Friday, September 19, 2008

ஈழச் சினிமாவும் சீலம்பாய்களும்...

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்ததாக என் நினைவில் நிக்கும் ஒரு அற்புதமான படம் 'உறங்காத கண்மணிகள்' 90களில் யாழ்ப்பாணத்தில் இருந்த பலரும் இந்த படத்தைப் பாத்திருப்பார்கள். ஒரு வேவு அணியின் வாழ்வியலை அற்புதமாகப் பதிவு செய்திருக்கும். அந்தபடம் பெரும் பாலும் ஒரு வி.எச்.எஸ் கமராவில் படமாக்கப்பட்டிருக்காலாம்.

உலகத்தரம் உயர்ந்த தரம் என்ற எல்லாத்தரங்களையும் வார்த்தைகளையும் வியாபங்களையும் தாண்டிய அற்புதமான படமாகவே அது எனக்கு தோன்றூகிறது. ஆனால் அந்த வளர்ச்சி 15 வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழக சினிமா நடிகரையும், நடிகையையும் ,இயக்குனரையும் தங்கியிருக்கும் அளவுக்கு நமது ரசிக பெரும் உள்ளங்களால் உருவாக்கம் பெற்று விட்டதோ என்ற ஐயம் உருவாகிறது.

இந்த மாயைக்கு காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? அது இந்திய சினிமாவில் மோகித்திருத்தல் என்பதுதான். உலகின் பல் மொழிப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்ற புலம்பெயர்ஈழத்தமிழனின் சினிமா என்பது அவனுடைய திரை அடையாளம் என்பது தமிழ் சினிமாதனே...எங்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்க, நமதுகலையை (!?)அறிய நாங்கள் சிபாரிசு செய்வதும் தமிழ்நாட்டு சினிமாதானே

சரி இப்ப ஏன் இதெல்லாம் எண்டுறிங்களோ? அண்மையில் சில புலம் பெயர்வாழ் தமிழர்கள் ஒரு சினிமாவை எடுக்கும் தகவலை தமிழகத்தில் வைத்து வெளியிட்டார்கள். அவர்கள் எடுத்த படம் தமிழக சினிமாவின் பாதிப்பில் இருப்பாதாக அவர்களின் பேச்சே ஒத்துக் கொள்ளுகிறது. ஆனால் அவர்கள் சொன்ன ஒரு விடையம் ஆழமாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

நாம் தமிழகத்தைத் தாண்டியும் தமிழ் சினிமாவை உருவாக்க வேண்டும். சிங்கப்பூரில் ,மலேசியாவில், கனடாவில், ஐரோப்பாவில் தமிழ்ப்படங்கள் தயாரிக்க முடிவதில்லை. அல்லது ஒரு நேர்த்தியான திரைபடக்குழுவும் இல்லையென்பது அவலம் என்றுதான் சொல்ல முடியும். அந்தந்த நாடுகளில் எல்லாம் திரைப்பட இயக்குனர்கள் இருகிறார்கள் திரைப்படத்துறையிருக்கிறது என்பதைப் பற்ற்யெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. அங்கு எத்தனை அற்புதமான சினிமா வருகிறது என்பதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.அத்தகைய நல்ல படங்களை இயக்குபவர்களோடு இணைந்து அந்த வளங்களை வைத்துக் கொண்டு தமிழ் படத்தை உருவாக்க எம்மால் முடியாதிருக்கிறது. அந்த நாடுகளில் இருந்து அந்த படங்களை முன்னுதாரணமாகக் கொண்டே தமிழ் படங்கள் வர வேண்டும்.

