராம் அவர்களின் கொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது . உலக ஊடக தினமான மே 3ஆம் தேதி அந்த படத்தை திரையிட்டு விவாதம் நடத்துவதாக திட்டம். ஆனால் வந்தவர்களோ மிகக் குறைவு . படத்தின் கிளிப்பிங் எடுத்துக் கொண்டு  தொலைக்காட்சி செய்தியாளர்கள் கிளம்பிச் சென்று விட்டனர். வெறும் 7 பேர் மட்டுமே படம் முடிந்தவுடன் கலந்துரையாடலுக்காக இருந்தனர். அதில் ஒரு ஆங்கிலப் பத்திரிகைச் செய்தியாளர் மட்டுமே பல கேள்விகள் கேட்டார்.

பெரும்பாலும் ஒரு பைட், ஒரு சிறிய கிளிப்பிங்க் எடுத்துவிட்டு அடுத்த அசைமன்றுக்காக ஓட வேண்டிய பாஸ்ட் பூட் ஊடகக்காரர்கள் பெருகிவிட்டார்கள்.    இந்த அவசரத்தில் பரபரப்பாக ஏதாவது ஒன்றைக் கேட்டுவிட்டுகிறார்கள் இதற்க்கான முன் யோசனை கூட அவர்களிடம் இருப்பதில்லை. காலையில் தினச் செய்திப் பத்திரிகைகள் படிப்பதற்க்கு கூட பலருக்கு நேரம் இருப்பதில்லை. எழுத்து ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு  கிடைக்கும் குறைந்தபட்ச அவகாசம் கூட காட்சி ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு கிடைப்பதில்லை. மிக வேகமாக கிடைக்கும் புகழ் காரணமாக உருவாகும் பிம்பம் மற்றும் சமூக வலைத்தளப் போலிகளின் கவர்ச்சி போன்றவற்றால் இளம் ஊடக்காரர்களின் தேடலும் குறைந்து சுருங்கியுள்ளது.

வேகமாகச் செய்தி தருவது ஒன்றுதான் முதன்மைக் குறிக்கோளாக இருக்கிறது. வேகமாக தருவது ஒன்றும் தவறில்லை. ஆனால் செய்தியின் உறுதித் தன்மையும் உண்மைத் தன்மையும் மீளுறுதிப் படுத்துவதற்க்கான அவகாசம் கூடக் கிடைப்பதில்லை. இதில் தொலைக்காட்சிகள் செய்திககளையும் கருத்துக்களையும் சேர்த்தே சொல்ல ஆரம்பித்திருக்கிறாரகள். அண்மையில் இந்தியாவின் நிதி மற்றும் ஊடகங்களுக்கு பொறுப்பான அமைச்சர் அருண் ஜெட்லி சொல்லியிருக்கும் கருத்தும் கவனிக்கப்பட வேண்டியது. கருத்துக்கும் செய்திக்கும் இடையிலான மெல்லியகோடு இப்போது ஊடகங்களில் தெரிவதேயில்லை. முன்னர் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் கருத்தாகவும் மற்றயவை செய்தியாகவும் இருக்கும். ஆனால் இப்போது தொலைக்காட்சி விவாதங்களில் இரண்டும் குழம்பிக் கிடக்கிறது என்று சொல்கிறார்.

பல பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கம் என்ற ஒன்றையே பலகாலம் எழுதாமல் இருந்தது பின்னர் கட்டாயம் ஆசிரியர் தலையங்கம் எழுத வேண்டும் என்பதன் பின்னரே எழுத ஆரம்பித்தன எனபது வேறு கதை. நாங்கள் பத்திரிகைக்கு சேர்ந்த போது எங்கள் ஆசிரியர் சொல்வார் கண்டிப்பாக தினமும் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் படிக்க வேண்டுமென்று. காட்டுகத்தலான விவாதங்கள் பார்ப்பதையே சமூகத்தின் ஒருபகுதியினர், செய்தி பார்ப்பதாகக் கருத ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்த விவாதப் பாணியில் உச்ச ஸ்தாயி  செய்தி கூறல்களை தொலைக்காட்சி செய்தியாளர்கள் சிலர் ஆரம்பித்துள்ளனர்.