ஏனெனில் எமது சினிமா ரசனையும், லயிப்பும் தமிழ் சினிமாவிலேயே இருகிறது.
தமிழ் சினிமா மாதிரி எங்களால் படம் எடுக்க முடியவில்லை. அல்லது எங்கடையாக்களும் காதல் கதைதான் எடுகிறாங்கள். எங்கட சினிமா தனித்துவமா இருக்க வேணூம் எண்டு இன்றைக்கு வாய்கிழிய கத்தும் ஆட்களில் எத்தனை பேர் அதற்கான உங்கள் பங்களிப்பைச் செய்திருகிறீர்கள்? விசய், அசித் செய்யும் சாகசங்களை விசிலடித்துப் பார்க்கும் உங்களால் அதையே நம்மாட்கள் செய்தால் காமடியாகத் தெரிகிறது. நாங்கள் இவையளும் விசய் அசித் செய்யுற மாதிரி இல்லாமல் வித்தியாசமாக தமிழ் சினிமா எடுக வேணூம் எண்டு கதையளக்கிறீங்கள்.
அவர்கள் செய்யும் இந்த அபந்த முயற்சிகளை நானும் ஆதரிக்க வில்லை. ஆனால் அந்த அபத்த முயற்சிகள் என்பதே எமது ஒட்டுமொத்த தமிழ் சினிமா லயிப்பின் வெளிப்படுதானே.பலருக்கும் குறும்படம் என்பதே தெரியவில்லை. குறும்படம் எண்டால் முழுநீளச் சினிமாப் படத்தின் ஒரு பகுதியை சின்னதாய் எடுபதாக நினைக்கிறார்கள். நாவலுக்கும் சிறுகதைக்குமான இடை வெளியிது. சிறுகதை என்பது நாவல் எழுதுவதற்க்கான பயிற்சி கிடையாது.அது ஒரு தனி வடிவம். அது ஒரு நாவலின் சிறு சிறு வடிவமும் கிடையாது. அதைப் போலத்தான் குறும்படமும். நம்மாளு தமிழ் சினிமாவின் சில காட்சிகள் மாதிரி காட்சிகளை எடுத்து விட்டு குறும்படம் என்கிறான்

புலம்பெயர் நாடுகளில் இப்படி நமது படமெடுக்கும் பெரும்பாலானவர்களுக்கு சினிமா என்பது ஒரு மொழியென்பதோ அதனை உளவாங்குவது என்பதற்க்கு படிக்க வேண்டும் , நிறைய சினிமாபார்க்கவேண்டும், சினிமா என்கிற சாதனத்தினைக் கற்றுக் கொள்ள வேண்டும் எண்டோ தெரிவதில்லை.. அவர்கள் தமிழ்சினிமாவைப் பார்த்தும் அதன் கிசுகிசுக்களை இணையத்தில் வாசித்தும் சினிமா என்பது இவ்வளவுதான் என்ற புரிதலுக்கு(!) வருகிறார்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் மணிரத்தினத்தில் இருந்து நல்ல சினிமாவைத்தந்த மகத்தான கலைஞன் பாலுமகேந்திர வரை தமிழ் சினிமாவை பார்த்து தமிழ் சினிமா எடுக்கவில்லை. உலக சினிமாபார்கிறார்கள்.எங்களையும் பார்க்க சொல்கிறார்கள் அதைக் கற்றுகொள்ள பயிற்சி தருகிறார்கள்.ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரியும் ஒவ்வொரு உதவி இயக்குனரும் இதை நன்கறிவார்.ஆனால் அந்த உலக சினிமா உற்பத்தியாகும் இடங்களில் இருந்து கொண்டு அங்கே எதையும் கற்றூக் கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு ஓடி வருகிறோம் தமிழ் சினிமா பார்க்க.

சும்மா ....பேசிக்கொண்டிருக்காதைங்கையா..
புலம் பெயர் நாடுகளில் இவ்வாறு உருவாகும் எத்தகைய ஒரு சினிமா முயற்சியும் நாம் தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் சினிமாவை உருவாக்குவதற்க்கு துணை போகும். காதல் படம் எடுக்காதை என்றோ, டிஸ்யூம் டிஸ்யூம் படம் எடுக்காதையெண்டோ சொல்லி அந்த முயற்சியையும் தடுத்து விட்டால் அங்கு பின்னால் அந்த வழியே வரக்கூடிய ஒரு நல்ல சினிமாவுக்கான பாதையையும் சேர்த்தே அடைத்து விடுகீறீர்கள்.

இந்தியாவில் சினிமா வந்த போது பக்தி சினிமாதான் எடுத்தார்கள்..காலப்போக்கில் சுதந்திர உணர்வூட்டும் சினிமாவை எடுக்க தலைப்பட்டர்கள். அதனை போல இப்படியான சில தமிழ் சினிமாவின் அரைகுறையான மறுபதிப்புக்கள் வருகிற போது எழும் விமர்சனங்களும் அதனால் உருவாகும் வேகமும் சந்தை வாய்ப்பும் நல்ல படங்களை எடுக்க உதவும்.

இன்றைக்கு ஒரு ஆவணப் படத்தை உருவாக்க நான் அனுபவித்த பொருளாதர வலிகள் எத்தனை என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்காது.இதயே தமிழகதில் உள்ள ஒரு இயக்குனரோ ,நடிகனோ ,ஒரு சாதரண கமெடியனோ செய்திருந்தால் அதற்காக நீங்கள் கொடுக்கும் விலை வேறு.

ஒருவர் என்னிடம் கேட்கிறார் தம்பி உம்மட படம் இங்க 10 டொலருக்கு விக்குது. ஏன் அவ்வளவு காசு போட்டனீர்? சினிமா படமே வீடியோ கடையில ஒரு டொலருக்கு கிடைக்குதே என்றார். இதுதான் உங்கள் எதிர்பார்ப்பாக இருந்தால் நல்ல படம் அல்லது ஈழத்தமிழர் சினிமா வராது? தமிழ் நாட்டு சினிமா உங்கள் படுகையறை வந்து உட்காருவதைப் போல ஈழத்தமிழர் சினிமா தமிழகத்தின் தெருகளுக்குகூட போவது கடினம். ஆக உங்கள் மோகம் கலைந்தால்தான் 1 டொலருக்கு என் படத்தைக் கேட்க மாட்டீர்கள். ஏனெனில் அப்படியொரு சினிமாவை ஒரு நல்ல இயக்குனர் மட்டும் உருவாக்கிவிட முடியாது. அதற்க்கு காசு கொடுத்துப் பார்க்கிற நல்ல சினிமா ரசிகர்களாக நாமிருக்க வேண்டும். அப்போதுதான் யாரவது தயாரிப்பார்கள்.


பாலு மகேந்திரா என்ற கலைஞன் தனது முதல் படத்தோடும் பெருமிதத் தோடும் தன் தாய் மண்ணுக்கு ஒடினான்....தமிழ்நாடு சினிமாக்காரர்களில் மோகித்திருந்தவர்களுக்கு அந்த ஈழக் கலைஞனை ஆரதிக்க தோன்றவில்லை அன்று... . இன்னொன்று தெரியுமா ஞானரதன் என்ற அற்புதமான இயக்குனர் வன்னியில் இருந்தார் அவருக்கு மேலும் வாய்ப்புக்கள் வழங்கப் பட்டிருந்தால் அவர் உலகின் நல்ல இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பார். சினிமாவின் பல நுணுகங்களையும் புதிய வளர்ச்சியையும் அவர் கற்றுக்கொள்ள காலம் இருக்கவில்லை. அந்த கலைஞன் மறைந்த போது அவனைப் பற்றிய ஆவணத்தை தொகுக்க இனையத்தில் தேடினேன் ,ஒன்று இரண்டு செய்தித் தளங்களில் செய்தியாக அவர் இறந்தது மட்டும் வந்தது. இதுவே தமிழ் நாட்டு ஒரு சின்ன நடிகன் இறந்திருந்தால்? அதைவிடுவம் ரசனிக்காந்துக்கு மூட்டு வலி எண்டால் உங்களின் புலம்பெயர் தமிழர் இணையத்தளங்கள் எத்தனை அந்த செய்தியை வெளியிடக் காத்திருகிறன?

இண்றைக்கு தமிழ் சினிமாவில் புரளும் கோடிகளில் எம்முடைய பணமும் புலம்பெயர் இழத்தமிழ் முதலீட்டாளர்களின் முதலீடும் எத்தனை கோடிகள் தெரியுமா? இவர்களில் யாரவது ஒரு ந்ல்ல படத்தை ஒரு நல்ல ஆவணத்தை தாயரிக்க வருவாரா? அதைப் பார்க்க நீங்கள் தயாரா?