இன்னொரு விடையம் ஊடகவியல் ஒழுக்கக் கோவை என்பது. நான் ஐஎப்ஜே எனப்படும் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்துடன் இணைந்து கொழும்பில் பணியாற்றிய போது, ஊடகக்கரர்களுக்கு கருதரங்குகளை ஏற்பாடு செய்திருந்தோம். ஊடக ஒழுக்கவியல் குறித்த கருத்தரங்கம். அதில்  சகல ஊடகவியலாளர்களும் எப்போதும் வைத்திருக்கும் வகையில் ஊடக ஒழுக்க கோவை அச்சிட்டு வழங்கப்பட்டது. அது உங்கள் அடையாள அட்டைக்கு ஒப்பானது. அரசியல் ஒழுக்கம் ,நீதித்துறைக்கான ஒழுக்கம் என்பதைப் போல ஊடகவியலுக்கும் ஒரு ஒழுக்கம் உண்டு என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.  இந்த ஒழுக்கத்தில் சமூக பொறுப்பு என்பது தங்கியுள்ளது.

எனக்கு தெரிந்து , இங்கு தமிழகத்தில் சமூகப் பொறுப்பும் அறிவும் நிறைந்த ஊடக அறிவு கொண்ட பத்திரிகையாளர்கள் ஊடகங்களை விட்டு வெளியேறியும் ஓதுங்கியும் இருக்கிறார்கள். சிலர் ஊடகங்களுக்குள் இருந்து கொண்டே தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு கடப்பாடு இருகிறது. பல ஊடக  ஜாம்பவான்களைக் கொண்ட, கொண்டிருந்த இந்த தேசத்தில் செழுமையான வலுவான ஊடக இயக்கத்தின் தேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும், இல்லையெனில்  இப்போது ஒருவர் துப்பியதை வரவேற்ற அத்தனை பேரும் நம் மீது துப்ப ஆரம்பிப்பார்கள்.

என்னுடைய ஆவணப்படம் ஒன்று குறித்து மலையாள மாத்துரு பூமி பத்திரிகையில் பரபரப்பான பொய்ச் செய்தி ஒன்று முதல் பக்கத்தில் வந்தது.  நான் விடுதலைப் புலி என்றும் . எனது படம் பிரச்சரப் படம் என்றும் , அதன் மூலம் கேரளாவில் உள்ள தலைமறைவு சக்திகளுடன் இணைந்து  இயக்கத்தை மீளுருவாக்க முனைவதாகவும் அந்த செய்தி உளவுத்துறையை மேற்கோள்காட்டி வெளியிடப் பட்டிருந்தது.  இந்த செய்தி வந்த மறுநாள் கேராளவின் மூத்த ஊடகவியலாளர்கள் எழுத்தாளர் பால் சக்கரியா உள்ளிட்ட எழுத்தாளர்கள் ஊடகாரர் ராமகிருஸ்னன் போன்றவர்கள் ,அங்கு எனது படத்தினைத் திரையிட்ட சமூக அமைப்புகளுடன் இணந்து திருவானந்தபுரம் ஊடக மன்றத்தில் போராட்டம் நடத்தினர். எனது படமும் திரையிடப் பட்டது. ஏற்கனவே மாத்துரு பூமிவார இதழில் வந்த எனது பேட்டியும் பிரதியெடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்வு அனைத்திந்திய  ஆங்கில தொலைக்கட்சி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.  தி இந்து போன்ற பத்திரிகைகள் கேராளவில் புலிகள் ஊடுருவல் எண்று பின்னர் சிறிய செய்தி வெளீயிட்டது அதை மேற்கோள்கட்டி சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் இது நடந்து ஓராண்டுக்குப் பின்னர் அந்த முல்லைத்தீவு சாகா படத்திற்க்கு கேரள முலமைச்சர் விருது கொடுத்ததும் வேறு கதை. ஆனால் இவ்வாறான தவறான செய்திகளுக்கு எதிராக ஊடகவியலளர்களே திரளக் கூடிய நிலமை  இங்கு உள்ளதா எனபது என் கேள்வி.

சனநாயகத்தின் தூண்கள் எதிலுமே எதேச்சதிகாரம் என்பது இருக்கவே கூடாது. படிப்படியாக மொத்த சனநாயகமும் பெரும் முதலாளிகள் கையில் முழுமையாகாச் சென்று கொண்டிருக்கும் சூழலில் குறைந்த பட்சம் ஊடகவியலாளர்களாவது ஊடகம் எனபது பிழைப்புக்கும் புகழுக்குமானது மட்டும் அல்ல என்பதை வெளிப்படுத்த வேண்டும். இது குறித்து உரையாடுவதற்க்கு உதவியிருக்கிறார் தமிழகச் சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர்.