இன்னமும் தமிழ் சினிமாகாரனையும் குலக்கல் நடிகைகளின் குண்டியாடாலயும் பார்க்க கலை நிகழ்ச்சி நடத்தும் நாம் நம்முடைய வாழ்வியலைச் சொல்லும் சிமாவை எப்போது கொடுக்கப் போகிரோம்.இது ஈழத்தமிழனுக்கான கேள்வி மட்டுமல்ல சிங்கபூர் மலேசியா என பரந்த தமிழனுக்கும்தான். சீனாக்காரன் மலேசியாவில் படம் எடுக்கிரான் அவனுக்கு சீன ம்லேசிய சினிமா இருக்கு ஆனால் நாம மட்டும் தமிழ் நாட்டை நம்புவோமாக. இதன் காரணமாக என்னைப் போன்றவர்களும் தமிழ் நாடில் படம் எடுக்க வேண்டியிருக்கும். நாமும் தமிழ்நாட்டு சினிமாக்காரராகவே இருப்போம்.

இந்தக்கட்டுரையை முற்றாகாமல் குறையாக விடுகிறேன்..ஏனெனில் இன்னும் எழுத இருக்கு.....அதில் நிறய தகவல்கலைத் தருகிறேன்.......

16 comments:

அப்பாவிக் கோவிந்து said...

உம்மட டிவிடியை ஒரு டொலருக்கு கேட்டதென்ற காரணத்தால இப்பிடி கோவப்படக்கூடாது.

சயந்தன் said...

அதனை உளவாங்குவது என்பதற்க்கு படிக்க வேண்டும் , நிறைய சினிமாபார்க்கவேண்டும், சினிமா என்கிற சாதனத்தினைக் கற்றுக் கொள்ள வேண்டும் எண்டோ தெரிவதில்லை..//

ஏன்.. ஆனந்தவிகடன் குமுதத்தில வாற எல்லா சினிமா செய்திகளையும் படிக்கிறம். மற்றது சன்னில கலைஞர்ல போடுற எல்லா சினிமாவையும் பார்க்கிறம்..

பிறகென்ன.. நாங்கள் படிக்கிறேல்ல.. பார்க்கிறேல்லையெண்டு பொய் சொல்கிறீர்.

இந்தியாவில் சினிமா வந்த போது பக்தி சினிமாதான் எடுத்தார்கள்..காலப்போக்கில் சுதந்திர உணர்வூட்டும் சினிமாவை எடுக்க தலைப்பட்டர்கள். அதனை போல இப்படியான சில தமிழ் சினிமாவின் அரைகுறையான மறுபதிப்புக்கள் வருகிற போது எழும் விமர்சனங்களும் அதனால் உருவாகும் வேகமும் சந்தை வாய்ப்பும் நல்ல படங்களை எடுக்க உதவும்.//

ஆண்டவா இன்னும் 75 வருடங்கள் ஒரு நல்ல ஈழ சினிமாவிற்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். (புலம்பெயர் நாடுகளில் 75 வருடங்களுக்கு பிறகு தமிழ்சினிமா தேவைப் படுமோ தெரியாது. ஒருவேளை தேவைப்பட்டால் அதற்கும் தமிழ்சினிமாதான் ஓரளவிற்கான காரணமாயிருந்திருக்கவும் கூடும்)

தமிழன்... said...

ஈழத்திரைப்படங்கள் அரங்கம் நிறைவதற்கு இன்னும் குறைந்தது 10 வருடமாவது தேவைப்படலாம்..

தமிழன்... said...

\
அல்லது ஒரு நேர்த்தியான திரைபடக்குழுவும் இல்லையென்பது அவலம் என்றுதான் சொல்ல முடியும்.
\

ம்ம்ம்...

நிமல்/NiMaL said...

இந்த நிலை சினிமாவிற்று மட்டுமானதல்ல. அனுபவரீதியாக இசைத்துறையில் இதை உணர்ந்திருக்கிறேன். இலங்கை பாடல் ஒன்றை கேட்டு நல்லா இருக்கு என சொல்பவர்களில் 10% பேர் கூட இறுவட்டை வாங்க முன்வருவதில்லை.

கலைப்படைப்புக்களுக்கு காசு கொடுக்க நாங்கள் பழகவில்லை போலும்.

//புலம்பெயர் நாடுகளில் இப்படி நமது படமெடுக்கும் பெரும்பாலானவர்களுக்கு சினிமா என்பது ஒரு மொழியென்பதோ அதனை உளவாங்குவது என்பதற்க்கு படிக்க வேண்டும் , நிறைய சினிமாபார்க்கவேண்டும், சினிமா என்கிற சாதனத்தினைக் கற்றுக் கொள்ள வேண்டும் எண்டோ தெரிவதில்லை..//

நம் பிற சினிமாக்களை பார்ப்பது அவற்றை உள்வாங்குவது என்பது அந்த சினிமா வடிவங்களை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ அவை மட்டுமே சரி அல்ல என்பதோ அல்ல. இதையும் பலரும் புரிந்து கொள்ள முயற்சிப்பதுமில்லை.

//ஆனால் அந்த உலக சினிமா உற்பத்தியாகும் இடங்களில் இருந்து கொண்டு அங்கே எதையும் கற்றூக் கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு ஓடி வருகிறோம் தமிழ் சினிமா பார்க்க.//

இலங்கையில் இருக்கும் நாமே எமது ஆர்வ(கோளாறு)த்தால் உலக சினிமாவை தேடி பார்த்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் அங்கிருப்பவர்கள் தமிழ்நாட்டுக்கு ஓடி வருவது நகைப்பிற்குரியதே.

நீங்கள் எமது வாழ்வியலின் வலியை மட்டுமே படைக்க வேண்டும் என்பதல்ல. காதலையும் சொல்லலாம். ஆனால் அதை ஏன் தமிழக சினிமாவின் கண்களுடு சொல்ல முயற்சிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

(ஈரானிய சினிமாவை போல) உலக தளத்தில் நமது திரைப்படங்களும் வருவதென்பது இப்போதைக்கு கனவு மட்டுமே.

சோமி said...
This post has been removed by the author.
சோமி said...

நன்றி நண்பர்களே, இது குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் உருவாகுவதின் ஊடாக ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் ....உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

King... said...

ஆரம்பத்தில் இப்படியான படங்கள் என்றாலும் எடுக்கட்டுமே பிறகு பார்க்கலாம் எமது கலாச்சாரங்களை பதிகிற விசயத்தை...இந்தப்படத்துக்கு கொடுக்கிற குறைந்த பட்ச வரவேற்பு தானும் ஒரு முறையான திரைப்படக்குழு உருவாகுவதற்கு வழிவகுக்கும் என்பது என் எண்ணம்

சோமி said...

நாம் ஒரு வலமான சினிமாவை உருவாக்குவதற்க்கு மக்களிடம் நல்ல படங்களைப் பார்க்கும் அறிவு வர வேண்டும் அதே நேரம் நல்ல சினிமாவை எடுப்பதற்குரிய இயக்குனர்கள் உருவாக வேண்டும்.

இண்டைக்கு நான் விசயை வைத்து ஒரு சினிமாவை பண்ணினால் அடுத்து என் ஈழத்தமிழ் உறவுகளிடம் இருந்து கிடைக்கும் ஆதரவே வேற....

வடிவேலு said...

ஈழத்தமிழர்ல விஜய் உருவாகக் கூடாதோ....

என்ன சயந்தன் நக்கலா..வரலாறு உங்களை மன்னிக்காது

mayu said...

Dear Somi,

My name is Mayu and living in Japan.
I'm really interested in buying "Burning memories"

Could you please let me know your mail address, then I can get further details directly.

Regards.
Mayu

சோமி said...

mayu,
thank you for your mail.
my mail ID: someeth13@gmail.com

www.burningmemories.org

நிமல்/NiMaL said...

//நாம் ஒரு வலமான சினிமாவை உருவாக்குவதற்க்கு மக்களிடம் நல்ல படங்களைப் பார்க்கும் அறிவு வர வேண்டும் அதே நேரம் நல்ல சினிமாவை எடுப்பதற்குரிய இயக்குனர்கள் உருவாக வேண்டும்.//

எனக்கு இது தொடர்பில் இரு கருத்துக்கள் உண்டு.

மக்களின் பரிதல் படைப்பாளியின் புரிதலுக்கு சமமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மக்களின் ரசனையை மாற்றும் கடமையும் படைப்பாளியினுடையதே என்று எண்ணுகிறேன்.

அதே போல் மக்களும் இத்தகைய மாற்றங்களை ஏற்கத்தக்க மனனிலைக்கு வர வேண்டும். என்ன என்று தெரியாமலே புறக்கணிக்கும் மனப்பாங்கும் மாறவேண்டும்.

மக்கள் நல்ல படங்களை வரவேற்கவேண்டும். ஆனாலும் அதற்கு தகுந்த படங்களை படைப்பாளிகள் தான் உருவாக்க வேண்டும்.

மலைநாடான் said...

சோமி!
நல்ல விவாதத்திற்குரிய கருத்துக்களை முன் வைத்திருக்கின்றீர்கள். ஆக்க பூர்வமான விவாதமாக தொடருங்கள். உங்கள் கருத்துக்கள் ஏற்புடையவைகளே. ஆனால் அவை புலம் பெயர் சூழலில் முரணாகும் அவலமும் உண்டு. நிற்க
இலங்கையில் தமிழகத்திரைப்படங்களுக்கான இறக்குமதி மட்டுப்பட்டிருந்த ஒரு காலத்தில் சிங்கள் சினிமாக்கலைஞர்களோடினைந்தும், தனித்தும் தமிழ்ப்படங்கள் வளர்ச்சிப் போக்குடன் வந்தன. அவை மக்களால் ரசிக்கவும் பட்டன. ஆனால் என்ன அவையும் தமிழகத்திரைப்படத்தின் பிரதிகளாகவே இருந்தன. ஆனால் அத்திரைப்படங்களில் உடனிருந்து உழைத்த சிங்களக் கலைஞர்கள் இன்று உலகத்தர சினிமாக்கலைஞர்களாகப் படைப்புக்களைத் தருகின்றார்கள். அதில் ஈடுபட்ட தமிழ்க்கலைஞர்கள் காணமற் போய்விட்டார்கள். ஆக தமிழகச் சினிமாவை அடியொற்றி எடுப்பதன் விழைவு வளர்வதாக இருக்குமென எண்ணமுடியவில்லை. மாறாக நீங்கள் சொல்லியிருக்கும் வகையில் வெளிநாட்டில் உள்ள சினிமாக் கலைஞர்களுடனான இணைமுயற்சிகள் நல்ல பயன் தரும்தான். அத்தகைய முயற்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் அவையும் இலகுவானவையல்ல. அதை மீறி முன்னெடுக்கும் முயற்சிகளை, தமிழ்சினிமா பழக்கப்படுத்தியிருக்கும் ரசனை வெற்றி கொள்ள வைப்பதில்லை.

Anonymous said...

//இண்டைக்கு நான் விசயை வைத்து ஒரு சினிமாவை பண்ணினால் அடுத்து என் ஈழத்தமிழ் உறவுகளிடம் இருந்து கிடைக்கும் ஆதரவே வேற....//

ஆம் அவர்களது எதிர்பார்ப்பு இந்திய பாணியிலான ஈழத்திரைப்படமல்ல. ஈழத்தமிழர்கள் தமிழகத் திரைப்படங்களைப் பார்த்தாலும், எல்லாவற்றையுமே விரும்பி பார்க்கிறார்கள் என்பதல்ல. ஒன்றிரண்டைத் தவிர பல படங்களை பார்த்துவிட்டு வெளியேறும்... அகதி தமிழனும் தமிழகத் தமிழனை நினைத்து கவலைக்கொள்கின்றான். காரணம் தமிழக வாழ்வியல் யதார்த்தங்கள்.

குறிப்பாக தமிழகத்தாரின் ஆங்கிலம் கலந்து பேசும் மோகம் போன்றன, ஈழத்தவர்களால் ஒரு வித இலிவாகவே பார்க்கப்படுகின்றது.

இயக்குநராக எத்தனிக்கும் சோமிக்கு சிறந்த இயக்குனராவதற்கான தகுதிப்பாடுகள் இருக்கின்றன.

வாழ்த்துக்கள்.

அருண் said...

//உம்மட டிவிடியை ஒரு டொலருக்கு கேட்டதென்ற காரணத்தால இப்பிடி கோவப்படக்கூடாது.//

உங்கள் பார்வையால் அது வெறும் டிவிடியாகத் தெரியலாம். வெறும் குறும்படமாகத் தெரியலாம். பத்தோடு பதினொன்றாக திரைப்படங்களோடு ஒப்பிட்டும் பார்க்கலாம்.

ஆனால் எந்த ஒரு சர்வதேசத் திரைப்படத்திற்கும் இல்லாத வரலாற்றில் மறையா வரலாற்று ஆவணம் இது என்பதை மறவாதீர்கள்.